ஈழப்போரில் கசப்பான வரலாற்று தினங்களில் ஒன்று!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம்- ரெலோ அமைப்பின் தலைவர் சிறி சபாரத்தினத்தின் நினைவஞ்சலி நிகழ்வு கோண்டாவிலில் இன்று (6) மாலை நடைபெற்றது.

சிறி சபாரத்தினம் படுகொலை செய்யப்பட்ட கோண்டாவிலில், ரெலோவின் தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இன்று திங்கட்கிழமை மாலை நினைவு நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இதன் போது சிறிசபாரத்தினத்தின் படத்திற்கு அக் கட்சியின் தற்போதைய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மலர் மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து அக் கட்சியின் பிரதித் தலைவர் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர் மாலை அணிவித்ததுடன் தீபமேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந் நிகழ்வில் கட்சியின் பிரதித் தலைவர் ஹென்றி மகேந்திரன், பொதுச் செயலாளர் என்.சிறிக்காந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதராலிங்கம் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், மாகாண சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந் நிகழ்வில் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றியிருந்தார்.

1986ஆம் ஆண்டு இதேநாளில் விடுதலைப்புலிகளால் சிறீசபாரத்தினம் சுட்டுக்கொல்லப்பட்டார். சக இயக்கங்கள் மீதான வன்முறை ஈழப்போரில் பெரும் கசப்பான அனுபவங்களை ஏற்படுத்தியிருந்தது. பின்னாளில் இந்த சம்பவத்திற்காக வருத்தமடைந்த புலிகள், கூட்டமைப்பு உருவாக்கத்தின் போது ரெலொ அமைப்பிடம் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here