முள்ளிவாய்க்காலில் பெரும் குழப்பம்: ஜனநாயக போராளிகள், பல்கலைகழக மாணவர்கள் ரகளை!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் இன்று திடீர் குழப்பத்தை ஜனநாயக போராளிகள், யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் கூட்டாக ஏற்படுத்தியுள்ளனர். வடமாகாணசபையோ, யாழ்ப்பாண பல்கலைகழகமோ இதில் தலையிட முடியாது, தமது பொறுப்பிலேயே அனைத்தும் நடைபெற வேண்டுமென இன்று திடீர் குழப்பத்தில் ஜனநாயக போராளிகளும், இவர்கள் யாரும் தலையிட முடியாதென பல்கலைகழக மாணவர்களும் ரகளையில் ஈடுபட்டனர். முள்ளிவாய்க்காலில் இன்று மாலை ஏற்பட்ட இந்த திடீர் குழப்பத்தால் பெரும் அதிர்ச்சியேற்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாடுகள் இன்று முழுவதும் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது. ஜனநாயக போராளிகள், பல்கலைகழக மாணவர்கள் இரண்டு தரப்பும் கூட்டாக இணைந்து உள்ளக ஒழுங்குகளை- நினைவிடத்தை அலங்கரிப்பது, பந்தமேற்றுவது போன்ற ஒழுங்குகளை பல்கலைகழக மாணவர்கள் செய்வதென முன்னர் தீர்மானிக்கப்பட்டு, பல்கலைகழக மாணவர்களை சந்திப்பிற்கு வடமாகாணசபையால் அழைப்பு விடுவிக்கப்பட்டது.

எனினும், அந்த சந்திப்பை பல்கலைகழக மாணவர்கள் நிராகரித்திருந்தனர்.  இதையடுத்து, ஜனநாயக போராளிகளிடம் இந்த பொறுப்பு வழங்கப்பட்டது.

ஆனால், நேற்று முன்தினமும் நேற்றும் குழப்பத்தை முடித்து வழிக்கு வந்த மாணவர்கள், வடமாகாணசபையின் ஒழுங்கமைப்பில் நிகழ்வை நடத்த சம்மதித்திருந்தனர். இதையடுத்து, உள்ளக ஒழுங்குகள் ஜனநாயக போராளிகள் மற்றும் பல்கலைகழக மாணவர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது.

இன்று காலையிலிருந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாடுகள் முள்ளிவாய்க்காலில் நடந்து வருகிறது. ஜனநாயக போராளிகள், பல்கலைகழக மாணவர்கள் இரண்டு தரப்பும் அங்கு இந்த பணிகளில் ஈடுபடுகின்றனர். பல்கலைகழக மாணவர்கள் வருவதற்கு முன்னரே ஜனநாயக போராளிகள் கணிசமான வேலையை ஆரம்பித்திருந்தனர்.

நினைவேந்தல் இடத்தின் உள்ளக ஒழுங்கை ஏற்றுக்கொண்ட இரண்டு தரப்பும் இன்று அங்கு நேரில் பேசிக்கொள்ளவில்லை. ஆளையாள் பார்க்காமல் இரண்டு முகாமாக இயங்கினார்கள். தாங்கள் பேச முயன்றபோதும், பல்கலைகழக மாணவர்கள் ஒதுங்கிச்சென்று தனி முகாமாக இயங்கிவருவதாக ஜனநாயக போராளிகள் குற்றம்சுமத்தினர்.

இன்று முதலமைச்சர், சீ.வீ.கே.சிவஞானம், பஷீர் காக்கா உள்ளிட்ட பலர் அங்கு சென்று இரண்டு தரப்பையும் ஒற்றுமையாக்க முயன்றபோதும், மாலை 7.00 மணி கடந்தும் இரண்டு தரப்பின் ரகளையும் முடியவில்லை.

ஜனநாயக போராளிகளை போலவே, வடக்கு முதலமைச்சருடனும் பல்கலைகழக மாணவர்கள் பேச ஆர்வம் காட்டவில்லை.

அங்கு ரகளையான சூழல் நிலவியதையடுத்து, இரண்டு தரப்பையும் இணங்கி செயற்படுமாறு முதலமைச்சர் ஆலோசனை வழங்கிவிட்டு வெளியேறிவிட்டார். சீ.வீ.கே.சிவஞானம், பஷீர் காக்கா ஆகியோரின் சமரச முயற்சிகளும் பலனளிக்காத நிலையில், அவர்களும் வெளியேறிவிட்டனர்.

ஜனநாயக போராளிகள்தான் இந்த நிகழ்வை குழப்பும் விதமாக நடக்கிறார்கள் என பல்கலைகழக மாணவர்கள் குற்றம்சுமத்தினர்.

நாளையதினம் முல்லைத்தீவை சேர்ந்த சில பொதுஅமைப்புக்களின் பெயரில் பல்கலைகழக மாணவர்கள் ஒரு பகிரங்க ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி, மாணவர்களின் பின்னால் வடமாகாணசபை செல்ல வேண்டுமென வலியுறுத்த திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதேவேளை, இன்று முள்ளிவாய்க்காலில் நின்றவர்களின் தகவல்படி – நினைவேந்தல் நிகழ்வில் வடமாகாணசபைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபடலாமென தோன்றுவதாக கூறினார்கள்.

இராணுவ புலனாய்வுத்துறையின் பின்னணியில் ஜனநாயக போராளிகள் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல, அதிதீவிர நிலைப்பாடுடைய தலைமைசெயலக அணியால் நிதி வழங்கப்பட்டு பல்கலைகழக மாணவர்கள் வழிநடத்தப்படுகிறார்கள். ஆக மொத்தத்தில் இரண்டு தரப்பின் தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலில், தமிழர்களின் இனப்படுகொலை நினைவேந்தல் குழப்பமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here