என்ன செய்தார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்? 01

வடமாகாணசபை உறுப்பினர்களின் ஸ்கான் ரிப்போர்ட்

இந்தவாரம் ச.சுகிர்தன்

யாழ்ப்பாணத்து வீதிகளில் “இனம்தெரியாத“ ஆயுததாரிகள் கண்மூடித்தனமாக தமிழர்களை சுட்டுக்கொன்று கொண்டு திரிந்த காலகட்டம். மாலையானால் அமுலாகும் ஊரடங்கு அதிகாலையின் பின்னர்தான் விலகும். யாழ்ப்பாண பத்திரிகைகளிற்கு சவாலான காலகட்டம் அது. பத்திரிகைகளை முடக்கும் நோக்கத்துடன் விநியோகஸ்தர்கள் மீது தாக்குதல், பத்திரிகைகளை எரித்தல் என பத்திரிகை விநியோகஸ்தர்களிற்கு உயிருக்கு உத்தரவாதமில்லாத காலகட்டம் அது.

யாழ்ப்பாணத்திலுள்ள பத்திரிகையொன்றின் விநியோகபிரிவில் அப்பொழுது ஒரு இளைஞன் துடிப்பாக பணியாற்றிக்கொண்டிருந்தார். அதிகாலை ஊரடங்கு விலக்கப்பட்டதும், பத்திரிகையுடன் புறப்பட்டார். யாழ்ப்பாணத்தின் புறநகரொன்றில் இனந்தெரியாத ஆயுததாரிகளிடம் சிக்கி, மயிரிழையில் உயிர்தப்பினார். அந்த பத்திரிகையில் சாதாரண ஊழியராக இணைந்து, விரைவில் பத்திரிகையின் நிர்வாகப்பகுதியை கட்டுப்படுத்தும் ஆளுமையாக வளர்ந்தார் அந்த இளைஞன்.

அவர்தான் சந்திரலிங்கம் சுகிர்தன்.

வடமராட்சி கிழக்கு குடத்தனை சுகிர்தனின் பிறப்பிடம். பல்கலைகழகத்திற்கு தெரிவாகி, பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றி, 2013 மாகாணசபை தேர்தலில் களமிறங்கினார். தேர்தல்களில் பரிச்சயமான முகமாக இல்லாமல் இருந்தபோதும் வெற்றிபெற்றார். வடமாகாணசபையில் உள்ள உறுப்பினர்களில் தேர்தலில் வெற்றிபெற்ற வயதில் இளைய உறுப்பினர் இவர்தான்.

வடமாகாணசபையிலுள்ள செயற்திறன்மிக்க உறுப்பினர்களில் சுகிர்தன் முதன்மையானவர் என்பதை பலரும் ஏற்றுக்கொள்கிறார்கள். தமது ஒதுக்கீட்டு நிதிகளை பகிர்ந்தளித்துவிட்டு, நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்களாக வடமராட்சியின் பெரும்பாலான மாகாணசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இலகுவில் மக்களை, இளைஞர்களை சென்றடையும் உத்தியும், செயல்திறனும் அவர்களிடம் குறைவாக இருக்க, கிடைத்த வாய்ப்பில் நன்றாக அடித்தாடிக் கொண்டிருக்கிறார் சுகிர்தன்.

அரசியல் நெளிவுசுளிவுகளும் இளவயதில் கைகூடிவர, கட்சிக்குள்ளும், மக்களிற்குள்ளும் தன்னை பலப்படுத்தி வருகிறார். மாகாணசபைக்குள் முதலமைச்சர் அணி, தமிழரசுக்கட்சி அணி என்ற பிளவு பலகாலமாக இருந்து வருகிறது. சில சமயங்களில் பரஸ்பரம் இரண்டு அணி உறுப்பினர்களும் முகத்தை திருப்பிக்கொண்டு செல்லும் சம்பவங்கள் எல்லாம் நடப்பதுண்டு. ஆனால் மாகாணசபையில் எல்லோருடனும் சுமுகமான உறவை பேணுவதில் சுகிர்தன் கவனம் செலுத்துகிறார். எனினும், முதலமைச்சரிற்கு எதிரான சுமந்திரன் அணியில் இருக்கிறார் என்ற விமர்சனம் அவரை அடிக்கடி சேதப்படுத்துகிறது. முதலமைச்சரிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டு, பெயரை கெடுத்துக் கொண்டார்.

அதை தவிர்த்தால், மக்கள் மத்தியிலும் அவர் பற்றிய எதிர்மறை அபிப்பிராயங்கள் இருக்கவில்லை. யாரும் எளிமையாக அணுகலாம், பிரச்சனைகளை அக்கறையுடன் கேட்டு நடவடிக்கை எடுக்கிறார் என்கிறார்கள் மக்கள். 2013இல் தேர்தல் அரசியலிற்கு வந்தாலும், எளிமையான, மக்களிற்குள் இறங்கி வேலை செய்யும் இயல்புகளால் வடமராட்சியில் நன்கு பரிச்சயமானவராகி விட்டார். வடமராட்சியிலிருந்து தேர்வான மாகாணசபை உறுப்பினர்களில் அதிகம் ஸ்கோர் செய்ததென்றால் சுகிர்தன்தான்.

வடமராட்சி கிழக்கில் நீண்டகாலமாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவிவந்தது. பல்வேறு காரணங்களால் அங்கு கடமைபுரிய ஆசிரியர்கள் தயக்கம்காட்டினார்கள். இப்பொழுது ஆசிரியர் பற்றாக்குறை பெருமளவு தீர்த்துவைக்கப்பட்டு விட்டது. இதில் சுகிர்தனின் பங்கு பெரியதென்கிறார்கள் அங்குள்ள கல்வித்துறையினர்.

அரசசேவைக்கு ஆட்களை உள்ளீர்ப்பதற்கு பேணப்பட்ட வயதெல்லை பொருத்தமானதில்லையென்பது முழு இலங்கைக்குமான பிரச்சனையாக இருந்தது. பல்கலைகழகங்களில் பட்டம்பெற்று வெளிவருபவர்களிற்கு உடனடியாக வேலை கிடைப்பதில்லை. பல்கலைகழகங்களிற்கு தகுதிபெறாதவர்களிற்கும் இதுதான் நிலை. காத்திருந்து வயது அதிகரித்தவர்களிற்கு, வயதெல்லை பிரச்சனையாகி அரசவேலைவாய்ப்பே கனவாகி விடுகிறது. வடமாகாணசபைதான் முதலில் ஆட்களை உள்ளீர்ப்பதில் வயதெல்லையை அதிகரித்திருந்தது. இது தொடர்பான பிரேரணையை மாகாணசபையில் சமர்ப்பித்தது சுகிர்தன்.

வடக்கில் நடந்த மிகப்பெரிய ஊழல்மோசடிகளில் ஒன்றாக கருதப்படுகிறது நெல்சிப் ஊழல். தற்போது நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவின் விசாரணையில் இந்த விவகாரம் இருந்து வருகிறது. வல்வெட்டித்துறை, பருத்தித்துறை உள்ளூராட்சிமன்றங்களில் நடந்த மோசடிகளை அம்பலப்படுத்தியதன் மூலமே மொத்த ஊழலும் அம்பலமானது. சிவாஜிலிங்கம், சுகிர்தன் ஆகியோரே அந்த இரண்டு சபைகளின் ஊழலையும் அம்பலப்படுத்தியிருந்தனர்.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களிற்கு நினைவுச்சின்னம் அமைப்பது பற்றி மாகாணசபையில் இப்பொழுது தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் முன்னோடியாக மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் படுகொலை நினைவுச்சின்னம் ஒன்று நாகர்கோவிலில் அமைக்கப்பட்டது. அந்தபாடசாலையின் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் நினைவாக நினைவுச்சின்னம் ஒன்று அமைக்கப்பட்டது. இதை அமைத்ததில் சுகிர்தன்தான் முக்கிய பங்காற்றினார்.

மாகாணசபை அமர்வுகளில் அதிகம் பங்குபெறுவதுடன், விவாதங்களில் அதிகம் ஈடுபடுபவர்களில் சுகிர்தனும் ஒருவர். மாகாணத்தில் இடம்பெறும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறார்.

சமூக ஊடகங்களில் தமிழரசுக்கட்சியின் நடவடிக்கைகளை கழுவி ஊற்றுவார்கள். சமூக ஊடகங்களில் உள்ள கட்சி உறுப்பினர்களை பலவந்தமாக இழுத்துவைத்து அடித்து துவைப்பார்கள். சமூக ஊடகவாசிகளிடம் பிடிகொடுக்காமல் தற்போதைய தமிழரசுக்கட்சி அரசியலை செய்வது என்பது கயிற்றில் நடக்கும் வித்தையை போன்றது. தமிழரசுக்கட்சி மாகாணசபை உறுப்பினர்களில் அதை வெற்றிகரமாக செய்வது சுகிர்தன்தான். அவர் தனது அணியா இல்லையா என்பது சமயங்களில் சுமந்திரனுக்கே குழப்பத்தை ஏற்படுத்துவதை போல, அணிகளிற்குள் பிடி கொடாமல் செயற்படுவார்.

வடமாகாணசபை நம்பிக்கையில்லா தீர்மானத்தை தொடர்ந்து பல உறுப்பினர்கள் தமது பிரதேசங்களிற்கு, அலுவலகங்களிற்கு செல்லாமல் தவிர்த்து வந்தனர். மக்களின் அபிப்பிராயம் எப்படியிருக்குமென்பதை எதிர்கொள்வதில் தயக்கமிருந்திருக்கலாம். எனினும், சுகிர்தன் அரசியல் கொந்தளிப்பிற்குமிடையில் வடமராட்சியில் இளைஞர்களை சந்தித்து, மக்களின் அபிப்பிராயங்களை கேட்டிருந்தார். பொதுமக்களின் அப்பிராயங்களை கேட்பதில் அதிக அக்கறை காண்பிக்கிறார் என்கிறார்கள் அங்குள்ள இளைஞர்கள்.

வடக்கு மாகாணசபை சர்ச்சையில் சுகிர்தனின் நிலைப்பாடு தொடர்பாக இரண்டுவிதமான அபிப்பிராயமும் பிரதேச மக்களிடம் இருப்பதை அவதானிக்க முடிகிறது. சமூக ஊடகங்களிலும் அது எதிரொலித்தது. இதை தவிர்த்தால், வடமராட்சியில் சுகிர்தன் தொடர்பான சாதகமான அபிப்பிராயமே உள்ளது. எல்லா மக்கள் பிரதிநிதிகளிற்கும் கிடைக்காத வாய்ப்பிது!

 

 

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here