என்ன செய்தார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்? 02

வடமாகாணசபை உறுப்பினர்களின் ஸ்கான் ரிப்போர்ட் 

இந்தவாரம் சிவக்கொழுந்து அகிலதாஸ்

வடக்கு மாகாணசபை தேர்தல் சமயத்தில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தார். சிலபல சலுகைகளை வீசியெறிந்து தமிழர்களின் வாக்குகளை சுளையாக அள்ளிச்செல்லாம் என கணக்குப் போட்டிருந்தார். அவர் எள் என்றால், தம்பி பசில் ராஜபக்ச எண்ணெயாக நிற்பார். காசு, பணம், துட்டு, மணி… மணியென்பதுதான் அவரது ஒரே பொலிற்றிக்கல் பொலிசி.

தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து ஆட்களை பிய்த்து எடுக்கிறோம்… யாழ்ப்பாணத்தில் வேட்பாளர்களை நிறுத்துகிறோம்.. ஸ்ரெயிற்றாக சி.எம் சீற்றில் போய் உட்கார்கிறோம் என்பதுதான் பசிலின் ஒரு வரி அரசியல்.

பசிலின் கனவெல்லாம் சரி, ஆனால் அப்பொழுது யாழ்ப்பாணத்தில் சுதந்திரக்கட்சிக்குள் ஒரு சிக்கல் வந்தது. யார் உண்மையான சுதந்திரக்கட்சி? அப்பொழுது அங்கஜன் இராமநாதன் சுதந்திரக்கட்சி அமைப்பாளராக இருந்தார். மகிந்த ஹத்துருசிங்க யாழ்மாவட்ட இராணுவத் தளபதியாக இருந்தார். எதையும் இராணுவத்தின் ஊடாக சிந்தித்து பழக்கப்பட்ட மகிந்த முகாமில், வடக்கு தேர்தலை புத்திசாலித்தனமாக எதிர்கொள்ள முடியவில்லை. வடக்கு நிலவரங்களையும் சரியாக எடைபோடவில்லை. சில குழப்பங்கள், தம்முடன் நெருக்கமானவர்களின் நியமனங்களின் மூலம் வடக்கை கைப்பற்றலாமென, வானத்துக்கு ஏணி வைத்து ஏறும் திட்டம் போட்டனர்.

சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் பட்டியல் தயாரானது. அதில் யாழ்மாவட்ட சுதந்திரக்கட்சி சிலரை தேர்வு செய்தது. மகிந்த ஹத்துருசிங்க, உள்ளூரில் பிரபலம் என கொஞ்ச வேட்பாளர்களை களமிறக்கினார். அத்தனை பேரும் சுனாமியில் அள்ளுண்டு போனவர்களாக தமிழ்தேசியக்கூட்டமைப்பின் வெற்றி அலையில் அள்ளுண்டு போனார்கள்.

இவர்களில் ஒருவர்தான் சிவக்கொழுந்து அகிலதாஸ்.

நெல்லியடியை சேர்ந்த வர்த்தகர். அப்போது மாகாணசபை தேர்தலில் மோசமாக தோற்றாலும், அதிர்ஸ்டம் வேறு வடிவத்தில் வந்து கைதட்டியது. மாகாணசபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவருக்கு தேசியப்பட்டியல் நியமனம் கிடைத்தது. அந்த வெற்றிடத்திற்கு தேர்வானார் அகிலதாஸ்.

அகிலதாஸ் எந்த அரசியல் செயற்பாட்டியக்கத்திலிருந்தும் உருவானவர் அல்ல. கட்சி செயற்பாட்டாளருமல்ல. பொதுவாழ்விற்குரிய எந்த வெளிப்பாட்டையும் கடந்தகாலத்தில் வெளிப்படுத்தியவர் அல்ல. ஆனாலும், வடக்கின் அப்போதைய சூழ்நிலை அவரை அரசியல்வாதியாக்கியது.

நெல்லியடி நகரில் புடவை வர்த்தக நிலையம் நடத்தி வந்ததுதான் அகிலதாஸின் ஒரே அடையாளம். ஒருகாலத்தில் வர்த்தகத்தில் நன்றாக இருந்தார். பின்னர் வர்த்தகம் நொடிந்து கடனிலிருந்த சமயத்தில் அரசியலுக்கு வந்தார், இராணுவத்துடன் நெருக்கமாக இருந்தார் என்ற அபிப்பிராயங்கள் பிரதேச மக்கள் பெரும்பாலானவர்களிடம் இன்றும் இருக்கிறது. இதுவரையான அவரது அரசியல் பயணத்தில் இன்னும் அழித்துக்கொள்ளாத விமர்சனக்கறைகள் அவை. கடனை அடைக்கவே இராணுவத்தின் ஊடாக அரசியலுக்கு வந்தார் என்றும் சொல்கிறார்கள்.

அங்கஜன் பாராளுமன்ற உறுப்பினரான சமயத்தில் அகிலதாஸை அந்த இடத்தில் உட்கார வைத்தார். சிறிதுகாலம் இருவரும் நெருக்கமாக இருந்தார்கள். திடீரென மாகாணசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார். பின்னர், ”என்னை அங்கஜன் ஆட்கள் கடத்தி வைத்து அடிக்கிறார்கள். மிரட்டலால்தான் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டேன்“ என்றபடி கொழும்புக்கு சென்று முகாமிட்டார். லஞ்சம் பெற்றார் என அங்கஜன் குற்றம்சாட்ட, இவர் பதில் குற்றம்சாட்ட ஒரே அக்கப்போராக இருந்தது.

அங்கஜனில் புகார் சொன்னபடி கொழும்பிற்கு சென்ற சமயத்தில் இவரது பேஸ்புக் மட்டும்தான் ஓய்வில்லாமல் இயங்கியது. இந்த சமயத்தில் ஏற்பட்ட நெருக்கமோ என்னவோ, சுதந்திரக்கட்சி முக்கியஸ்தர்களுடன் தனக்கும் நெருக்கமுள்ளதாக ஊரில் காண்பித்து கொண்டார். இதன்பின்னர் அங்கஜனிற்கு போட்டியாக இன்னொரு சுதந்திரக்கட்சி மையத்தை நிறுவ முயன்றுகொண்டிருக்கிறார்.

கட்சிக்குள் நமக்கும் போட்டியோ என்னவோ, மாகாணசபைக்குள் குறிப்பிடத்தகுந்த ஆளுமையாக அகிலதாஸ் நிறுவிக்கொள்ளவில்லை. அல்லது, கடந்த ஒரு வருடத்தில் மாகாணசபைக்குள் தீவிரமடைந்திருந்த குழப்பங்கள், எதிர்க்கட்சிகளின் பாத்திரத்தை இல்லாமல் செய்திருக்கலாம்.

மாகாணசபைக்குள் குறிப்பிடத்தக்க உரையாற்றியதாகவோ, பிரேரணை சமர்ப்பித்ததாகவோ பதிவுகள் இல்லை. மாகாணசபைக்கு சென்றுவரும் உறுப்பினர்களில் ஒருவராக மட்டுமேயிருக்கிறார். எனினும், அண்மைக்காலத்தில் உள்ளூரில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு சிறியளவான உதவிகளை வழங்கி வருகிறார்.

எனினும், அவரது செயற்பாட்டின் போதாமையோ என்னவோ தெரியவில்லை- உள்ளூரில் அகிலதாஸ் குறித்த அபிப்பிராயத்தில் தொய்வு நிலை இருக்கிறது. யார் சுதந்திரக்கட்சி அமைப்பாளர் என்பதில் போட்டியிடுவதை விடுத்து, சொந்த பிரதேசத்திலாவது  தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதை எம்முடன் பேசிய பலரும் தெரிவித்தார்கள். அகிலதாஸின் பிரதான பலவீனமே அதுதான்.

நெல்லியடி வர்த்தகர் சங்கத்தின் தலைவராக முன்னர் இருந்தபோதும், தற்போது வர்த்தகர் சங்கமும் அவரது முழுமையான கட்டுப்பாட்டில் இல்லை. அவருக்கு வர்த்தகர் மத்தியிலேயே முழுமையான ஆதரவில்லை. வடக்கு முதலமைச்சரிற்கு எதிரான நிலைப்பாட்டையே அகிலதாசும் எடுத்துள்ளார் என்ற தகவல் பரவியதும் உள்ளூரில் அதிருப்தியை அதிகரித்தது. வடமாகாண சர்ச்சை தொடர்பான விளக்கமளிப்பெதையும் அவர் பிரதேசத்தில் செய்யவில்லை. முதலமைச்சரிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் இவர் கையெழுத்திட்டிருக்காவிட்டாலும், கையொப்பமிட இரகசியமாக சம்மதித்திருந்தார்.

அகிலதாஸ் செய்வது கிட்டத்தட்ட பசில் ராஜபக்சவின் அரசியல் என்பது உள்ளூரிலுள்ள விமர்சனம். நிகழ்வுகளில் முன்னுக்கு தலைகாட்டுவது, உள்ளூரில் சில குடும்பங்களிற்கு உதவிகள் வழங்குவது என்றுதான் அரசியல் செய்கிறார், அரசியலிலும் கடுமையாக உழைக்க வேண்டுமென்பதை பிரதேசமக்கள் பலர் சொல்கிறார்கள்.

 

 

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here