படிக்கும் காலத்தில் ஏற்பட்ட உறவு… இப்போது திருமணம் செய்யக் கேட்கும் பெண்: மனமே நலமா?

உங்கள் சந்தேகங்களை கேளுங்கள்

பதிலளிக்கிறார்
கு.நக்கீரன்
உளவள ஆலோசகர்

பிரியந்தன் (26)
விசுவமடு

என்னை விடவும் இரண்டு வயது அதிகமுள்ள பெண்ணைக் காதலிக்கின்றேன். அவளுக்கும் இதில் பூரண சம்மதம். ஆனால் நம் இருவரின் வீட்டாரும் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். நான் செய்வது சரியா, தவறா? நம் காதலை எம் வீட்டாருக்கு எப்படிப் புரிய வைப்பது என்று தெரியவில்லை. எனக்கு ஒரு வழி கூறுங்கள்?

பதில்- சகோதரா! காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். உண்மையில் காதலுக்குக் கண் உண்டு, அறிவு இல்லை என்பதே சரி. ஏனெனில் காதல் வருவதே கண்களின் ஊடாகத் தானே?. காதல் என்பது எல்லோருக்கும் பொதுவாக உள்ள ஒரு உணர்வு. இந்தக் கண்றாவிக் காதல் யாருக்கு, எப்போது, எப்படி, எதனால் வரும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. ஒரு பொதுவிதியாக ஆணுக்குப் பெண் மீது காதல் வரும் என்று கூறுகின்றோம். ஆணுக்கு ஆண் மீதும், பெண்ணுக்குப் பெண் மீதும் காதல் வருவது கூட இயற்கையே. இப்படிக் காதல் வரும் போது சாதி, மதம், கல்வியறிவு, பதவி, அந்தஸ்து, வயது என்று எதனையும் கருத்தில் கொண்டு வருவதில்லை. அதை முளையிலேயே கிள்ளிவிடுவதும் நீரூற்றி வளர்ப்பதும் மட்டும்தான் நமது செயல்.

உமக்கு ஏற்பட்டுள்ள வயது கூடிய பெண்ணின் மீதான காதல் நீரூற்றி வளர்க்கப்பட்டு விட்டது. இனி அதைப் பிடுங்கி எடுப்பது கொஞ்சம் கஷ்டமான காரியம் தான். இருந்தாலும் உமக்கும் உமது காதலிக்கும் வெறும் வயது மட்டும் தானே வித்தியாசம். எனக்குத் தெரிந்து ஏழு, எட்டு வயது வித்தியாசத்தில் கூட சிலர் காதலித்துத் திருமணம் செய்து பேரப் பிள்ளைகளைக் கூடக் கண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். என்ன நாற்பதைத் தொட்ட நாய் வயதுகளில் கொஞ்சம் அதிகமாகக் கடிபட்டுக் கொண்டார்கள். இன்று முதுமைக் காலத்தில் ஒருவருக்கொருவர் உதவியாய் மிகுந்த காதலுடனேயே வாழ்கின்றார்கள். உங்கள் காதல் உண்மைக் காதல் எனில் நீங்கள் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. பயப்படாமல் காதலைத் தொடருங்கள். உங்கள் காதலுக்கு எனது வாழ்த்துக்கள்.

பெயர் குறிப்பிடவில்லை
மட்டக்களப்பு

நான் ஒரு ஆண். 3 வருடந்களுக்கு முன் உயர்கல்வி படிக்கும் போது ஒரு பெண்ணுடன் உறவுகொண்டேன் (அவள் கர்ப்பம் தரிக்கவில்லை). இதில் அவளுக்கோ, எனக்கோ எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. 3 வருடமாக நான் அவளைப் பார்க்கவும் இல்லை. ஆனால் இப்போது அவள் வந்து தன்னைத் திருமணம் செய்யுமாறு கேட்கின்றாள். ஆனால் எனக்கு அதில் இஷ்டம் இல்லை. காரணம் நான் வேறு ஒரு பெண்ணைக் காதலிக்கின்றேன். ஆனால் அவள் நமது உறவு விடயத்தை என் காதலியிடம் சொல்லிவிடப் போவதாக மிரட்டுகின்றாள். நான் இப்போது என்ன செய்வது?

பதில்- உமது கடிதத்தைப் பார்க்கும் போது மேற்கத்தைய கலாச்சாரம் எமது பிரதேசத்திலும் ஊடுருவிவிட்டது என்பது தௌ்ளத்தெளிவாகத் தெரிகின்றது. இவ்வகையான உறவை ஆங்கிலத்தில் “Casual sex” என்பார்கள். இவ்வாறான உறவுகளை அவர்களின் கலாச்சாரத்திலே “வாழ்க்கைத் துணை” என்னும் பகுதிக்குள் அவர்கள் கொண்டு வருவதில்லை. அவர்களைப் பொறுத்தவரைக்கும் அது ஒரு சம்பவம். அவ்வளவே. ஆனால் காதல், கல்யாணம், குடும்பம் என்பவைகள் சம்பவங்கள் அல்ல. அவை சரித்திரங்களாகுபவை. அவற்றிற்கென்று ஒரு தனித்துவம் உண்டு. சம்பவங்களான பாலியல் தொடர்புகள் சரித்திரமாகும் வாழ்க்கைத் துணையாக முடியாது.

தம்பி! நீர் 3 வருடங்களுக்கு முன் அப் பெண்ணுடன் உடலுறவு கொண்டபோது அப் பெண்ணைத் திருமணம் செய்வதாக வாக்குறுதி எதுவும் கொடுக்காவிடில் அப் பெண்ணுக்கு உம்மைத் திருமணம் செய்யும்படி கேட்பதற்கான எந்தவித உரிமையும் இல்லை. இதைவிட நீர் இன்னொரு பெண்ணைக் காதலிப்பதாகக் கூறியுள்ளீர். அப் பெண்ணும் உம்மைக் காதலிப்பதால் அவரையே திருமணம் செய்வதுதான் சரியானது. எமது பண்பாட்டில் காதலிப்பது என்பது திருமணம் செய்து மனைவியாக்கிக் கொள்ளவே.

மனைவி என்பவள் இறப்புவரை கூடவே துணையாக வருபவள் என்பது இன்று காதலிக்கும் பலருக்குத் தெரியாமலுள்ளது. காதல் என்பது ஒரு புனிதமான ஆண், பெண் உறவு. இக் காதல் எண்ணங்கள், இலட்சியங்கள், உணர்வுகள், எதிர்பார்ப்புக்கள், தியாகங்கள் போன்ற இன்னோரன்ன பரிமாணங்களைக் கொண்டது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

உமது கல்லூரியில் ஒன்றாகப் படித்த மாணவியுடன் ஏற்பட்ட அந்தத் தொடர்பை ஒரு விபத்தாக நினைத்து இனிமேல் இப்படியான விபத்துக்கள் ஏற்படாமல் கவனமாக வாழ்க்கையைத் தொடருங்கள். அதைவிடவும் முக்கியமாக உம்முடைய அந்தக் கல்லூரி நண்பிக்கு ஆறதலான வார்த்தைகளைக் கூறி அவரைச் சமாதானப்படுத்தி வைப்பதே உம்மைப் பொறுத்தவரைக்கும் உசிதமான ஒரு காரியமாகும்.


சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் உங்கள் மனதை அரித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் உள்ளதா? உடனே எமக்கு எழுதி அனுப்புங்கள். மனநல நிபுணர்கள் உங்கள் பிரச்சனைகளிற்கான தீர்வை தர தயாராக இருக்கிறார்கள்.

pagetamilmedia@gmail.com 
அல்லது
0766722218

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here