“ப்ளீஸ்.. என்னை அம்மான்னு கூப்பிடாதீங்க!’’ – தலையணைப் பூக்கள் தாரணி

பொதுவாக, சின்னத்திரை நடிகைகள் பிரேக் எடுத்து மீண்டும் வரும்போது முன்பிருந்த அளவுக்கு வரவேற்பு கிடைப்பது சந்தேகம். ஆனால், திறமை இருந்தால் ஒரு இடைவெளிக்குப் பிறகும் அந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் என நிரூபித்துள்ளார் தாரணி. கிட்டத்தட்ட 30 வருடங்களாக சின்னத்திரைக்குப் பரிட்சையமான முகம். எந்தச் சேனலைத் திருப்பினாலும் இவரைப் பார்க்கலாம்.  ‘தலையணைப் பூக்கள்’, ‘பொன்மகள் வந்தாள்’ போன்றவற்றில் பிஸியாக நடித்துவருபவரோடு ஒரு பர்சனல் சாட்.

தாரணி

“உங்களைப் பற்றி சில வரிகள் சொல்லுங்களேன்…”

“அப்பாவுக்குச் சொந்த ஊர் திருச்சி. அம்மாவுக்குச் சென்னை. கொஞ்ச வருஷம் மதுரையிலும் இருந்தோம். ஒன்பதாம் வகுப்பு வரைக்கும் மதுரையில் படிச்சேன். அப்புறம் சென்னைதான். என் கணவர் கிட்சா, திரைப்பட இயக்குநர். `சூலம்’ என்ற சீரியலில் நடிச்சுட்டிருந்தேன். அதன் டைரக்டரின் நண்பராக அறிமுகமானவர், கிட்சா. நட்பா பேச ஆரம்பிச்சோம். ஒருநாள், என்னைக் காதலிக்கிறதா சொன்னார். மூன்று வருஷம் காதலிச்சோம். ஆரம்பத்தில் ரெண்டு பேர் வீட்டிலும் சம்மதிக்கலை. நாங்க ரொம்ப உறுதியோடு இருந்தோம். அப்புறம் சம்மதிச்சு திருமணம் செஞ்சு வெச்சாங்க. எங்களுக்குள் பல வித்தியாசங்கள் இருக்கு. அவருக்கு அசைவம் உயிர். எனக்கு அசைவமே பிடிக்காது. ஆனால், என்னை எதற்கும் வற்புறுத்த மாட்டார். நானும் அப்படித்தான். எங்க பொண்ணு மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். கூட்டுக்குடும்பமா இருக்கோம். என் குடும்பம்தான் என்னுடைய பலம்.”

“அப்படின்னா நடிப்புக்கு ஃபேமிலி சப்போர்ட் இருக்கா?”

“ஆமா. இந்தத் துறையில் அது ரொம்ப முக்கியம். திருமணமாகி பாப்பா பிறந்ததும், நடிப்புக்குக் கொஞ்சம் பிரேக் விடச்சொன்னார் கணவர். நானும் குழந்தையைப் பார்த்துக்கிறதில் முழுசா கவனம் செலுத்தினேன். பொண்ணு கொஞ்சம் வளர்ந்ததும் மறுபடி மீடியாவுக்கு வந்தேன். இப்போ, என் மாமியார் பேத்தியை நல்லாப் பார்த்துக்கிறாங்க. நான் எல்லோர்கிட்டேயும் ஜாலியா பழகுவேன். என் மாமியாருக்கு என்னை ரொம்பப் பிடிக்கும்.”

குடும்பத்துடன் தாரணி

“ஒரு சீரியலில் வில்லியாகவும், இன்னொரு சீரியலில் பாசமான அம்மாவாகவும் நடிக்கிற சவால் எப்படி இருக்கு?”

“உண்மையாவே கஷ்டமான டாஸ்க். ஏன்னா, முதல் நாள் மோசமான வில்லியா ‘தலையணைப் பூக்கள்’ சீரியலில் நடிச்சிருப்பேன். மறுநாள், பாசமான அம்மாவாக `பொன்மகள் வந்தாள்’ சீரியலுக்காக கேமரா முன்னாடி நிற்கும்போது, உடனே அந்தக் கதாபாத்திரமா மாறமுடியாமல் டைம் எடுத்துப்பேன். ஆனாலும், இந்த டாஸ்க் செம்ம ஃபீல். நிஜத்தில் நான் ஸ்ட்ரிக்ட் அம்மா. என் பொண்ணுகிட்ட ஃப்ரெண்ட்டா பழகவேண்டிய இடத்தில் ஃப்ரெண்ட்டா இருப்பேன். படிப்பு விஷயத்தில், ஸ்ட்ரிக்ட்டா இருந்து கண்டிப்பேன்.”

“செட்டில் நீங்க எப்படி?”

“கலகலன்னு பேசிட்டே இருப்பேன். யாராச்சும் அம்மான்னு கூப்பிட்டால், `ப்ளீஸ் என்னை அம்மான்னு கூப்பிடாதீங்க. அக்கான்னு கூப்பிடுங்க’னு சொல்லிடுவேன். என்னை எப்பவும் இளமையா, ஹேப்பியா வெச்சுக்கவே விரும்பறேன். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும், அதற்குரிய நேர்மையுடன் நடிப்பேன். சீனியர் நடிகை எண்ணத்தை மனசுல ஏத்திக்க மாட்டேன். அதனால்தான் 30 வருஷமா இருக்க முடியுது. சில சீரியல் நடிகர்கள் வாய்ப்புக் கிடைக்காமல் தற்கொலை பண்ணிக்கிட்டது என்னை ரொம்பவே பாதிச்சது. நடிப்பையும் தாண்டி உலகத்தில் நிறைய விஷயங்கள் இருக்கு. ஒரு வேலையில் எவ்வளவு ஈடுபாட்டோடு இருக்கோமோ அதுக்கான அங்கீகாரம் நிச்சயம் ஒருநாள் கிடைக்கும். பொறுமை முக்கியம்.”

தாரணி

“நடிப்பு தவிர வேற என்ன பண்றீங்க?”

“நடிப்புக்கு பிரேக் விட்டுருந்தபோது, கார்மென்ட்ஸ் நடத்திட்டு இருந்தேன். ஆன்லைன் ஷாப்பிங் வந்ததுக்கு அப்புறம் ஆன்லைனிலேயே புதுப் புது டிசைனா வாங்கிடறாங்க. அதனால், கஸ்டமர்ஸ் கேட்கும் டிசைனில் கொடுக்கிற மாதிரி ஒரு கடையைச் சீக்கிரமே ஓப்பன் பண்ணும் பிளான் இருக்கு.”

“சீரியலில் வெரைட்டி காட்டறதுக்கு நிறைய காஸ்டியூம்ஸ் வாங்கவேண்டி இருக்குமே…”

“அட ஆமாங்க.. என் சம்பளம் இதுக்கே சரியா இருக்குன்னு என் வீட்டுக்காரர் சொல்வார். அந்த அளவுக்கு டிரெஸ் எடுப்பேன். ஒரு சீரியலில் டிசைனர் சேலை கட்டினால், இன்னொரு சீரியலில் காட்டன் சேலை கட்டுவேன். ஹேர்ஸ்டைலையும் ஒவ்வொரு சீரியலுக்கு மாத்துவேன். அப்போதான் ரசிகர்களுக்கு வித்தியாசமா காட்ட முடியும்.”

“மறக்கமுடியாத சுவாரஸ்யமான சம்பவம் உண்டா?”

“ஒருநாள் போத்தீஸ் போயிருந்தோம். முதல் தளத்தில் டிரெஸ் எடுத்துட்டிருந்தப்போ ஓர் அம்மா, ‘ஏங்க, ‘தலையணைப்பூக்கள்’ சீரியலில் உங்க பெண்ணுக்குத் தவறான விஷயத்தை சொல்லிக்கொடுக்கறீங்களே. நீங்களும் அம்மாவா’னு திட்டினாங்க. அமைதியா அங்கிருந்து இரண்டாவது தளத்துக்குப் போயிட்டேன். அங்கே வந்த இன்னோர் அம்மா, `வணக்கம். சீரியலில் உங்க பொண்ணைச் சரியா கண்டிச்சு வளர்க்கறீங்க. அம்மான்னா இப்படித்தான் இருக்கணும்’னு சொன்னாங்க. முதள் தளத்தில் திட்டு… இரண்டாவது தளத்தில் பாராட்டு என்கிற அந்த நாளை மறக்கவே முடியாது.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here