எதார்த்தமாக கேட்ட சத்தியலிங்கம்; பதார்த்தமான லிங்கநாதன் குரூப்- முதல்வரை சந்தித்த கறுப்பாடு!

வவுனியாவை சேர்ந்த ஒரு குழுவொன்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நேற்று சந்தித்துள்ளது. வவுனியாவை சேர்ந்த விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என அவர்கள் தம்மை கூறிக்கொண்டாலும், அது உண்மையில் அரசியல் நோக்கத்திற்காக தயார்படுத்தப்பட்ட அணியாகும்.

வவுனியா பிரதி விவசாய பணிப்பாளர் இடமாற்றத்திற்கு வடக்கு முதலமைச்சரும், விவசாய அமைச்சரும் நடவடிக்கையெடுத்து வரும் நிலையில்- வவுனியாவை தமது கோட்டையாக கருதும் அணி, மற்றும் விவசாய அமைச்சில் இருக்கும் “கொழுத்த“ சில அதிகாரிகளின் பின்னணியிலேயே இந்த குழு நேற்று சந்திக்க சென்றுள்ளது.

இந்த குழுவை தலைமைதாங்கி சென்றவர் ரங்கன். முன்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ் தொடர்பில் இருந்தவர்.

இந்த குழுவில் முஸ்லிம்கள் சார்பில் அழைத்து செல்லப்பட்டவர் ஹரீஷ். தூவல் நீர்ப்பாசன கருவிகளை மோசடி செய்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் இவர் மீது உள்ளது. அப்போது வவுனியா பிரதி விவசாய பணிப்பாளராக இருந்த சகிலா பானுதான் இந்த மோசடியை அம்பலப்படுத்தி, இந்த வழக்கின் அரச சாட்சியாக இப்பொழுதும் இருப்பவர்.

வவுனியா மாவட்ட கமக்கார அமைப்பின் செயலாளராகவும், செட்டிக்குளம் கமநல கேந்திர நிலையத்திலும் அங்கம் வகித்தவர். மோசடி குற்றச்சாட்டுக்களையடுத்து அந்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்போது வவுனியாவில் பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு விவசாய அமைப்பிலும் இவர் அங்கம் வகிக்கவில்லை. எனினும், வவுனியா விவசாய அமைப்பொன்றின் பிரதிநிதியாக கூறி, நேற்று முதலமைச்சரை சந்தித்து, புதிய பிரதி விவசாய பணிப்பாளர் தேவையில்லையென கூறியுள்ளார்.


தமிழ்பக்கத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்துவிட்டீர்களா? -இல்லையென்றால் இதை கிளிக் செய்து, லைக் செய்துவிடுங்கள்.


அதாவது, நீதியரசர் விக்னேஸ்வரனின் நீதிமன்றத்தில்- இன்னொரு வழக்கில் தனக்கு எதிராக சாட்சி செல்பவரை கவிழ்க்க- அந்த சந்தேகநபர் சாட்சி சொல்லியுள்ளார்.

இப்படியான தனிநபர்களின் கோரிக்கையை ஏற்று மாவட்டத்தின் பொறுப்பான பதவிகளை தீர்மானிப்பது அபத்தமானது. நேற்று முதலமைச்சரை சந்திக்க தயார்படுத்தப்பட்ட குழு- பின்னணி நோக்கமுடையது. பின்னணி நோக்கத்துடனோ, நோக்கமில்லாமலோ இப்படியான குழுக்கள் அரச நிர்வாக செயற்பாட்டில் தலையீடு செய்வதை அனுமதிக்ககூடாது. முறையான நிர்வாகத்தை கட்டியெழுப்ப இதுதான் முதல் தடைக்கல்.

சகிலா பானு வவுனியா மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளராக வரக்கூடாது என்பதில் பல முனை அழுத்தங்கள் நடந்து வருகிறது. மாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமார், தற்போதைய வவுனியா பிரதி விவசாய பணிப்பாளர் த.யோகேஸ்வரன் அணி நிர்வாகரீதியான காரணங்களினால் இந்த நியமனத்தை எதிர்க்கிறார்கள்.

முன்னர் வவுனியா பிரதிவிவசாய பணிப்பாளராக இருந்தபோது, அங்கிருந்த பல ஊழல் மோசடிகளை கையும் மெய்யுமாக பிடித்திருந்தார். தற்போது வெள்ளை சட்டையுடன் அரசியல் செய்பவர்கள், சகோதரர்களையும் பினாமிகளையும் வைத்து எப்படி கொள்ளையடித்தார்கள் என்ற விபரங்களை எதிர்வரும் நாட்களில் தமிழ்பக்கம் ஆதாரங்களுடன் பதிவிடும்.

ப.சத்தியலிங்கம்- தனது கோட்டைக்குள் ஈ.பி.ஆர்.எல்.எவ் அனுதாபி நுழைவதை விரும்பாததாலும், வேறு சிலபல காரணங்களாலும் எதிர்க்கிறார்.

இதேவேளை, வவுனியா பிரதி விவசாய பணிப்பாளரின் இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு கோரி வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினர்கள் நால்வர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று முதலமைச்சரிற்கு சென்றதாக, நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டிருந்தோம். அதை படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

அதில் பிந்திய நிலவரமாக, மூன்று மாகாணசபை உறுப்பினர்கள்- ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, இந்திரராசா- அந்த நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியுள்ளனர். இந்த விவகாரத்தின் தாற்பரியம் புரியாமல்- யார் இடமாற்றப்படுகிறார், யார் புதிதாக நியமிக்கப்படுகிறார் என்ற விபரங்கள் எதுவுமே தெரியாமல்- தமது சக மாகாணசபை உறுப்பினரான ப.சத்தியலிங்கம் கேட்டுக்கொண்டதற்காக- அவர் நீட்டிய கடிதத்தில் கையெழுத்து வைத்துள்ளோம் என ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளனர்.

மாவட்டத்தின் முக்கிய விவகாரமொன்றில், அதன் சரிபிழை- பின்னணி- எதையும் ஆராயாமல் கையெழுத்திட்டு விட்டு, பின்னர் தெரியாமல் கையெழுத்திட்டு விட்டோம் என கூறும் நமது மாகாணசபை உறுப்பினர்கள், வேறு எதிலெல்லாம் இப்படி தவறாக கையெழுத்திட்டார்கள் என்பது அவர்களிற்கே வெளிச்சம்!

 

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here