என்ன செய்தார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்? 6

க.தர்மலிங்கம்

வடமாகாணசபை அமர்வுகளை கவனித்து வருபவர்கள், அது ஒரு சண்டைக்காரர்களின் கூடாரமென நினைப்பார்கள். உண்மை அதுவல்ல. அங்கு சாதுக்களும் உள்ளனர். அப்படியான ஒருவரே இந்த பகுதியில் இடம்பெற்ற மக்கள் பிரதிநிதி.

வடமாகாணசபையில் உள்ள பல அணிகளில், எதிலும் இல்லாமல்- எல்லாவற்றிலும் இருப்பதை போல தோன்றும் உறுப்பினர்கள் வெகு சிலரே. அவர்களில் ஒருவர் தமிழரசுக்கட்சியை சேர்ந்த கணபதிப்பிள்ளை தர்மலிங்கம்.

வடமராட்சியின் கரணவாயை சேர்ந்த தர்மலிங்கம் பாடசாலை அதிபராக இருந்து ஓய்வின் பின்னர் அரசியலிற்கு வந்தவர். 2013 வடமாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைய முடியாமல் போனவரிற்கு, 2015 இல் வேறொரு வடிவத்தில் வாய்ப்பு வந்தது.

யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு மாகாணசபை உறுப்பினராக இருந்த புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அவர் பாராளுமன்றத்திற்கு தேர்வானால், மாகாணசபையில் ஏற்படும் வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட வேண்டியவர் தர்மலிங்கம்.

2015 பாராளுமன்ற தேர்தலில் வடமராட்சியில் பலத்த போட்டியிருக்குமென எதிர்பார்த்ததால், உள்ளூரில் இருந்த தமிழரசுக்கட்சி பிரமுகர்களை தீவிரமான தேர்தல் பிரசாரத்தில் இறக்கினார்கள். ஆனால் தர்மலிங்கம் போட்டது வேறு கணக்கு. சித்தார்த்தனை பாராளுமன்றம் அனுப்பினால், மாகாணசபைக்கு செல்லலாமென்பதால், அவர் சித்தார்த்தனிற்கே அதிகமாக வேலை செய்தார். இந்த அதிருப்தி தமிழரசுக்கட்சி தலைமைக்கு இன்றும் இருக்கிறது.

வடமாகாணசபைக்குள் நுழைந்த பின்னர் எந்த சர்ச்சை, அணிகளிற்கும் சிக்கிக்கொள்ளாமல் இருக்கிறார். மாகாணசபைக்குள் இருப்பது தெரியாமல் இருக்கிறார். பெரும்பாலும் விவாதங்களில் கலந்துகொள்வதில்லை. இதனால் மாகாணசபைக்குள் உள்ள எல்லா அணிகளும் அவரை தமது ஆளாக நினைத்துக்கொள்கிறார்கள். தமிழரசுக்கட்சியில் இருந்துகொண்டு, சுமந்திரன் ஆளாக இருக்காமல் இருக்க முடியுமா?

இல்லை. அது தர்மலிங்கத்திற்கும் தெரியும். நிஜத்தில் அவர் சுமந்திரனின் ஆள். ஆனால், உள்ளூரில் சுமந்திரனின் மேல் விமர்சனம் வைத்து, சுமந்திரனில் விமர்சனம் உள்ளவரை போல காண்பித்து கொள்கிறார்.

பேச்சுத்தான் அரசியலின் அளவுகோலோ, அவசியமோ கிடையாது. மாகாணசபை விவாதங்களில் அனல்பறக்க பேசுபவர்கள் பெரும்பாலும் நல்ல கள செயற்பாட்டாளர்களாக இருப்பதில்லை. தர்மலிங்கம் அரசியலிற்கு வருவதற்கு முன்னரே தீவிர செயற்பாட்டாளராக வடமராட்சி பகுதியில் அறியப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் கல்வி செயற்பாட்டு பிரிவுகளுடன் 1990களின் பின்னர் இணைந்து அதிகமாக பணியாற்றியிருக்கிறார். என்றாலும் பிரதேசத்தில் தவிர்க்கவியலாத ஆளுமையாக அப்போது தன்னை மாற்ற தவறிவிட்டார்.

இன்று விவசாயியாகவும், அரசியல்வாதியாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். காலையில் தோட்டம் செய்துவிட்டு, பின்னர் அரசியல் செய்கிறார். தற்போதும், நீண்ட அரசியல்நோக்கத்துடனான அடித்தளங்களை இடுவதாக தெரியவில்லை.

வடமராட்சியிலிருந்து மாகாணசபைக்கு வந்தவர்களில் மக்கள் மத்தியில் எதிர்மறையான அபிப்பிராயம் குறைந்தவர் இவர்தான். அவரை இன்னும் அரசியல்வாதியாக பார்க்காமல், ஊரிலுள்ள ஒருவராக பார்ப்பவர்கள்தான் அதிகம். எளிமையாக எல்லோருடனும் பழகுவார். வீட்டிலும் சந்தித்து பேசலாம், தோட்டத்திலும் சந்தித்து பேசலாம் என்கிறார்கள் பிரதேச மக்கள்.

வடமாகாணசபையில் முதலமைச்சரிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, இவரது அரசியல் கரெக்டருக்கு சத்தியசோதனையாக அமைந்திருக்க வேண்டும். ஏதாவதொரு அணியில் இருந்திருக்க வேண்டும். அந்த சமயத்தில் ஏதோ அதிர்ஸ்டத்தால் பிரித்தானியாவிற்கு சென்றுவிட்டார். நம்பிக்கையில்லா பிரேரணை தயாரிக்கப்பட்டபோது, அவரை தொடர்புகொண்டு கையெழுத்து வைக்க சம்மதம் பெற்றிருந்தனர். அவரும் சம்மதம் வழங்கினார். பிரித்தானியாவில் இருந்து திரும்பியதும் இவர் கையெழுத்திடுவார் என்றுதான் ஆளுனரிடமும் சொல்லப்பட்டிருந்தது. தர்மலிங்கத்தின் அதிர்ஸ்டம், அவர் வருவதற்குள் பிரச்சனையெல்லாம் தீர்ந்து சமரசமாகி விட்டது. அதனால் சத்தியசோதனையில் இருந்து தப்பித்தார்!

மாகாணசபைக்குள் மிக அமைதியாக இருந்து, உள்ளூரில் மக்களுடன் நெருக்கமாக இருக்கும் வடமாகாணசபை மக்கள் பிரதிநிதிகள் பெரும்பாலானவர்கள் செய்யாத பாணி அரசியல் செய்கிறார். மாகாணசபைக்குள் குறிப்பிடும்படியான ஆளுமையாக தன்னை நிரூபிக்கவில்லை. மிகச்சில சந்தர்ப்பங்களில் மட்டும்தான் அங்கு பேசியிருக்கிறார். ஆனால் பொதுமக்களுடனான அவரது அணுகுமுறை வரவேற்பை பெற்றுள்ளது. மாகாணசபை உறுப்பினரான பின்னரும் உள்ளூரில் அதிருப்தியை சந்திக்காத மிகச்சில மாகாணசபை உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.

 

 

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here