பாகி 2

சல்மான்கானின் பழைய பாகி படத்தின் தலைப்பில், ஜாக்கி ஷெராப் மகன் டைகர் ஷெராப் நடித்தார். அந்த பாகிக்கும், புது பாகிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தெலுங்கு வர்ஷம் படத்தின் ரீமேக்தான் புது பாகி. இப்போது பாகி 2 வெளியாகி இருக்கிறது. இது ஷனம் தெலுங்குப் பட ரீமேக். இதன் தமிழ்ப் பதிப்பு, சிபிராஜ் நடிப்பில் சத்யா பெயரில் வெளியானது. ராணுவ வீரர் டைகர் ஷெராபுக்கு, திஷா பதானி பிரச்னையில் இருப்பது தெரிகிறது. திஷா வேறு யாருமல்ல, டைகரின் முன்னாள் காதலி. அந்தக் காதல் பிளாஷ்பேக்கில் வருகிறது.

இப்போது திஷா கோவாவில் இருக்கிறார். அவரது மகள் காணவில்லை. கடத்தப்பட்டதாகச் சொல்கிறார். மாஜி காதலியின் மகளைக் கண்டுபிடிக்க, தனது மிஷனை ஆரம்பிக்கிறார் டைகர். அவர் சந்திக்கும் பிரச்னைகளே படம். தெலுங்கு ஷனம் பட கதைதான் என்றாலும், திரைக்கதையில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் முக்கியமானது, ஆக்‌ஷன். ஒரிஜினல் படம், திரில் ஜானரில் உருவானது. இது டைகர் ஷெராப் இமேஜுக்காக முழுநீள ஆக்‌ஷன் படமாக மாற்றப்பட்டுள்ளது. அதற்காக, ராணுவ வீரர் என்ற பின்னணி சேர்க்கப்பட்டுள்ளது.

இதனாலேயே படத்துடன் ரசிகர்களால் ஒன்றமுடியாமல் போகிறது. ஷனம் படம் திரில் ‘மூட்’ உடன் ஆரம்பித்து, அந்த ஹீட்டை பரப்பிக் கொண்டே செல்லும். எந்த இடத்திலும் சலிப்பு வராது. இதில் ஆக்‌ஷனும் தர வேண்டும், திரில் உணர்வும் ரசிகர்களுக்கு வர வேண்டும். அதோடு காதல் மற்றும் பாடல்களையும் கலந்து மசாலா படமாகக் கொடுக்க வேண்டும் என்று டைரக்டர் அஹமத்கான் முயற்சி செய்திருக்கிறார். இதில் அவர் பாதி கிணறுதான் தாண்டியிருக்கிறார். திஷா குழந்தை மற்றும் படத்தைக்காப்பாற்றப் போராடியிருக்கிறார் டைகர் ஷெராப்.

அவரது சிக்ஸ்பேக் உடற்கட்டும், ஹாலிவுட் பாணியிலான ஸ்டன்ட்டும்தான் ஹைலட். இரண்டாம் பாதியில் அவரது ஆக்‌ஷன் காட்சிகள், அடிதடி பட ரசிகர்களைக் குதூகலிக்க வைக்கிறது. டோனியில் அறிமுகமான திஷா பதானிக்கு இதில் நடிக்கவும், ரொமான்சுக்கும் நிறைய வாய்ப்பு. கொடுத்த கேரக்டரில் இளசுகளை எப்படி வளைத்துப்போட முடியும் என்று தெரிந்து நடித்திருக்கிறார். படத்தில் ட்விஸ்ட் ஏற்படுத்தும் கேரக்டர்களில் ரன்தீப் ஹூடா, பிரதீக் பப்பர் நடித்து இருக்கிறார்கள். மனோஜ் பாஜ்பாயின் கேரக்டரும் முக்கியமானது. ஒரிஜினல் படம் பார்த்தவர்களுக்கு இந்தப் படம் பிடிக்காது. அதேநேரம் ஆக்‌ஷன் பிரியர்களுக்கு கண்டிப்பாக ஏமாற்றம் கொடுக்காது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here