என்ன செய்தார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்? 03

வடமாகாணசபை உறுப்பினர்களின் ஸ்கான் ரிப்போர்ட் 

இந்தவாரம் கந்தையா சர்வேஸ்வரன்

2013 இல் வடமாகாணசபை தேர்தல் முடிந்ததும் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள் பெரும் குத்துவெட்டு நடந்தது. அமைச்சு பதவிகளை யாருக்கு வழங்குவதென்பதில் பிரச்சனை. இதில் அதிகம் மல்லுக்கட்டியது ஈ.பி.ஆர்.எல்.எவ். அதன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது சகோதரரிற்கு அமைச்சு பதவி கொடுக்க வேண்டுமென மல்லுக்கட்டினார். சுரேஷிற்கு தண்ணீர்காட்டிய தலைமை, ஐங்கரநேசனை அமைச்சராக்கியது. அன்றிலிருந்து சுரேஷ் பிரேமச்சந்திரனும், ஐங்கரநேசனும் ஜென்மத்து பகைவர்கள்.

சுரேஷ் பிரேமச்சந்திரனின் பாராளுமன்ற தேர்தல் தோல்வி, வடக்கில் தமிழரசுக்கட்சியின் பிடி இறுகிக்கொண்டு வருதல் என ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் நிலைமை சிக்கலாகிக்கொண்டிருந்த சமயத்தில், வடமாகாணசபைக்குள் ஏற்பட்ட குழப்பம் அந்தக்கட்சிக்கு அதிர்ஸ்டக்காற்றை அடிக்க வைத்துள்ளது. “தனது தம்பிக்காக சுரேஷ் பிரேமச்சந்திரன் அமைச்சு பதவி கேட்டார்“ என அதிருப்திப்பட்ட முதல்வர், நான்கு வருடங்களின் பின்னர் அவரையே அமைச்சராக்கியுள்ளார். இப்பொழுது ஐங்கரநேசன் வெளியே, சர்வேஸ்வரன் உள்ளே.

வடக்கு கல்வியமைச்சராக பதவியேற்றுக்கொண்டுள்ள கந்தையா சர்வேஸ்வரன்தான் இந்த வார மக்கள் பிரதிநிதி.

ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் இளைய சகோதரனான சர்வேஸ்வரன், மாகாணசபை தேர்தலுடன் அரசியலுக்கு வந்தவர். யாழ்.மத்திய கல்லூரியில் பாடசாலைக்கல்வியை முடித்து, மொரட்டுவ பல்கலைகழகத்தில் அரசியல் விஞ்ஞானம் கற்றவர். கற்கைநெறியை பூர்த்தி செய்யாமல், இந்தியாவிற்கு சென்று ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தில் கலைமாமணி பட்டம் பெற்றார். கொழும்பு பல்கலைகழகத்தில் பகுதிநேர அரசியல் விஞ்ஞான விரிவுரையாளராக கடமையாற்றினார். மாகாணசபை தேர்தல் சமயத்தில் யாழ்ப்பாணம் வந்து, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு நியமனம் வழங்கப்பட்டபோதே கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது. கட்சிக்காக அர்ப்பணிப்பாக உழைத்தவர்களை தவிர்த்து, உறவுமுறையானவர்களை தலைமை நியமிக்கிறதென்ற விமர்சனம் அமைச்சர் விவகாரத்தில் பூதாகரமாக எழுந்திருந்தது. இன்றும் கட்சிக்குள் அப்படியான எண்ணம் இருக்கிறது. கட்சியின் மத்தியகுழுவின் தலைவராக கூட்டங்களை வழிநடத்தி வருகிறார். இதுவும் விமர்சனத்திற்குரிய ஒன்றாக இருக்கிறது.

அமைச்சு பதவி சர்ச்சையையடுத்து முதல்வரிற்கு எதிரான போக்கைத்தான் ஈ.பி.ஆர்.எல்.எவ் கடைப்பிடித்தது. முதல்வர் தமிழரசுக்கட்சிக்கு எதிராக கம்பு சுற்ற ஆரம்பித்த பின்னர், மாகாணசபைக்கு உள்ளும் வெளியும் முதல்வரை காப்பாற்றும் முன்னணி கவசஅரணாக அந்த கட்சி மாறியது. மாகாணசபைக்குள் உருவான முதல்வர் ஆதரவு அணியில் சர்வேஸ்வரனும் ஒருவர். முதல்வரிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சர்ச்சையின்போது, முதல்வரிற்கு ஆதரவாக கையெழுத்திட்டு ஆளுனரிடம் அதை சமர்ப்பித்தவர்களில் ஒருவர். இறுதியாக வடக்கு கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவல்கள் அமைச்சராக பதவியேற்றுள்ளார். இது சர்வேஸ்வரனின் அரசியல் பாதையில் வரைபடம்.

அவரது செயற்பாடு, செய்திறன் குறித்த பகுதிக் கலவையான அபிப்பிராயங்கள் உள்ளன. கோப்பாய், நீர்வேலி, கல்வியங்காடு, கொக்குவில், கோண்டாவில் உள்ளிட்ட அவரது பிரதேசத்தில் மக்களுடன் பேசியதில் துருத்திக்கொண்டு வெளிப்பட்டது- கட்சித்தலைவரின் சகோதரர் என்பதால் அவர் முக்கியத்துவப்படுத்தப்பட்டார் என்பது. அவரது செயற்பாட்டிற்கும், கட்சிக்குள் கிடைத்த முக்கியத்துவத்திற்குமிடையில் சமன்பாட்டை காணமுடியவில்லையென்பது பொதுஅபிப்பிராயம். விரிவுரையாளர் என்பதாலோ என்னவோ, அதிகம் பேசிக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள். எதாவது பிரச்சனை பற்றி பேசப்போனால், பேசிக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.

அவர் ஒரு கல்வியிலாளர் என்ற அபிப்பிராயம் பிரதேசத்தில் உள்ளது. எனினும், மாகாணசபை உறுப்பினராக எதையாவது சாதித்தாரா என்பதில் பதில் கூற முடியாத குழப்பத்தில் இருக்கிறார்கள்.

அதேவேளை, முன்னைய கல்வியமைச்சர் குருகுலராஜாவின் காலத்தில் தேங்கிப் போயிருந்த வடமாகாணசபை கல்வியமைச்சை சர்வேஸ்வரன்தான் ஓரளவு இயங்க வைத்துள்ளார் என்ற அபிப்பிராயம் அதிகாரிகள் மட்டத்தில் உள்ளது. முன்னைய கல்வியமைச்சர் குருகுலராஜாவை போல அலுவலகத்திற்குள்ளேயே முடங்கியிருக்காமல், பாடசாலைகள், அலுவலகங்களிற்கு தொடர் களவிஜயம் செய்து வருகிறார். தற்போதைய வடக்கு அமைச்சர்களில் வினைத்திறனான அமைச்சர் இவர்தான் என்றும் சொல்கிறார்கள்.

மாகாணசபை உறுப்பினராக இருந்த சர்வேஸ்வரனிற்கும், கல்வியமைச்சராக மாறிய சர்வேஸ்வரனிற்குமிடையில் நிறைய வித்தியாசமுள்ளதை கவனிக்க முடிகிறது.

வடக்கு அமைச்சர்கள் மீது அண்மையில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு கண்டறிந்த குற்றங்களில் ஒன்று- அப்போதைய கல்வியமைச்சர் குருகுலராஜா தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அதிபர் நியமனத்தில் தவறிழைத்தார் என்பது. அந்த விவகாரத்தை விசாரணைக்குழுவிற்கு எடுத்து சென்றவர் சர்வேஸ்வரன்.

இதேபோல கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் நியமன சர்ச்சை வடமாகாணசபைக்குள்ளும் எதிரொலித்தது. இந்தப்பாடசாலை அதிபர் நியமனத்திற்கான நேர்முகத்தில் இரண்டாமிடம் வந்த ப.கணேசனை அதிபராக கல்வியமைச்சு நியமித்தது. யாழ்ப்பாணத்தில் இரண்டாவது அதிக மாணவர் தொகையை கொண்ட பாடசாலையான அதை நிர்வகிக்க அவரே பொருத்தமானவர் என கல்வியமைச்சு கருதியது. முதலாமிடத்தை பெற்ற ஞானசம்பந்தனை அதிபராக நியமிக்க வேண்டுமென மாகாணசபையின் 86வது அமர்வில் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்தார். எனினும், முதலமைச்சரும் கணேசனை ஆதரித்ததாக தகவல். சர்வேஸ்வரன் கல்வியமைச்சரானதும், உடனடியாக ஞானசம்பந்தனிற்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவர் ஒரு முறையான நடவடிக்கையை செய்தபோதும், ஞானசம்பந்தன் அவரது உறவினர் என்பதால் அதிக முக்கியத்துவம் கொடுத்தார் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.

மாகாணசபை விவாதங்கள் அனைத்திலும் தவறாமல் கலந்துகொண்டு அனைத்தையும் விமர்சிப்பார். அதிகமாக பேசுபவர் என்ற அபிப்பிராயம் மாகாணசபைக்குள்ளும் இருக்கிறது. எல்லா துறைகளையும், எல்லா விடயங்களையும் கறாராக விமர்சிப்பார். அதிகம் பேசிக் கொண்டிருப்பதாலேயே, அவர் பேச ஆரம்பித்ததும் அவைத்தலைவர் கூட ஏனோதானோ மனநிலையில் மெல்லிய தியானநிலைக்கு செல்வதை அவதானிக்கலாம். அதிகம் பேசிக்கொண்டிருப்பதாலோ என்னவோ மாகாணசபைக்குள் குறிப்பிடத்தக்க ஆளுமையாக அவரால் உருவாக முடியவில்லை. சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் போன்ற பிற ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர்களிற்கு உள்ள ஜனவசியம் இவருக்கு இல்லை. அதிகம் பேசுவாரே தவிர, கூட்டத்தை கட்டிப்போடும் பேச்சாளருமல்ல. செயற்பாட்டாளருமல்ல. அப்படி பார்த்தால், மாகாணசபையில் இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகளுடன் இன்னொரு பிரதிநிதிதான்.

இவரது அரசியல் பயணம், மாகாணசபை ஒதுக்கீடுகளை செலவிடும் முறையும் எல்லோரையும்போல, மரபான- வாக்கை எதிர்பார்த்த பாணியைத்தான் பின்பற்றுகிறார். மக்களை நெருங்கிச் செல்வதில் இளம் மாகாணசபை உறுப்பினர்கள் அதிக ஸ்கோர் செய்துகொண்டிருக்க, இவர் தடுமாறிக்கொண்டிருக்கிறார்.

அமைச்சு பதவியை பொறுப்பேற்று சிறிதுகாலம்தான் ஆகிறது. அதனால் அதைப்பற்றி பேசுவது பொருத்தமல்ல. கல்வியில் வடக்கு கடைசி இடத்தில் இருக்கிறது. அதை தூக்கி நிறுத்துவதென்பது சாதாரண காரியமல்ல. ஓரளவு வினைத்திறனுள்ள அமைச்சராக இருந்தாலும், வடக்கு கல்வித்துறையில் ஏதாவது மாற்றங்களை செய்ய அவருக்கு போதிய அவகாசம் இருக்கிறதா என்பதே கேள்வி.

 

 

 

 

 

 

Loading...

1 COMMENT

  1. சொந்த நலன்கருதி உறவினர்கள், கட்சியாளர்கள், தெரிந்தவர்கள்தான் பதவியில். இதை ஆங்கிலத்தில் நெபொடிசும் என்று கூறுவார்கள். இறுதியில் மக்களுக்கு சொந்தமான அரசியல் விவகாரம், யாருடையதோ குடும்ப விவகாரமாக முடிந்துவிடும். மக்கள் சுவாரசியமான ஊடகச் செய்திகளைப் பார்ப்பதும், கேட்பதும், வாசிப்பதும் தான் முடிவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here