மலேசியா: பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட அரசியல் தலைவர் அன்வர் இப்ராஹிம் விடுதலை

மலேசிய அரசியல் தலைவர் அன்வர் இப்ராஹிம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அவர் அரசியலுக்குத் திரும்புவதற்கான வழி உருவாகியுள்ளது.

ஒரு காலத்தில் ஆளுமைமிக்க எதிர்கால தலைவராக பார்க்கப்பட்ட அவர், பாலியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

அன்வார் இப்ராஹிமிற்கு பொது மன்னிப்பு வழங்கும்படி, மலேசிய பிரதமர் மகாதீர் முகமது கோரியிருந்தார். பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதையடுத்து, இப்ராஹிம் இன்று விடுவிக்கப்பட்டார்.

தற்போது பிரதமர் பதவியை ஏற்றுள்ள மகாதீர் முகமது, இரண்டு வருட காலத்திற்குள் பிரதமர் பதவியை அன்வர் இப்ராஹிமிற்கு விட்டுத்தருவதாக உறுதியளித்துள்ளார்.

அன்வர் இப்ராஹிம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் முறையாகச் சிறையில் அடைக்கப்பட்டார். போலியான பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக தான் சிறையில் அடைக்கப்பட்டதாக அன்வர் கூறியிருந்தார்.

சமீபத்தில் நடந்த தேர்தலில், மலேசியா சுதந்திரமடைந்தது முதல் ஆட்சி செய்து வந்த பேரீஸான் நேஷ்னல் கட்சியை இப்ராஹிம் பல ஆண்டுகளாகத் தலைமை ஏற்றுவந்த எதிர்கட்சியை உள்ளடக்கிய கூட்டணி தோற்கடித்தது.

அன்வர் இப்ராஹிமின் மனைவியுடன் மகாதீர் முகமது   –  Getty Images

20 ஆண்டுகளுக்கு முன்னர் மகாதீர் முகமது முதல்முறையாகப் பிரதமர் பதவியில் இருந்தபோது, அன்வர் இப்ராஹிமை பதவிநீக்கம் செய்து சிறையில் அடைத்தார். ஆனால்,சமீபத்திய தேர்தல் வெற்றிக்கு பிறகு 92 வயதான மகாதீர் மற்றும் அன்வர் இடையே சமரசம் ஏற்பட்டது.

மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் சிசிச்சை பெற்றுவந்த அன்வர், இன்று வெளியேறினார்.

மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்த அன்வரின் ஆதரவாளர்கள், அவரை இஸ்தானே நெகாரா அரச அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குதான் மகாதீர் முகமதை அன்வர் சந்திக்க உள்ளார்.

 

மகாதிர் மற்றும் அன்வார் இடையிலான உறவு அசாதாரண திருப்பங்களை கொண்டது.

1990களில் அவர்கள் இருவரும் அரசியல் கூட்டாளிகளாக இருந்தனர். அப்போது மகாதீர் பிரதமாகவும், அன்வர் துணை பிரதமராகவும் இருந்தார்

ஆனால், 1998-ம் ஆண்டு பதவியில் இருந்து நீக்கப்பட்ட அன்வர், அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியாக சிறையில் அடைக்கப்பட்டார். 2000-ம் ஆண்டு அவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், 9 ஆண்டுகள் கூடுதல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

2004-ம் ஆண்டு அன்வரின் தண்டனை ரத்து செய்யப்பட்டது. சிறையில் இருந்து வெளியே வந்த அவர், எதிர்க்கட்சியினை தலைமை தாங்கினார். 2008 மற்றும் 2013ல் நடந்த பொது தேர்தலில், அன்வர் தலைமையிலான எதிர்க்கட்சி சிறு வெற்றியைப் பெற்றது.

ஒரு வருடம் கழித்து, ஒரு மாநில தேர்தலில் அன்வர் போட்டியிட்டார். அங்கு அவர் வெற்றி பெறும் சூழல் இருந்த நிலையில், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் மலேசிய அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. அன்வரின் முன்னாள் எதிரியான மகாதீர், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மீண்டும் பிரதமர் பதவிக்குப் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

அன்வருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு மகாதீர் ஒப்புக்கொண்டதால், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு அவர் தலைமை தாங்க அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்ட மகாதீர், இரண்டு வருடத்திற்குள் பிரதமர் பதவியை அன்வரிடம் அளிக்க உள்ளதாகவும் கூறியிருந்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here