அமைச்சருக்கு தெரியாமல் தயாரிக்கப்பட்ட இடமாற்ற பட்டியல்: வடமாகாணத்தில் அடுத்த பூகம்பம்!

0

வவுனியா பிரதிவிவசாய பணிப்பாளர் த.யோகேஸ்வரனின் இடமாற்றத்தை நிறுத்துமாறு கோரி, வவுனியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வடமாகாணசபை உறுப்பினர்கள் சிலர் கடிதமொன்றை அனுப்பியிருந்தது தொடர்பாக நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த லிங்கை கிளிக் செய்து அதை படிக்கலாம்

இந்த இடமாற்ற விவகாரத்தின் பின்னால் அதிர்ச்சியளிக்கும் பல தகவல்கள், ஊழல்கள், அரசியல் காரணங்கள் உள்ளன. வெளியில் தெரியாமல் நடந்த இந்த சம்பவங்களை அப்படியே இங்கு தருகிறோம். இந்த செய்தி வெளியில் வரவில்லையே தவிர, இன்று வடமாகாண நிர்வாக உயர்மட்டத்தில் பெரும் தலையிடியை கொடுக்கும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

வடமாகாண விவசாய அமைச்சின் கீழ் பணியாற்ற தகுதியான அலுவலர்கள் பற்றாக்குறை நீடிக்கிறது. விவசாய அமைச்சின் முக்கிய பொறுப்பிலுள்ள ஒன்று, இரண்டு அதிகாரிகளின் மோசமான நடவடிக்கையே அதற்கு காரணம். இந்த பகுதியில் அவர்களின் பெயர்களை நாம் வெளியிடவில்லை. எனினும், இன்னொரு சந்தர்ப்பத்தில் அவர்களின் மோசமான நடவடிக்கையை பட்டியல்படுத்துவோம்.

வடமாகாண விவசாய அமைச்சின் கீழ் பணியாற்றி, மத்திய விவசாய அமைச்சின் கீழ் பணியாற்றுபவர் சகிலா பானு. மிகத்திறமையான அதிகாரியென பெயரெடுத்தவர். தற்போதைய தமிழ் விவசாய அதிகாரிகளில் அதிக துடிப்பான, திறமையான அதிகாரி இவர்தான் என துணிந்து சொல்லலாம். அவரை மீளவும் வடமாகாண விவசாய அமைச்சிற்கு மீள அழைப்பு விடுத்தார் முதலமைச்சர். அப்பொழுது அவர் மருத்துவசிகிச்சையொன்றிற்கு உட்பட்டிருந்ததால், அதை குறிப்பிட்டு, அடுத்த ஒரு வருடத்திற்கும் சிகிச்சை தொடர வேண்டியுள்ளதால் வவுனியாவில் பணியாற்றுவதற்கு வாய்ப்பளித்தால் மாகாண நிர்வாகத்தில் இணைய சம்மதம் தெரிவித்தார்.

வடமாகாண முதலமைச்சரும் அதற்கு சம்மதம் தெரிவிக்க, சகிலா பானு மத்திய விவசாய அமைச்சிலிருந்து விடுபட்டு, மாகாண நிர்வாகத்தில் இணைந்தார். இதன்பின்னரே, ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட குழப்பங்கள் ஏற்பட தொடங்கின. வவுனியாவில் பொருத்தமான ஒருவரை- சகிலா பானுவை- நியமிக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க, சிலபல காரணங்களால் அதை குழப்பும் முயற்சியொன்று நடக்கிறது.

அதற்கு முன்னர் ஒரு பிளாஷ்பேக் சம்பவத்தையும் சொல்ல வேண்டும். வவுனியாவில்  மாகாணசபைக்குட்பட்ட நிலத்தில் (தம்ரோவிற்கு எதிரில்) மத்திய அரசுக்கு வழங்கி- அங்கு மத்திய அரசின் கட்டிடம் கட்டப்பட்டு, செயற்பாடுகள் நடக்கிறது. மாகாணசபைக்குரிய காணியை மத்திய அரசுக்கு வழங்க காரணமாக இருந்தது அரசியல் செல்வாக்கு. இதுவரை வெளியில் வராத செய்தி இது!

வடமாகாணசபை அமைச்சராக இருந்த சத்தியலிங்கத்தின் சகோதரர்தான் அதனுடன் தொடர்புடைய மத்திய விவசாய அமைச்சின் அலுவலராக இருந்தார். மாகாணத்திற்குரிய நிலத்தை பெற்று மத்திய அரசின் கட்டிடத்தை அமைக்க அவர்தான் முழு மூச்சாக செயற்பட்டவர்.

சகிலா பானு முன்னர் வவுனியா பிரதி விவசாய பணிப்பாளராக இருந்த சமயத்தில்தான் பண்ணை நிலத்தை சத்தியலிங்கத்தின் சகோதரர் கோரினார். எனினும், சகிலா பானு அதை அனுமதிக்கவில்லை. நிலங்களை அரசு ஆக்கிரமித்து வருவதாக கூறிக்கொண்டு, மாகாணசபைக்குரிய நிலத்தை எப்படி மத்திய அரசிற்கு வழங்க மாகாணசபை உறுப்பினர்கள் முயலலாம் என அவர் பதில் கேள்வி எழுப்பினார். இதனால், அவர் அந்த பொறுப்பில் இருக்கும்வரை காணி மத்திய அரசிற்கு செல்லவில்லை. சகிலா பானு மத்திய விவசாய அமைச்சிற்கு இடமாற்றம் பெற்ற பின்னர், அந்த காணி மத்திய அரசிற்கு சென்றது.

இதுதான் அந்த பிளாஷ்பேக் சம்பவம்.

சகிலா பானு கொஞ்சம் ஈ.பி.ஆர்.எல்.எவ் அனுதாபியென சொல்லப்படுகிறது. ஆக- சகிலா பானு வவுனியாவிற்கு வருவது ப.சத்தியலிங்கத்திற்கு இரண்டு விதத்தில் பிடிக்காமலிருக்கலாம். ஒன்று தனது கோட்டைக்குள் ஈ.பி.ஆர்.எல்.எவ் அபிமானி முக்கிய பொறுப்பில் இருப்பது. இரண்டு அந்த மத்திய அரசு கட்டிட சர்ச்சையை கிளப்பலாம்!

இதேவேளை- வினைத்திறனில்லாதது என மாகாணசபையை குற்றச்சாட்டுக்களை சுமத்துபவர்கள், இந்த இடமாற்ற விடயத்தில் உள்ளே நடந்த விடயங்களை அறிந்தால் அதிர்ந்து விடுவார்கள். அதிகாரிகள் எப்படியெல்லாம் திருகுதாளம் விடுகிறார்கள் என்பதையும் வெளியிடுகிறோம்.

வவுனியா பண்ணை தற்போது நட்டத்தில் இயங்குவதாகவே காட்டப்படுகிறது. ஆனால் சில வருடங்களின் முன்னர்வரை இலாபத்தில் இயங்கிய பண்ணை. அங்கு கடும் முறைகேடு நடக்கிறதென முக்கிய அதிகாரிகள், அமைச்சர், முதலமைச்சருக்கு தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் உள்ளன. அங்குள்ள ஊழியர்களுடன் தமிழ்பக்கம் பேசியபோது, அதிர்ச்சியளிக்கும் ஆவணங்களை தந்துள்ளார்கள். அவற்றை விரைவில் வெளியிடவுள்ளோம். அண்மையில் நெல் அறுவடை செய்த பணத்தைகூட கணக்கில் காண்பிக்காமல் அதிகாரிகள் பொக்கற்றுக்குள் போட்டுக்கொண்டு சென்றுள்ளனர்.

இத்தனைக்கும் அந்த பண்ணையில் உள்ளக கணக்காய்வு முறையை பிரதி விவசாய பணிப்பாளர் ஏற்படுத்தவில்லை. விவசாய அமைச்சிலிருந்து பலமுறை அதுபற்றிய அறிவுறுத்தல் சென்றும், அதை செய்யாமல் காலத்தை இழுத்தடிக்கிறார்கள்.

அண்மையில் – விவசாய அமைச்சின் செயலாளராக இருந்த சத்தியசீலன், மாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமார் ஆகியோர் இணைந்து உள்ளக இடமாற்ற பட்டியல் ஒன்றை தயாரித்துள்ளனர். அந்த பட்டியல் விவசாய அமைச்சருக்கே தெரியாமல்- அவரது பார்வைக்கோ, ஒப்புதலுக்கோ கொடுக்காமல்- முதலமைச்சரிடம் அனுப்பப்பட்டுவிட்டது. அந்த பட்டியலில் சகிலா பானுவை மன்னாருக்கும், மன்னாரில் உள்ள அஞ்சனாவை யாழ்ப்பாணத்திற்கும், வவுனியா பிரதி விவசாய பணிப்பாளரை இடமாற்றமின்றியும் பரிந்துரைக்கட்டிருந்தது. விவசாய அமைச்சரிடம் காண்பித்தால் சகிலா பானுவை வவுனியாவிற்கு மாற்ற கூறுவார் என்பதாலேயே இந்த இரகசிய ஏற்பாடு.

சகிலா பானு விடயத்தில் வாக்களித்தவர் முதலமைச்சர். எனவே பட்டியலை பார்த்ததும்- அதில் “சம்திங்“ இருப்பதை புரிந்து, அதில் மாற்றம் செய்தார். சகிலா பானுவை வவுனியாவிற்கும், வவுனியாவிருந்து யோகேஸ்வரனை மன்னாருக்கும் மாற்றி, “இதன்படியே இடமாற்றத்தை வழங்கவும்“ என்ற குறிப்பையும் கொடுத்திருந்தார்.

இதையடுத்து, இந்த விடயத்தை ஆளுனரிடம் கொண்டு சென்று, முதலமைச்சரின் இடமாற்றத்தை நிறுத்துமாறு கோரியிருந்தனர். இதைப்பற்றி மேலோட்டமாக விசாரணை செய்த ஆளுனர் செயலக அதிகாரிகள், இது உள்ளக இடமாற்ற சிக்கல்கள் என்பதை ஆளுனரிடம் தெரிவித்தனர். இதையடுத்து- இந்த உள்ளக சிக்கல்களில் நான் தலையிட முடியாது. விவசாய அமைச்சரே கையாள வேண்டிய பொறுப்பு. அவர்தான் முடிவெடுக்க வேண்டுமென ஆளுனர் கூறினார். ஆளுனர் செயலகத்தின் மிக மூத்த- இந்த விவகாரத்தை கையாண்ட- அதிகாரிகளில் ஒருவர் தமிழ்பக்கத்திடம் இதை உறுதியும் செய்தார்.

இதையடுத்து, மீண்டும் விடயம் விவசாய அமைச்சர் க.சிவநேசனிடம் சென்றுள்ளது.

வவுனியாவிலிருந்து அதிகாரிகளை மொத்தமாக இடமாற்றம் செய்துவிட்டு, அந்த பண்ணையின் உள்ளக கணக்காய்வை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். முறையான நிர்வாகம் நடக்க அதுதான் வழி.

இந்த நியமனங்களை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு விவசாய அமைச்சரையே சாரும். விவசாய அமைச்சரே… என்ன செய்ய போகிறீர்கள்?

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here