மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஏன் தற்கொலைதாரியின் இலக்கானது?: 2 வாய்ப்புக்கள்!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் தொடராக நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 290 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

மட்டக்களப்பு தேவாலயத்திற்குள் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரியில் முதலில் சந்தேகமடைந்து, அவரை விசாரிக்க முயன்ற தேவாலய பணியாளரின் திகில் அனுபவங்களை நேற்று வெளியிட்டிருந்தோம்.

இந்த தாக்குதல்கள் மிக மிக திட்டமிடப்பட்டு, ஒரே வலையமைப்பினால் நடத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஆனால், கொழும்பு மற்றும் மட்டக்களப்பு தாக்குதல்கள் வெவ்வேறு அணிகளால் நடத்தப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.

தாக்குதல்தாரிகள் அனேகர் முஸ்லிம் தீவிர நிலைப்பாடுடையவர்கள் என அறியப்படுகிறது. இருந்தாலும், இது ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பல்ல என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். எல்லா சமூகத்திற்குள்ளும், சமயத்திற்குள்ளும், இனங்களுக்குள்ளும் அதி தீவிர நிலைப்பாடுடைய ஒரு குழு இருக்கத்தான் செய்கிறது. இந்த குழுவின் நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த சமூகமும் சங்கடமடையும் சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும்.

எப்படி, பொதுபலசேனாவின் குரல் முழு சிங்கள மக்களினதும் குரல் இல்லையோ… சிவசேனையின் குரல் முழு தமிழ் மக்களின் குரல் இல்லையோ… அதேபோல, மேற்படி தீவிர நிலைப்பாடுடைய குழுக்களின் குரல் முழு முஸ்லிம் மக்களின் குரல் அல்ல. இந்த உண்மையை பொறுப்புணர்வுடன் ஒவ்வொருவரும் மனதில் வைத்திருப்போம்.

ஏன் சீயோன் தேவாலயம் இலக்கானது?

நேற்று மூன்று தேவாலயங்களில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயம், நீர்கொழும்பு கடுவப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகிய மத வழிபாட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அதில் கொச்சிக்கடை அந்தோனியார், கடுவப்பிட்டிய புனித செபஸ்தியார் இரண்டும் றோமன் கத்தோலிக்க தேவாலயங்கள். மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் 5வது வேதம் என்ற கிறிஸ்தவ மத பிரிவை சேர்ந்தது.

ஒரே வலையமைப்பு தாக்குதலை வழிநடத்தியிருந்தாலும், வேறுவேறு உள்ளூர் வலையமைப்புக்கள் இந்த தாக்குதலில் நேரடியாக ஈடுபட்டதா என்ற கேள்வியை, இந்த இலக்கு வித்தியாசம் எழுப்புகிறது. சில சமயங்களில், உள்ளூர்வாசிகளே இலக்கை தீர்மானிப்பவர்களாக இருந்திருக்க கூடும்.

இலக்கிற்காக பல இடங்கள் பரிசீலிக்கப்பட்டதா?

நேற்றைய குண்டுவெடிப்பு நடந்த பின்னர்தான் இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது. 5வது மதப்பிரிவின் தேவாலயம் ஒன்று மயிலம்பாவெளி கண்ணகிபுரம் பகுதியில் அமைந்துள்ளது. தாக்குதலிற்கு முதல்நாள்- சனிக்கிழமை- அந்த தேவாலயத்திற்கு சென்ற ஒருநபர், விசாரணை நடத்தும் தோரணையில் பல விசயங்களை கேட்டுள்ளார். எத்தனை மணிக்கு ஆராதனை ஆரம்பிக்கும், எத்தனை பேர் கலந்துகொள்வார்கள் போன்ற தகவல்களை விசாரிக்க, ஆலய பணியாளர் ஒருவர் சந்தேகமடைந்து, அந்த நபரை விசாரித்துள்ளார்.

தன்னை சிஐடி நபர் என கூறிய அவர், பின்னர் வருவதாக கூறி அந்த இடத்திலிருந்து நழுவியுள்ளார்.

குண்டுவெடிப்பின் பின்னரே, அந்த ஆலய பணியாளர் எச்சரிக்கையடைந்து இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தற்கொலைதாரியின் தலை, தேவாலயத்திற்கு வெளியிலிருந்து மீட்கப்பட்டது

இதேவேளை, 5வது வேதத்தினர் தொடர்பாக சில முஸ்லிம் குழுவினர் தொடர்ந்து விமர்சனம் தெரிவித்து வருவதுண்டு. 5வது வேதத்தினர் மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதே பிரதான குற்றச்சாட்டு.

கடந்தவாரமும் மயிலம்பாவெளி தேவாலயத்தில் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த தேவாலயத்திற்கு வந்து, குணப்படுத்திச் செல்வதாக ஊரில் அபிப்பிராயம் உள்ளது. அப்படி முஸ்லிம் மக்களும் வருவார்கள். அவர்கள் நாளடைவில் மதமாற்றப்படுகிறார்கள் என்பதே, சில முஸ்லிம் தரப்புக்களின் குற்றச்சாட்டு.

இரு தரப்பிற்குமிடையிலான முரண்பாடு முற்றி, அந்த விவகாரம் பொலிஸ் நிலையம் வரை சென்றிருந்தது.

இந்த முரண்பாட்டிற்குள் தீவிர எண்ணமுடைய குழுவொன்று புகுந்ததா என்பதே இப்போதைய சந்தேகம். இந்த மோதலை பெருப்பிக்க- சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பிற்கு தெரியாமலே கூட, மூன்றாவது தரப்பு நுழைந்திருக்கலாம்.

மற்றைய இடங்களில் றோமன் கத்தோலிக்க தேவாலயங்கள் குறிவைக்கப்பட, மட்டக்களப்பில் மட்டும் 5வது வேதம் குறிவைக்கப்பட்டதால், தாக்குதல் இலக்குகளை தீர்மானிக்கும் பொறுப்பை உள்ளூர்வாசிகளே ஏற்றுக் கொண்டிருந்தார்களா என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.

சீயோன் தேவாலயத்திற்குள் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்தியவர், உள்ளூர்வாசி. அதனால்த்தான், உள்ளூர்வாசிகளே இலக்கை தீர்மானிக்கும் விதமாக தாக்குதல் வலையமைப்புக்களை பிரித்து பிரித்து உருவாக்கினார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தாக்குதல் விடயத்தில் இது ஒரு விதமான சந்தேகம்.

இன்னொரு விதமான சந்தேகமும் உள்ளது.

கொழும்பு, நீர்கொழும்பு போன்ற இடங்களில் றோமன் கத்தோலிக்க தேவாலயங்களில் நடக்கும் வழிபாடுகளில் ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள். அதில் புதிய முகம் ஒன்று கலந்து கொள்வது உடனடியான சந்தேகத்தை கிளப்பாது. ஆனால் மட்டக்களப்பு தேவாலயங்களில் அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்களாக இருப்பார்கள். புதியவர்- முஸ்லிம் தோற்றமுடையவர்- நுழைவது சாத்தியமில்லை.

ஆனால், சீயோன் தேவாலயத்தில் அப்படியல்ல. மத மாற்றம் நடப்பதால், முஸ்லிம்களும் அங்கு வழிபாட்டிற்கு வருவது வழக்கம். ஒரு வேற்று மதத்தவர் நுழைந்தாலும் வரவேற்கப்படுவார்.

இதனை வாய்ப்பாக பயன்படுத்தியும், சீயோன் தேவாலயத்தை இலக்கு வைத்திருக்க கூடும்.

எப்படியோ, இலங்கையில் இரத்தக்களரிமிக்க, துயரமான நாட்களை மீண்டும் இந்த பயங்கரவாத தாக்குதல்கள் உருவாக்கி விட்டன என்பதே கசப்பான உண்மை.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here