என்ன செய்தார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்? 05

என்ன செய்தார்கள் நமது பிரதிநிதிகள்?
இந்தவாரம் ஞா.குணசீலன்
மன்னார் மாவட்டம்

2015 ஜனாதிபதி தேர்தல் சமயம். மகிந்த ராஜபக்ச மீது ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வெறுப்பில் இருந்தார்கள். மகிந்தவிற்கு பின்னான காலம் எப்படியிருக்கமென்றெல்லாம் மக்கள் ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை. அவரை வீட்டுக்கனுப்ப வேண்டுமென்பதுதான் மக்களின் ஒரே குறியாக இருந்தது. அந்த சமயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு யாருக்கு ஆதரவளிப்பதென்ற முடிவை அறிவிப்பதில் கொஞ்சம் இழுபறிப்பட்டது. ஆனால், கட்சிகள் எடுக்கும் முடிவிற்கு மக்கள் கட்டுப்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாத காலம் அது. இந்த சமயத்தில், தேர்தலில் யாரையும் ஆதரிக்க வேண்டாம் என கூட்டமைப்பிற்குள் இருந்தே ஒரு அதிர்ச்சிக்குரல் ஒலித்தது. அது- மன்னாரை சேர்ந்த வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஞானசீலன் குணசீலன்.

மன்னார் மாவட்டத்தின் மீன்பிடி கிராமமான விடத்தல்தீவில் இருந்து வைத்திய கலாநிதியானவர் குணசீலன். தற்போது மன்னார் தோட்டவெளியில் குடியிருக்கிறார். மன்னாரில் வைத்தியராக பணியாற்றிக் கொண்டிருந்தவர், 2013 வடமாகாணசபை தேர்தலுடன் அரசியலுக்கு வந்தார். இப்போது சொந்தமாக கிளினிக் ஒன்றையும் நடத்திக் கொண்டிருக்கிறார்.

தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் ஏதாவதொரு கட்சித் தலைமையை அணுகி, அந்த கட்சியின் சார்பில் களமிறங்குவதுதான் அண்மைக்கால தமிழ்தேசிய அரசியல். அவர்கள் கட்சி செயற்பாட்டாளர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. உள்ளூரில் பிரபலமானவர்களாக இருந்தால் போதும். இப்படியான வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னரும் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவார்கள் என்பதற்கு உத்தரவாதமில்லை. இப்படி நம்பி அதிகமாக கையை சுட்டுக்கொண்ட கட்சி ஈ.பி.ஆர்.எல்.எவ். அடுத்தது ரெலோ. தேர்தலில் வென்றதும் ஆசனம் கொடுத்த கட்சிக்கு கையை காட்டிவிட்டு தமிழரசுக்கட்சிக் கூடாரத்திற்குள் நுழைந்த இந்த கட்சி வேட்பாளர்கள் அனேகர்.

மன்னார் பிரதேசம் ரெலோ வலுவாக கோலோச்சும் பகுதி. 2013 வடமாகாணசபை தேர்தலில் குணசீலனிற்கு ரெலோ சார்பில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. மாவட்டத்தில் மூன்றாவதாக வந்தார். முதலாவதாக வந்த பிரிமூஸ் சிராய்வாவிற்கும் மூன்றாவதாக வந்த இவருக்குமிடையில் 667 வாக்குகள் வித்தியாசம். மாவட்டத்தில் இரண்டாமிடம் பா.டெனிஸ்வரனிற்கு.

தேர்தல் முடிந்ததும் அமைச்சர்கள் சர்ச்சை தோன்றியது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள், வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் விதமாக அமைச்சர் நியமனம் செய்ய கூட்டமைப்பு தலைமை விரும்பியது. கட்சிகள் சார்பில் சிபாரிசு செய்யப்பட்டபோது, ரெலோவால் அமைச்சர் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டது குணசீலன்தான். முதல்வரும், தமிழரசுக்கட்சியின் தலைவர்களும் இணைந்து அமைச்சர்களை தெரிவுசெய்தபோது, ரெலோ சார்பில் போக்குவரத்து அமைச்சராக டெனிஸ்வரனை நியமித்தனர். சுகாதார அமைச்சு கிடைக்குமென எதிர்பார்த்திருந்த குணசீலன் கடும் ஏமாற்றமடைந்தார். அமைச்சு பதவி கிடைக்காததில் கட்சி தலைமைக்கம் பங்கிருக்கலாமென நினைத்தார். அன்றிலிருந்து கட்சியுடன் அவ்வளவாக ஒட்டு வைத்துக்கொள்ளவில்லை. கட்சி அடிப்படை உறுப்பினர் படிவத்தை நிரப்பி தருமாறு கட்சி கேட்டுக்கொண்டபோதும், மறுத்துவிட்டார். ரெலோ சார்பில் போட்டியிட்டு வடமாகாணசபை உறுப்பினரானவர், இன்றுவரை அந்தக்கட்சியின் உறுப்புரிமை பெறவில்லை. இதனால் கட்சியும் வேண்டாத பெண்டாட்டியை பார்ப்பதை போலத்தான் இவருடன் நடக்கிறது. மன்னாரில் மற்றைய எல்லா கட்சிகளுடனும் நெருங்கிச் செயற்படுகிறார். ஆனால் ரெலோவின் கூட்டங்கள், நிகழ்வுகளில்தான் காண முடிவதில்லை. கடந்த ஒருசில மாதங்களாகத்தான் இதில் சிறிய மாற்றம் தெரிகிறது.

2015 ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் மகிந்த அணி சார்பில் சிலர், ஒரு அசைன்மென்றுடன் வடக்கில் களமிறங்கினார்கள். தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிக்க வேண்டும், மகிந்தவுடன் மேடையேற வேண்டும் என்பதே அந்த அசைன்மென்ற். புளொட் சார்பில் ஒருவரும், ரெலோ சார்பில் இருவரும் துரத்திதுரத்தி டீல் பேசப்பட்டனர். ஆனால் பெரும்பாலானவர்கள் அதை நிராகரித்து விட்டனர்.
இந்த சமயத்தில்தான் தேர்தலை புறக்கணிக்க குணசீலன் கோரினார். அவரது அறிக்கையின் பின்னால் உள்நோக்கமிருப்பதாக விமர்சனங்கள் கிளம்ப, மகிந்தவுடன் இணைத்து பேசப்படுவதை குணசீலன் மறுத்தார். ஆனால் கட்சித் தலைமை அவரை இன்னும் முழுமையாக நம்பவில்லை.

மாகாணசபை உறுப்பினரான பின்னர் மக்கள் சந்திப்புக்களில் அதிக அக்கறை காட்டுகிறார். எப்பொழுதும் அவரை சந்திக்கலாமென்பதுதான் பொதுவான அபிப்பிராயமாக உள்ளது. மன்னாரில் தமிழ் மாகாணசபை பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளமை, மற்றைய உறுப்பினர்களின் மெத்தனப் போக்கு என அரசியல் செய்ய நிறைய இடைவெளி கிடைக்க, நன்றாக அடித்தாடிக் கொண்டிருக்கிறார் குணசீலன். மன்னாரில் தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிகளுடனும் நெருக்கமான உறவை பேணி வருகிறார்.

மாவீரர்தினத்தில் விளக்கேற்றல், துயிலுமில்லாம் சிரமதானம் என இறங்கி அடிக்க வேண்டிய இடங்களை புரிந்துகொண்டு, நன்றாக ஸ்கோர் செய்து கொண்டிருக்கிறார். இந்த வித்தை மன்னாரின் மற்ற உறுப்பினர்களிற்கு பிடிபடாமலிருப்பது குணசீலனிற்கு வாய்ப்பாக இருக்கிறது. இப்பொழுது சுகாதார அமைச்சராகவும் ஆகிவிட்டார். முன்னர் எதிர்பார்த்தபோது கிடைக்காத அமைச்சு, எதிர்பாராத சமயத்தில் அவருக்கு கிடைத்தது.

ஆனால் மன்னாரிலுள்ள மத்தியதர வர்க்கத்திடம் பொதுவாக தமிழ் அரசியல்வாதிகள் மீது அதிகரித்துவரும் அதிருப்தியில் இவரும் தப்பவில்லை. வேலைவாய்ப்பு, பணி உயர்வு, நிலம் வழங்கல் உள்ளிட்ட பலவற்றில் ரிசாட் பதியூதீனின் செல்வாக்கால் தமிழர்கள் புறமொதுக்கப்படுவதாக பரவலான அதிருப்தி அதிகரித்து செல்கிறது. கிராமச்சங்க உறுப்பினர் தொடக்கம் கட்சிகளின் தலைவர்கள் வரை நரம்பு புடைக்க இனப்பிரச்சனை பற்றி பேசுகிறார்களே தவிர, மன்னாரில் அத்தியாவசியமாக செய்ய வேண்டியவற்றை கவனிக்கிறார்கள் இல்லையென்ற அதிருப்தியுள்ளது. மாகாணசபை ஒதுக்கீடுகளை மன்னாரிற்குள் முறையாக பங்கிடுவதில்லையென்ற மெல்லிய அதிருப்திக் குரல்களையும் குணசீலன் தொடர்பாக இங்கு கேட்க முடிகிறது.

மாகாணசபைக்குள் சுகாதாரத்துறை தொடர்பான பல விவகாரங்களை கவனப்படுத்தியிருக்கிறார். ஆனால், மாகாணசபைக்குள் வலுவான குரலாக இவர் இல்லை. ஒரு வைத்தியராகவும், மக்கள் பிரதிநிதியாகவும் இரட்டை தோணியில் கால் வைத்திருப்பதால் வலுவான அரசியல் தலைவராக அவர் அடையாளப்படவில்லை.

மாகாணசபைக்குள் குழப்பம் ஏற்பட்டபோது, முதலமைச்சரிற்கு ஆதரவான அணியில் இருந்தார். ஆனாலும், கட்சியுடன் சுமுகமான உறவில் இல்லாததால், அவருக்கு அமைச்சு பதவி கொடுப்பது கட்சிக்கும் முழுமையான விருப்பமில்லை. இன்னொருமுறை ரெலோ சார்பில் போட்டியிடும் வாய்ப்பு இவருக்கு வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. அப்படி வழங்கப்படாவிட்டால் இரண்டு தெரிவுகள்தான் இவருக்குள்ளது. ஒன்று-தமிழரசுக்கட்சி சார்பில் களமிறங்குவது. ஏற்கனவே பிரிமூஸ் சிராய்வா அங்கிருக்கிறார். அங்கத்துவம் பெறாத தமிழரசுக் கட்சிக்காரராகி விட்டார் டெனிஸ்வரன். இவர்களை கடந்து தமிழரசுக்கட்சி வேட்பாளர் பட்டியலில் இடம்கிடைக்குமென்பது சிரமமானது.

இரண்டாவது- சுயேட்சையாக போட்டியிடுவது. எப்படியோ, மன்னாரில் தற்போதுள்ள மக்கள் பிரதிநிதிகள் அனைவர் மீதும் அதிருப்தியலையே அதிகமாக உள்ளது. திடீர் திருப்பங்கள் வந்தாலே அலை மாறும்.

இதேவேளை, குணசீலன் மீது சில நிதிக்குற்றச்சாட்டுக்கள் அவ்வப்போது எழுவது வழக்கம். மாகாணசபை குறித்தொதுக்கப்பட்ட நிதியில் துவிச்சக்கரவண்டி வாங்கியதில் தில்லுமுல்லு என ஒரு திடீர் பரபரப்பு எழுந்தது. தற்போது, அமைச்சு உதவியாளர்களின் கொடுப்பனவில் கைவைத்தார் என்பது புதிய குற்றச்சாட்டு. இதெல்லாம் அமைச்சை நிர்வகிப்பதில் அவருக்கு இடையூறை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

வடக்கு சுகாதார அமைச்சில் இரண்டாவது அமைச்சர் பதவியேற்ற பின்னரும் பெரிய மாற்றங்கள் நிகழவில்லை. அமைச்சை நிர்வகிப்பதற்குரிய ஆளுமை, குணசீலனிடம் கிடையாதென்ற விமர்சனங்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

எல்லா குறைபாட்டையும் ஒரு மாவீரர்நாள், முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் காணாமல்போக செய்யலாமென்ற வழக்கமான தமிழ் அரசியல் போர்முலாவில் அதிக மசாலாவை கலந்து ஸ்கோர் செய்யலாமென்பதை ஏற்கனவே செய்து காட்டியவர் குணசீலன். அது இனியும் கைகொடுக்குமா?

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here