என்ன செய்தார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்? 04

வடமாகாணசபை உறுப்பினர்களின் ஸ்கான் ரிப்போர்ட் 

இந்தவாரம் கந்தையா சிவநேசன்

வடமாகாணசபை தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் கந்தையா சிவநேசன். மாகாணசபை உறுப்பினர் பதவியை சொற்ப வாக்குகளால் இழந்திருந்தார். என்றாலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியடைந்த இருவர், பின்னாளில் மரணமானார்கள். அவர்களில் ஒருவரான கனகசுந்தரசுவாமி வீரவாகுவின் வெற்றிடத்திற்கு சிவநேசன் நியமிக்கப்பட்டார்.

புளொட் அமைப்பின் முக்கிய உறுப்பினர் சிவநேசன். பவன் என்ற பெயரில் அறியப்பட்டவர். யுத்தகாலத்தில் புளொட் அமைப்பு வவுனியாவை முக்கிய தளமாக கொண்டியங்கியது. இந்தக்காலத்தில் புளொட் தொடர்பான இரண்டுவிதமான அபிப்பிராயங்கள் இருந்தன. குடியேற்றங்கள் அமைத்தது, வவுனியாவை சிங்கள மயமாதலில் இருந்து பாதுகாத்தது போன்ற முக்கியமான செயற்றிட்டங்களை செய்திருந்தனர். இதேவேளை, இராணுவத்துடன் நெருக்கமாக செயற்பட்டார்கள் என்ற விமர்சனமும் உண்டு. இந்த விமர்சனங்களில் பெரும்பகுதி குறிப்பிட்ட சில முக்கியஸ்தர்களை மையப்படுத்தியே எழுந்தது. இதில் சிவநேசன் அவ்வளவாக சிக்குப்படவில்லை.

முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு நகரம் போன்ற இடங்கள் வவுனியாவுடன் அதிகம் தொடர்புள்ள பிரதேசங்கள். இவைதான் சிவநேசனின் பிரதேசம். அவரது தோல்விக்கு வவுனியா அபிப்பிராயங்களும் ஒரு காரணம்தான். அதைவிட முக்கியமானது, எல்லா வேட்பாளர்களும் பணத்தை தண்ணீராக இறைக்க, இவர் சிக்கன பிரசாரம்தான் செய்தார். கட்சியும் அவ்வளவாக பிரசார நிதி கொடுக்கவில்லை. இந்த வருத்தம் அவரிடம் இருந்தது. எனினும், 2015ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மாகாணசபை உறுப்பினராக பதவியேற்றார்.

எல்லோருடனும் எளிமையாக பழகுகிறார், எப்பொழுது வேண்டுமானாலும் வீட்டு கதவை தட்ட முடிகிறது என்பது பொதுவான உள்ளூர் அபிப்பிராயம். நீண்டகால போராளியாக இருந்ததாலோ என்னவோ, அரசியல் பந்தா எதுவும் அவரிடம் இல்லை.

“இது ரத்த பூமி. குழாயை திறந்தால் தண்ணீர் வராது. இத்தம்தான் வரும்“ என்று சொல்லாதது ஒன்றுதான் வடமாகாணசபையில் குறை. மற்றும்படி, தினமும் ரணகளம்தான். ஆளையாள் குறிவைத்து பிச்சல்பிடுங்கலாகவே அரசியல் நகர்கிறது. இந்த சர்ச்சைகள், குழப்பங்களில் சிக்குப்படாதவர் சிவநேசன். மாகாணசபைக்குள் நடக்கும் முக்கிய விவாதங்களின்போது மட்டும் வாய்திறக்கும் மிகச்சிலருள் இவரும் ஒருவர்.

முல்லைத்தீவில் ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழரசுக்கட்சிக்கிடையில் கடுமையான போட்டி நிலவியது. இரண்டு முகாமாக மாறி, பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ள தீவிர போட்டி நடந்தது. முல்லைத்தீவில் இந்த இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் செல்வாக்கானவர்கள். இந்த மோதலில் சிவநேசன் அடிபட்டு சென்றார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் ரவிகரன், தமிழரசுக்கட்சியின் சிவமோகன் ஆகியோர் அங்கு அடித்தாடிக் கொண்டிருந்தனர். இந்த போட்டியில், தமிழரசுக்கட்சி கற்றவித்தைகள் அனைத்தையும் மொத்தமாக இறக்கி, ரவிகரனை கழற்றியெடுத்தார்கள். இப்படி தீப்பொறி பறக்க நடந்த ஆட்டத்தில் ஏதோ ஒரு மூலையில் மெதுவாக ஆடிக்கொண்டிருந்தார் சிவநேசன். எந்த மேடையிலும் சிக்சர் அடிக்கும் வித்தையை ரவிகரன் போன்றவர்கள் கற்றுவைத்திருக்க, வழக்கமான அரசியல்வாதிகளிற்குரிய இயல்புகளின்றி தடுமாறினார் சிவநேசன்.

ஆனால் வடக்கு மாகாணசபையில் ஏற்பட்ட குழப்பத்தின் பின், விவசாய அமைச்சராக திடீரென நியமிக்கப்பட்டார் சிவநேசன். அதன்பின், முல்லைத்தீவில் முக்கிய ஆட்டக்காரராக ஆடிக்கொண்டிருக்கிறார்.

மாவட்த்திலுள்ள மாகாணசபை உறுப்பினர்களில் நிதானமாக செயற்படுகிறார், முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி பணிகளில் கவனமாக இருக்கிறார், எந்தநேரமும் கதைத்துக் கொண்டிருக்க வேண்டுமென நினைப்பவர் அல்ல என்ற அபிப்பிராயமும் உள்ளது. முல்லைத்தீவில் காணிஅபகரிப்பு நடக்கிறது, குடியேற்றங்கள் நடக்கிறது என மற்றைய உறுப்பினர்கள் மாகாணசபைக்குள் உரத்தகுரலில் பேசும் அளவில், இவர் குரல்கொடுப்பதில்லை என்ற அபிப்பிராயமும் உள்ளது.

சிவநேசனிற்கு எதிரிகள் வெளியில் இல்லை. கட்சிக்குள் கடும்போட்டியாளராக இருக்கும் லிங்கநாதன், சமயங்களில் சிவநேசனை கவிழ்த்து விடுவார். சிவநேசன் அமைச்சு பதவியேற்கவிருக்கிறார் என்றதும், அதை தடுக்க தலையால் நடந்தார் லிங்கநாதன். இப்படி பல முனை சிக்கலை கடந்து அரசியல் செய்ய வேண்டியுள்ளது சிவநேசனிற்கு.

அண்மையில் ஊடகவியலாளர் சிவராம் கொலையுடன் இவரது பெயரையும் இணைத்து முதல்வர் கடிதம் எழுதியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. சிவராம் கொலை விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. வழக்குடன் சம்பந்தப்பட்டதாக நீதிமன்றத்தால் குறிப்பிடப்படாத ஒருவரை முதல்வர் அப்படி குறிப்பிட்டது முறையா என்ற சர்ச்சையும் வெடித்தது. சிவநேசனிற்கு அமைச்சர் பதவி கிடைத்துவிடக் கூடாதென்பதற்காக மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் முதல்வரை பிழையான தகவல் கொடுத்து வழிநடத்தினார்கள் என்ற தகவல் பின்னர் வெளியாகியது.

மாகாணசபையில் இவரால் சமர்ப்பிக்கப்பட்ட மூன்று பிரேரணைகள் இன்னும் அங்கீகரிக்கப்பட்டு, விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாமல் உள்ளன. எல்லையோர கிராமமக்களை ஒருங்கிணைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயற்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும், வேலைவாய்ப்பு வழங்கும்போது மாவட்டரீதியில் வழங்கப்பட வேண்டும், மக்கள் கருத்து கணிப்பு மையம் உருவாக்கப்பட வேண்டுமென்பவையே அவை.

மாகாணசபைக்குள் நிலவும் இரண்டு அணிகளில், இவர் முதலமைச்சர் ஆதரவு அணி. முன்னாள் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் மீதான ஊழல்குற்றச்சாட்டு விசாரணை பிரேரணை விபரத்தை ஹன்சாட்டிலிருந்து அகற்றுமாறு முதலமைச்சர் உள்ளிட்ட எட்டு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் சிவநேசன் கையொப்பமிட்டிருந்தார்.

மாகாணசபை சர்ச்சையில் முதல்வரிற்கு ஆதரவாக கையொப்பமிட்டிருந்தார்.

சிவநேசனிற்கு வழக்கமான தமிழ் அரசியல்வாதிகளிற்குரிய, “நல்ல வாய்“ அமையவில்லை. அது இருந்தால் எதுவும் செய்யாமல் பேசிக்கொண்டிருக்கலாம். ஆனால், எதையாவது செய்ய வேண்டுமென சிவநேசன் எத்தனிப்பது தெரிகிறது. ஆனால், அதற்கு போதிய அவகாசம் கிடைக்கவில்லை.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here