‘வாரிசு அரசியல்’: தமிழ் அரசுக் கட்சிக்குள் சலசலப்பு; இறுதிக்கட்ட சமரச முயற்சி இன்று!

“வாரிசு அரசியல்“ விவகாரம் இலங்கை தமிழ் அரசுக்கட்சியை ஆட்டிப்படைத்து வருகிறது. வாரிசு அரசியலுக்கு எதிராக ஒரு அணி விடாப்பிடியாக எதிர்ப்பை வெளியிட- மாவை அணி அதை சமாளித்து, வாரிசுக்கே முடிசூட்டும் முயற்சியில் மும்முரமாக இருப்பதால் கட்சிக்குள் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணி மாநாடு, வரும் 20ம் திகதி வவுனியாவில் இடம்பெறவுள்ளது.

கட்சியின் முக்கிய பொறுப்புக்கள் ஜனநாயக முறைப்படி, கூட்டங்களிலேயே தீர்மானிக்கப்படுமென எல்லா கட்சிகளும் சொன்னாலும், அதில் துளியும் உண்மையிருப்பதில்லை. முக்கிய பொறுப்புக்களில் யார் இருப்பார்கள் என்பதை தீர்மானித்த பின்னர், அதை நோக்கி காய்களை நகர்த்துவதே கட்சிகள் அனைத்தினதும் வழக்கம். தமிழ் அரசுக்கட்சி மாத்திரம் விதிவிலக்கா?

இம்முறை இளைஞர் அணி முக்கிய பொறுப்புக்களை கட்சி தலைமை தீர்மானித்து விட்டது. இதன்படி, இளைஞர் அணியின் முக்கிய பொறுப்புக்களில் நியமிக்கப்படவுள்ள இருவர்- சேயோன், கலையமுதன் என தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.

மட்டக்களப்பை சேர்ந்த சேயோன் இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்படவுள்ளார். அவர் கட்சியின் அடிமட்ட உறுப்பினராக இருந்து, உயர்ந்தவர். நீண்ட செயற்பாட்டு வாழ்க்கையையுடையவர். தேர்தல் காலங்களில் வடக்கு கிழக்கு எங்கும் திரிந்து கட்சி பணியாற்றியிருக்கிறார். தற்போதைய தமிழ் அரசு கட்சி இளையவர்களில் முதன்னிலை செயற்பாட்டாளர்களில் முக்கியமானவர் அவர் என்பதில் சந்தேகமில்லை. தற்போது மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி தலைவராக இருக்கிறார்.

அவரை தலைவராக நியமிப்பது பொருத்தமான முடிவுதான்.

பொதுவாகவே அரசியல் கட்சிகள், இப்படி கச்சிதமான- பொருத்தமான முடிவுகள் எடுப்பது அரிது. அப்படி எடுக்கிறார்கள் என்றால், அதன்பின்னால் வில்லங்கமான காரணமொன்று இருக்கிறதென்பதே அர்த்தம்.

மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதனை, கட்சியின் அடுத்த வாரிசாக கொண்டு வருவதில் மாவைக்கு மிக நெருக்கமான கனகசபாபதி, குலநாயகம் போன்றவர்கள் தீயாக வேலை பார்க்கிறார்கள். இந்த அணிக்கு “ஸ்பொன்சர்“ செய்தவர் சரா எம்.பி. மகனிற்கு முடிசூட்டி அழகு பார்த்து, அப்பாவை கைக்குள் போட்டுக்கொள்ளும் உத்தியாகவோ அல்லது வேறு காரணமோ தெரியவில்லை- வாரிசு அரசியல் விமர்சனத்தை கணக்கிலெடுக்காமல் கலையமுதனை முன்னிலைப்படுத்தும் முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர்.

“அணி செயலாளர் ஆக்கிறோம், அடுத்த மாகாணசபையில் களமிறக்கி ஒரு அமைச்சை கொடுக்கிறோம்“ என, 30 நாளில் சிவப்பழகை பெறுவது எப்படி பாணி விளம்பரங்களை போல, துரிதகதியில் கலையமுதனை உயர்த்தியே தீருவோமென விடாப்பிடியாக நிற்கிறார்கள்.

எனினும், வாரிசு அரசியலுக்கு கட்சிக்குள் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்சிக்குள் ஒரு அணி அதை எதிர்க்கிறது.

கட்சியின் பொறுப்பு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், குடும்ப உறுப்பினர்களிற்கு அப்பாலும் கட்சிச் செயற்பாட்டாளர்கள் இருக்கிறார்கள் என ஒரு அணி வலியுறுத்துகிறது. அவர்கள், பச்சிலைப்பள்ளி பிரதேசசபை தவிசாளர் சுரேனிற்கு செயலாளர் அல்லது தலைவர் பதவி வழங்கும்படி வலியுறுத்துகிறார்கள்.

இந்த எதிர்ப்பையடுத்து, இறுதிக்கட்ட சமரச முயற்சிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று மாலை 5 மணிக்கு தமிழ் அரசு கட்சி எம்.பிக்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளும் அவசர கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில், கட்சியின் தேசிய மாநாட்டு ஏற்பாடுகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here