சகோதர படுகொலை நடந்திராவிட்டால் விடுதலைப் போராட்டம் திசைமாறி இருக்காது!

1986இல் ரெலோ இயக்கம் தாக்கப்பட்டு தலைவர் ஸ்ரீ சபாரத்தினம் கொல்லப்பட்ட அந்த கொடிய நிகழ்வு மாத்திரம் இல்லை என்றால், 1987 ஆடி 29 இல் இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கமாட்டாது. இந்தியப் படைகளும் இலங்கைக்கு வர நேர்ந்திருக்காது. ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வரலாற்றுத் தவறும் நிகழ்ந்திருக்காது. அன்று ஒற்றுமையோடு செயற்பட்டுக் கொண்டிருந்த விடுதலைப் போராட்ட இயக்கங்களின் துணிச்சலும் தியாகமும் வரலாற்றை வேறு திசையில் கொண்டு சென்றிருக்கும் என தெரிவித்தார் ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா.

கொல்லப்பட்டஸ்ரீ சபாரத்தினம் மற்றும் போராளிகள் நினைவஞ்சலிக் கூட்டம் இன்று கோண்டாவிலில் நடந்தது. அதில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சரியாக முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் போராட்ட களத்தில் ரெலோ இயக்கத்திற்கு தலைமைதாங்கி வழிநடாத்திய வேளையில் நம்மவர்களாலேயே வீழ்த்தப்பட்ட தலைவர் ஸ்ரீ சபாரத்தினம் மற்றும் இளம் போராளிகள், சில பொதுமக்கள் அனைவரையும், இன்று நாமனைவரும் நினைவு கூர்ந்து எமது அஞ்சலிகளை செலுத்துகின்றோம்.

1983 ஜுலை தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகளின் ஆரம்பத்தில், வெலிக்கடைச் சிறையில், ரெலோ இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி மறறும் முன்னணிப் போராளிகள் ஜெகன், தேவன், நடேசுதாசன், சிவபாதம், குமார், ஸ்ரீகுமார் உட்பட இயக்கத் தலைமையின் பெரும்பகுதி அன்றைய ஜே. ஆர். ஜெயவர்த்தன அரசினால் பலி கொள்ளப்பட்டதை அடுத்து, துணிச்சலுடனும் திடசங்கற்பத்துடனும் ரெலோ இயக்கத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்தியவர் தலைவர் ஸ்ரீ சபாரத்தினம்.

ஆளுமையும் வசீகரமும் கொண்ட ஓர் இளம் தலைவராக, அகிலத்தின் கவனத்தை விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைப் போல அவரும் ஈர்த்து நின்ற காலகட்டத்தில் 1986 வைகாசி மாதம் இதே நாளில் அவர் வேட்டையாடப்பட்டு வீழ்த்தப்பட்டார். திடீரென அன்று ரெலோ இயக்கம் தாக்கப்பட்டு தலைவர் ஸ்ரீ சபாரத்தினம் கொல்லப்பட்ட அந்த கொடிய – கொடூர நிகழ்வு மாத்திரம் இல்லை என்றால், 1987 ஆடி 29 இல் இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கமாட்டாது.
இந்தியப் படைகளும் இலங்கைக்கு வர நேர்ந்திருக்காது. ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வரலாற்றுத் தவறும் நிகழ்ந்திருக்காது. அன்று ஒற்றுமையோடு செயற்பட்டுக் கொண்டிருந்த விடுதலைப் போராட்ட இயக்கங்களின் துணிச்சலும் தியாகமும் வரலாற்றை வேறு திசையில் கொண்டு சென்றிருக்கும்.

இதை நான் தயக்கம் இன்றி அழுத்தம் திருத்தமாக அடித்துக் கூறமுடியும். விடுதலைப் போராட்டம் ஒன்றின் நடுவில் நிகழ்ந்த பாரிய தவறு எங்கள் எதிர்காலத்தைப் புரட்டிப்போட்டது. இனத்தின் இலட்சியக் கனவினைக் ஈற்றில் சிதைத்து சிதிலமாக்கியது.

தலைவர் ஸ்ரீ சபாரத்தினம், அந்நியர் இலங்கைத் தீவில் காலடி பதித்த 1505 இல் இங்கே அதிகாரம் செலுத்திய மூன்று முடியரசுகளுள், தனித் தமிழரசாக விளங்கிய யாழ்ப்பாண இராச்சியத்தின் அன்றைய தலைநகரான நல்லூரில் – கள்ளியங்காட்டுக் கிராமத்தில் பிறந்தவர்.

1972 – 76 காலகட்டத்தில் வேறு பல விடுதலைப் போராளிகளுடன் அவர் சிறை வைக்கப்பட்டிருந்த அந்த மூன்றாண்டு காலம் தவிர, அவரின் வாலிபப் பருவம் யாழ்ப்பாண மண்ணிலேயே கழிந்தது.

1983 ஜுலை தமிழ் இன அழிப்பு – வன்முறை வெறியாட்டங்களைத் தொடர்ந்து தமிழ்நாடு, எமது விடுதலைப் போராட்டத்தின் பின் தளமாக மாறிய காலத்தில் அவர் பெரும்பாலும் அங்கே தங்கி நின்று, அங்கிருந்து போராட்டத்தை வழி நடாத்தினார்.
1985 இறுதியில் தாயகம் திரும்பி சில மாதங்களுக்குள்ளேயே இதே யாழ்ப்பாண மண்ணில், இதே நல்லூர்ப் பிரதேசத்தில், இதே கோண்டாவில் கிராமத்தில் அவர் சுற்றி வளைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

தலைவர் ஸ்ரீ சபாரத்தினம் அவர்களின் மரணத்துடன் ரெலோவின் கதை முடிந்தது என்று போடப்பட்டு அனைத்துக் கணக்குகளையும் – அவரின் மரணத்திற்கு பிந்திய கடந்த 33 ஆண்டுகள் தொடர்ந்து பொய்ப்பித்திருக்கின்றன.

ஜனநாயக அரசியல் களத்தில் தமிழ் இனத்தின் நலன்களை விட்டுக்கொடுக்காத நிலையிலேயே விலைபோகாத தீவிர அரசியல் பாசறையாக ரெலோ இயக்கம் அரசியற் கட்சியாக மாறிய 1988 இன் பிற்பகுதியில் இருந்து கடந்த 30 ஆண்டுகளில் ரெலோ தன்னை மீண்டும் மீண்டும் நிரூபித்து வந்திருக்கின்றது.

இதே வேளையில், இலங்கைத் தீவில், தமிழினத்தின் வரலாற்று வாழ்விடத்தின் – மரபு வழித் தாயகத்தில் ஓர் சுயாட்சி அரசினை ஏற்படுத்திட வேண்டும் என்ற எங்கள் ஜனநாயக அரசியற் குறிக்கோளை நாம் இன்னமும் சாதிக்கவில்லை.

நடந்து முடிந்த போரின் அவலங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் முழு இலங்கைத்தீவுக்கும் விடுத்திருக்கும் சவாலை, நாட்டின் ஏனைய சமூகங்களைப் போலவே தமிழ் இனமும் எதிர்கொண்டு நிற்கின்றது.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு விடயத்தில் நாம் தெளிவாக இருக்கின்றோம். தமிழ் மக்களைப் போலவே, தமிழைத் தாய் மொழியாக்க கொண்ட முஸ்லிம் மக்களும், இலங்கைத் தீவில் ஓர் சிறுபான்மை இனம் என்பதையும், ஒரு சில அடிப்படை மதவாதிகள் மற்றும் மத வெறியர்களின் அராஜக – அக்கிரமங்களுக்கு முஸ்லிம் மக்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்படக்கூடாது என்பதிலும், நாம் உறுதியாக உள்ளோம்.
இஸ்லாமிய அடிப்படைவாதம் முறியடிக்கப்பட்டு முற்றாகத் துடைத்தெறியப்பட வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இலங்கைத் தீவில் இடமில்லை.
அதே நேரத்தில், சட்டத்தை மதிக்கும் – அமைதியை விரும்பும் முஸ்லிம் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது முழு நாட்டினதும் பொறுப்பு என்பதிலும் நாம் தெளிவாக உள்ளோம்.

இஸ்லாமிய அடிப்படைவாதம், விடுத்திருக்கும் சவாலுக்கு உதவியவர்கள் – நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவியவர்கள், யாராக இருந்தாலும் – எவராக இருந்தாலும், – எந்த அரசியல் அந்தஸ்த்தில் இருந்தாலும், சட்டத்தின் நீண்ட கரம் அவர்களை சுற்றி வளைப்பதில் இனியும் கால தாமதம் இருக்கக்கூடாது என்பதை நாம் வலியுறுத்தக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

மதவாதத்தை முன்வைத்து, மத உணர்வுகளைத் தூண்டி, அரசியல் நடாத்த முயன்ற சந்தர்ப்பவாதிகளும் பதவி வெறியர்களும், இலங்கைத் தீவு இன்று சந்தித்துக்கொண்டிருக்கும் நெருக்கடி நிலைமைக்கு ஏதோ ஒரு விதத்திலாவது பொறுப்பாளிகள் என்பதை நாம் தயக்கம் எதுவும் இன்றி கூற விரும்புகின்றோம்.
இவர்களில் சிலர் தொடர்பில் நாடு முழுவதிலும் பாரிய சந்தேகம் வெளிப்படுத்தப்பட்டிருப்பினும், அவர்கள் இருந்த இடத்திலேயே தொடர்ந்தும் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

அதே நேரத்தில், சிறிய தகராறு ஒன்று நீர்கொழும்பு பிரதேசத்தில் நேற்று ஓர் பாரிய வன்முறைக்கு வழி அமைத்திருக்கின்றது. முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவெறி, சீறி எழுந்து அமைதியை அடித்து நொருக்கிய வேளையில், அவசரகால சட்ட விதிகள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது ஏன்? என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியுள்ளது.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை துடைத்தெறிவதற்கான போராட்டம் திசைமாறுவதை நாம் மௌனமாக பார்த்திருக்கக் கூடாது. இலங்கைத் தீவின் அனைத்து இனங்களும் தமது பூரண ஒத்துழைப்பை இந்தப் போராட்டத்திற்குத் தொடர்ந்து வழங்கும் விதத்தில் அவசரகால நிலைமை நடைமுறைப்படுத்தப்படுவதை நாம் அனைவரும் காண்காணிக்க வேண்டும்.

இந்நிலையில் யாழ் – பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது, சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் கைது, தொடர்ந்து விளக்கமறியல் என்று நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதே விடயத்தில், விரைவில் நீதி நிலைநாட்டப்படவில்லை எனில், அதை சாதிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க நாம் தயங்கப்போவதில்லை. மறைந்த தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் தமிழ் பேசும் சமுதாயத்தின் சிறுபான்மையினரான முஸ்லிம் மக்கள் மீது அபிமானம் கொண்டிருந்த ஒருவர்.

அவர் மரணிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் ஒளிப்பதிவு செய்யப்பட்ட அவரது உரை ஒன்றில் முஸ்லிம் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பில் தனது உறுதியான நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

தலைவர் ஸ்ரீசபாரத்தினம் மற்றும் அவருடன் மரணித்த இளம் போராளிகள், மற்றும் சில ஆதரவாளர் என்போரின் நினைவு நாளில் தலைவர் ஸ்ரீசபாரத்தினம் விட்டுச்சென்ற பணியை இதயசுத்தியுடன் தொடர்ந்து முன்னெடுப்பதே நாம் அவருக்கும் அவருடன் மரித்த எம் உடன் பிறப்புகளுக்கும் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலியாகும் என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here