அவள் நினைத்திருக்கமாட்டாள்

பீஷ்மர்

 

அவள் நினைத்திருக்கமாட்டாள்

தனது ஒரு புகைப்படம்

போரின் சாட்சியாக

குற்றங்களின் சாட்சியாக

அதிகாரதிமிரின் சாட்சியாக

கொலைகளின் மூலம் அனைத்தையும் முடித்துவிட நினைத்தவர்களின்

குரூர மனங்களை அம்பலப்படுத்தும் சாட்சியாக மாறும் என.

 

அவள் நினைத்திருக்கமாட்டாள்

தண்ணீருக்குள் தான் இறக்கப்படுவேன் என

கைகள் கட்டப்பட்டு இழுத்து வரப்படுவேன் என

தனது கண்ணீருக்கும் வலிமையற்று போகும் என

கட்டப்பட்ட கைகளிற்குள்ளேயே பிரார்த்தனைகள் முடிக்கப்படும் என.

 

அவள் நினைத்திருக்கமாட்டாள்

போரில் சிக்கிய கைதிக்கு

குரலோ

ஆடையோ

பிரார்த்தனையோ

உதவியோ

கருணையோ கிடையாதென.

 

அவள் நினைத்திருக்கமாட்டாள்

ஒருவன் தன்னை புகைப்படம் எடுப்பான் என

அந்த புகைப்படமே போரின் சாட்சியாக என்றுமிருக்குமென

சித்திரகுப்தனின் பேரேட்டுதாள்களையே அது நடுங்க வைக்குமென

 

அவள் நினைத்திருக்கமாட்டாள்

தனது புகைப்படத்தால் ஒருவன் பணம் சம்பாதிப்பான் என

தனது மரணத்தை ஒருவன் திரைப்படமாக்கி சம்பாதிப்பான் என

தனது மரணத்தை ஒருவன் அரசியல் இலாபமாக்குவான் என

 

அவள் நினைத்தேயிருக்கமாட்டாள்

வீரமரணமடைந்த கணவனிற்காக காத்திருந்ததற்கு

காலம் இப்படியொரு கதையெழுதுமென.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here