ரிசாட் பதியுதீனை வெறியேற்றுங்கள்; ஐ.தே.க முக்கியஸ்தர்கள் விடாப்பிடி: ரணில் நெருக்கடியில்!

அமைச்சர் ரிசாட் பதியுதீனிடமிருந்து அமைச்சு பதவியை பறிப்பதுடன், அவரை ஐக்கிய தேசிய முன்னணிக்குள்ளிருந்து வெளியேற்ற வேண்டுமென்ற உள்ளக எதிர்ப்பு வலுத்து வருவதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.

சில தினங்களிற்கு முன், நடந்த ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த கோரிக்கை வலுவாக முன்வைக்கப்பட்டது. இதனால் பிரதமர ரணில் விக்ரமசிங்க தர்மசங்கடமான சூழ்நிலையை எதிர்கொண்டார்.

சில தினங்களின் முன்னர் ஐ.தே.மு நாடாளுமன்ற குழு கூட்டம் நடந்தபோது, ரிசாட் பதியுதீன் தொடர்பான கடுமையான நிலைப்பாட்டை, அமைச்சர் நவீன் திசாநாயக்க வெளிப்படுத்தினார் என்பதை தமிழ்பக்கம் அறிந்தது. இதன்போது, அமைச்சர் ரிசாட் பதியுதீன் கூட்டத்தில் இருக்கவில்லை.

உயிர்த்த ஞாயிறு வன்முறைக்கு சில முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் பொறுப்பு கூற வேண்டுமென நேரடியாகவே குற்றம்சுமத்திய நவீன், அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீதும் சரமாரியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அவரை அமைச்சு பதிவியிலிருந்தும், கூட்டணியிலிருந்தும் வெளியேற்ற வேண்டுமென வலியுறுத்தினார்.

நவீனின் கருத்திற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட கணிசமானவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

எனினும், ரணில் விக்கிரமசிங்க கூட்டத்தை சமாளிக்கும் விதமாக, “ரிசாட் மீது எந்த குற்றச்சாட்டும் நிரூபணமாகவில்லை. சில சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த- ஆரம்ப நிலையிலேயே- எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுக்க தேவையில்லை. விசாரணைகள் நடக்கட்டும். அதன் முடிவுகளை பார்த்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம்“ என்றார்.

எனினும், கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இதனால் திருப்தியடையவில்லை. தமது அதிருப்தியை தெரிவித்தனர். நவீன் திசாநாயக்கா அமைதியடையாமல் மீண்டும், தனது நிலைப்பாட்டை தெரிவித்தார்.

நவீன் சரமாரியான குற்றச்சாட்டுக்களை ரிசாட் மீது சுமத்திக் கொண்டிருந்தபோது, கூட்ட மண்டபத்திற்குள் ரிசாட் பதியுதீன் நுழைந்தார். அவர் நுழைவதை கவனிக்காமல் நவீன் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தார்.

தன் மீதான குற்றச்சாட்டுக்களால் கோபமடைந்த ரிசாட் பதியுதீன், காரசாரமாக பதிலளிக்க, நவீன்- ரிசாட் வாய்த்தர்க்கம் உருவானது. மிகுந்த பிரயத்தனத்தின் மத்தியில் அவர்களை சமரப்படுத்திய ரணில், கூட்டத்தை சுமுகமாக முடிக்க பெரும் சிரமப்பட்டார்.

குண்டுவெடிப்பை தொடர்ந்து எழுந்துள்ள புதிய நிலைமையில், தமது வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படுமென ஐ.தே.க முக்கியஸ்தர்கள் கருதுவதாக தெரிகிறது. சில முஸ்லிம் தலைவர்கள் மீது ஏற்கனவே வெறுப்பு பிரச்சாரங்கள் தெற்கில் தீவிரமாக நடத்தப்பட்டு, அவர்கள் தொடர்பான எதிர்மறை அப்பிராயம் உருவாக்கப்பட்டுள்ளது. சில ஊடகங்களும் இதை கச்சிதமாக செய்திருந்தன.

இந்தநிலையில், ரிசாட் பதியுதீனை கூட்டணிக்குள்ளிருந்து வெளியேற்ற வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here