‘டெவில்’லியர்ஸ் மஜிக்; வில்லியம்சன் ‘சப்லைம்’: ஆர்சிபி வெற்றி

பெங்களூர் போன்ற மட்டைப் பிட்ச்களில் நமக்குக் கிடைப்பதெல்லாம் சில கண்கொள்ளாக் காட்சி பேட்டிங்குகள்தான், உலகின் சிறந்த பேட்ஸ்மென்களில் நேற்று டிவில்லியர்ஸ், வில்லியம்சன் பேட்டிங் கோபுரங்களைக் காட்ட விராட் கோலி சோபிக்கவில்லை. மொயின் அலி, பாண்டேவும் அசத்தினர். இறுதியில் ஆர்சிபி 14 ரன்களில் வெற்றி பெற்றது.

பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்டது ஆர்சிபி. சன் ரைசர்ஸின் பலமே குறைந்த இலக்கை வைத்துக் கொண்டு எதிரணியினரை மிரட்டுவதுதான், அந்த அனுகூலத்தைத் துறக்கும் விதமாக பெங்களூரை முதலில் பேட் செய்ய அழைத்தார் கேன் வில்லியம்சன். டிவில்லியர்ஸ், மொயின் அலி, கடைசியில் கொலின் டி கிராண்ட்ஹோம் மைதானம் நெடுக சன் ரைசர்ஸ் வீரர்களை ஓடவிட்டு 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தனர்.

தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் அணியில் கேன் வில்லியம்சன் தன் சப்லைம் பேட்டிங்கில் டிவில்லியர்ஸை மேட்ச் செய்து 42 பந்துகளில் 81 ரன்கள் என்று விளாச, மணீஷ் பாண்டேயும் சில திகைக்கவைக்கும் புதிதான ஷொட்களில் 38 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார் ஆனாலும் மொகமது சிராஜ் கடைசி ஓவரில் 19 ரன்களை அருமையாக வீசித் தடுத்தார். ஆர்சிபி 12 புள்ளிகள் பெற்றுவிட்டது.

கேன் வில்லியம்சன் இந்த ஐபிஎல் தொடரில் தன் 8வது அரைசதத்தை எடுத்தார்.

கோலி ஏமாற்றம்

முதல் பந்திலேயே சந்தீப் சர்மா பந்தில் பார்த்திவ் படேலுக்கு ஹூடா கவரில் கட்சை விட்டார். ஆனால் அதே ஓவரில் பார்த்திவ் படேல் லெக் திசையில் பெரிய ஷொட்டை ஆடினார் ஆனால் லீடிங் எட்ஜ் எடுத்து தேர்ட்மேனில் கொடியேற்ற வேண்டியதாயிற்று அங்கு கவுல் கட்ச் எடுத்தார் பார்த்திவ் 1 ரன்னில் வெளியேறினார்.

விராட் கோலி சந்தீப் சர்மாவை மிக அழகாக நேராக ஒரு பவுண்டரியும், ரஷீத் கான் வீசிய லெந்த்தை சட்டென புரிந்து கொண்டு பின்னால் சென்று மிட்விக்கெட்டில் பவுண்டரியும் விளாசினார், ஆனால் ரஷீத் கானின் இதே ஓவரில் அடுத்த பந்தில் அதிர்ச்சிகரமாக போல்ட்டு ஆனார். பந்து கூக்ளியானது ஓஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே பிட்ச் ஆனது கோலி அதனை லெக் திசையில் விளாச நினைத்தார், பந்து சிக்கவில்லை ஓஃப் அண்ட் மிடில் ஸ்டம்பை பந்து தொந்தரவு செய்தது. 12 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.

டிவில்லியர்ஸ் மஜிக், மொயின் அலி விளாசல்; பேசில் தம்பி(யை) 17 பந்துகளில் அரைசதம்

டிவில்லியர்ஸ் கிரீசில் நகர்ந்து நகர்ந்து பந்துவீச்சைக் கொல்வது பவுலர்களுக்கு ஒரு துர்சொப்பனம்தான். லெக் திசையில் ஒதுங்கிக் கொண்டு பேக்வர்ட் பொயிண்டில் பவுண்டரி அடித்துத் தொடங்கினார். ஷாகிப் அல் ஹசனை மாஸ்டர்லியாக இரண்டு ஸ்லாக் ஸ்வீப்கள், சித்தார்த் கவுல் பந்தில் இரண்டு அடுத்தடுத்த அதிரடி பவுண்டரிகள் என்று வில்லியம்சனின் களவியூகத்துடன் போக்குக் காட்டி விளையாடினார். முன்னால் கொண்டு வந்தால் பின்னலும் பின்னால் கொண்டு சென்றால் அதற்கும் பின்னாலும் அடித்து பவுலர்களை நெட் பவுலர்களாக்கினார் 32 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

மொயின் அலி, பேசில் தம்பியை ஒரு ஓவரில் 2 சிக்சர்கள் விளாச, டிவில்லியர்ஸுக்கு ஷோர்ட் பிட்ச் வீசும் தைரியம் எப்படி தம்பிக்கு வந்தது என்று தெரியவில்லை, தம்பி வெட்டோத்தி சுந்தரத்தின் பந்துகள் பவுண்டரியில் தெறித்தன. அரைசதம் அடித்த பிறகு பேசில் தம்பி வீசிய மிடில் அண்ட் லெக் புல்டாஸை டிவில்லியர்ஸ் ‘சீ போ’ என்று கொசு விரட்டியதில் 105-110மீ சிக்ஸ் ஆனது. மைதானத்தின் மேற்கூரையைக் கடந்து வெளியே சென்றது. இதே பேசில் தம்பி பந்து மீண்டும் பவுண்டரி பீல்டர்களைத் தொந்தரவு செய்ய மொயின் அலி 25 பந்துகளில் அரைசதம் கண்டார். 2 ஓவர்களில் 37 ரன்கள் கொடுத்த தம்பி, கொலின் டிகிராண்ட்டுக்கு நேர் பந்து ஒன்றை வீச லோங் ஓஃப் மேல் சிக்ஸ் அடிக்க 2.5 ஓவர்களில் தம்பி அரைசதம் அடித்தார். பிறகு 4 ஓவர்களில் 70 என்று முடிந்தார். ஐபிஎல் கிரிக்கெட்டின் ஆக மோசமான பவுலிங்.

ஆர்சிபி 14 ஒவர்களில் 144/2 என்று அபாரமாகத் திகழ்ந்தது. அப்போதுதான் அற்புதன் ரஷீத் கான், டிவில்லியர்ஸையும், மொயின் அலியையும் ஒரே ஓவரில் வீழ்த்தினார், டிவில்லியர்ஸ் 39 பந்துகளில் 12 பவுண்டரி ஒரு சிக்சருடன் 69 எடுத்து ஷிகர் தவனின் துல்லிய பவுண்டரி கட்சில் வெளியேறினார். மொயின் அலி இதே ஓவரில் 34 பந்துகளில் 2 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 65 ரன்கள் எடுத்து கோஸ்வாமியிடம் கட்ச் ஆகி வெளியேறினார். 15 ஓவர்கள் முடிவில் 149/4. அதன் பிறகு

கொலின் டி கிராண்ட்ஹோம் 17 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 40 ரன்களையும், சர்பராஸ் கான் பந்துகளில் 22 ரன்களையும் எடுக்க கடைசி 5 ஓவர்களில் 69 ரன்கள், 20 ஒவர்களில் 218/6 என்று பெங்களூரு முடிந்தது. ’

சப்லைம் வில்லியம்சன், பொங்கி எழுந்த பாண்டே

அலெக்ஸ் ஹேல்ஸ் 24 பந்துகளில் 37 ரன்கள் என்ற அதிரடித் தொடக்கம் கொடுத்தார், ஆனால் ஏனோ உமேஷ் யாதவ் பந்தில் அவருக்கு சவுதி மிக அருமையாக டீப் ஸ்கொயர் லெக்கில் பிடித்த கட்சை டிவி நடுவர் இல்லை என்றார். அதன் பிறகு மிட் ஆனில் விராட் கோலி கடினமான இன்னொரு கட்ச் வாய்ப்பை விட்டார். கடைசியில் டிவில்லியர்ஸ் டீப்பில் அற்புதமாக ஒரு கட்சைப் பிடித்து ஹேல்ஸை வெளியேற்றினார். மேலெழும்பி ஒரு கையில் பிடித்த திகைப்புக் கட்ச் ஆகும் அது. ஷிகர் தவன் 15 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து சாஹல் பந்தில் அவரிடமே கட்ச் ஆனார்.

வில்லியம்சனுக்கு உண்மையில் கோலியினால் பீல்ட் செட் செய்ய முடியவில்லை, ஹேல்ஸ் ஆட்டமிழந்தவுடன், வில்லியம்சனுக்கு களவியூகம் பற்றிய நல்ல நினைவாற்றல், அதனால் 5 பவுண்டரிகள் ஒரு சிக்ஸை சடுதியில் அடித்தார். 28 பந்துகளில் அரைசதம் கடந்தார். பாண்டே அதுவரை பந்துக்கு ஒரு ரன் என்று கூட எடுக்காமல் இருந்தவர் திடீரென பொங்கி எழுந்தார். கொலினை 2 பவுண்டரி ஒரு சிக்ஸ் அடித்து 16 பந்துகளில் 21 என்று ஆக்ரோஷம் காட்டினார். சாஹலை ஒரு பவுண்டரி அடித்ததன் மூலம் 4 ஒவர்களில் 55 தேவை என்று கொஞ்சம் ஆர்சிபிக்கு அடிவயிறு கலங்கியது.

ஆனால் டிம் சவுதி மிக அருமையாக ஒரு ஓவரை வைட் யோர்க்கர்களாக வீசி கட்டுப்படுத்த 18 பந்துகளில் 49 என்று சமன்பாடு மாறியது. வில்லியம்சனுக்குக் கடைசியில் அதிகம் ஸ்ட்ரைக் கிடைக்கவில்லை. 42 பந்துகளில் 81 ரன்கள் என்று அவர் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். மணீஷ் பாண்டே 38 பந்துகளில் 62 ரன்களை மிகவும் சின்சியராக ஆடி எடுத்தாலும் கடைசியில் நேராக ஆடியிருந்தாலே பவுண்டரி வந்திருக்கும்  பந்துகளையெல்லாம் தேவையில்லாமல் ரிவர்ஸ் ஷாட் ஆடப்போய் பீட்டன் ஆகி டாட்பால்களைக் கொடுத்தார், இதனால் கடைசி ஓவரில் 19 தேவை என்ற நிலை வில்லியம்சன் ஆட்டமிழந்த பிறகு முடியாமல் போக 204 ரன்களில் முடிந்தது. ஆட்ட நாயகனாக டிவில்லியர்ஸ் தேர்வு.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here