நானும் நண்பனும் ஒரே பெண்ணை காதலிக்கிறோம்; என்ன செய்யலாம்?: மனமே நலமா?


உங்கள் சந்தேகங்களை கேளுங்கள்

பதிலளிக்கிறார்
கு.நக்கீரன்
உளவள ஆலோசகர்

பெயர் குறிப்பிடவில்லை (24)
பண்டாரிகுளம்

நான் ஒரு பெண். எனக்குத் திருமணமாகி 6 மாதங்களாகின்றது. திருமணத்தின் முன் நான் ஒருவரைக் காதலித்தேன். சந்தர்ப்ப வசத்தால் நாம் இருவரும் பிரிந்து விட்டோம். இதன் காரணமாகவே எனது கணவருடன் என்னால் மனமொத்து வாழ முடியாமல் உள்ளது. ஆனால் எனது கணவர் (அவரது குடும்பம் உட்பட) மிகவும் நல்லவர். என்னால் எனது காதலையும் மறக்க முடியவில்லை. அதே நேரம் எனது கணவரின் அன்பையும் மறுக்க முடியவில்லை. என் காதல் விடயத்தை எனது கணவரிடம் சொல்வதா வேண்டாமா என்று தவிக்கின்றேன். நான் என்ன முடிவு எடுப்பது?

பதில்: சகோதரி! உமது கடிதத்தைப் பார்க்கும் போது ஒரு பழைய பாடல் தான் ஞாபகம் வருகின்றது. ‘மனமொரு குரங்கு மனித மனமொரு குரங்கு…’ என்று அந்தப் பாடல் தொடங்கும். மரத்துக்கு மரம் தாவும் குரங்கு போல் உமது மனம் அங்கும் இங்கும் தாவுகின்றது. அதனால்தான் உமக்கு இந்த நிலை. காதலித்தவரைத்தான் கணவராக அடைய வேண்டும் என்று நினைத்தால் இந்த உலகில் 80-90 வீதமான பெண்கள் திருமண பந்தம் இல்லாமலேயே வாழ வேண்டும்.

மனித வாழ்வில் இது சகஜம். ஒருவரைக் காதலித்து, பின் அது முறிந்து இன்னொருவரைத் திருமணம் செய்து வாழும் பெண்களே அதிகம். உமது காதல் மழைக்கால முகிற்கூட்டம் போன்றது. அது கடந்து சென்று விட்டது. இனி அதைப் பற்றிய கவலை வேண்டாம்.

உமது கணவர் அன்பானவர், நல்லவர் என்றும் அவரது குடும்பத்தினர் நல்லவர்கள் என்றும் கூறியுள்ளீர்கள். பிறகெதற்கு கவலை?. போன பஸ்ஸினைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். இப்போது கிடைத்த பஸ்ஸினையும் தேவையில்லாத யோசனைகளால் தவறவிட வேண்டாம். ஏனெனில் நீர் இதுவரைக்கும் பல முடிவுகளை அவசரமாக எடுத்துள்ளீர் எனத் தெரிகின்றது. அவசரப்பட்டுக் காதலித்தீர், பிறகு அதை அவசரப்பட்டுப் பிரித்து விட்டீர். பின் அவசரப்பட்டு இன்னொருவரைத் திருமணம் செய்து ஆறுமாதம் குடும்பமே நடத்தி விட்டீர். பின் காதலனையும் மறக்க முடியவில்லை, கணவனையும் வெறுக்க முடியவில்லை என்பது ஆரோக்கியமான ஒரு நிலைப்பாடல்லவே…..

எனவே பழையன எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். தேவையில்லாமல் மனதை அலட்டிக் கொள்ள வேண்டாம். தேவைப்பட்டால் சரியான நேரம் வரும்போது இடம் பொருள் ஏவல் அறிந்து இவ் விடயத்தினை மெதுவாக அவிழ்த்து விடுங்கள். அதற்கு முன் உங்கள் கணவனின் வரலாற்றையும் ஓரளவுக்கு அறிந்து கொள்ளுங்கள். இவ் விடயம் பற்றிப் பேசும்போது உமது காதலனை விட உமது கணவனை உயர்த்திப் பேச மறந்து விட வேண்டாம். வாழ்க்கை என்பது கூட ஒருவகையில் அரசியல்தான். சாணக்கியமும், தந்திரோபாயமும் இருந்தால் மட்டுமே அவரவர் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

பிரகாஷ் (24)
யாழ்.பல்கலைகழகம்

நான் இப்போது பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருக்கின்றேன். அங்கு எனக்கு ஒரு உயிர் நண்பன் இருக்கின்றான். பிரச்சினை என்னவென்றால் துரதிர்ஷ்டவசமாக நாம் இருவரும் ஒரே பெண்ணையே காதலிக்கின்றோம். இது அண்மையில்தான் எனது நண்பன் மூலம் எனக்குத் தெரிய வந்தது. ‘என் காதலை எப்படியாவது விட்டுக் கொடுத்து விடு’ என்று அவன் என்னிடம் கெஞ்சுகின்றான். காதலை விட்டுக் கொடுக்க என்னாலும் முடியாமல் உள்ளது. அதேநேரத்தில் எனது நண்பனும் எனக்கு முக்கியம். நட்பா? காதலா? என்று திணறுகின்றேன். எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்?

பதில்- அன்புத் தம்பி! நீர் உண்மையில் உமது பிரச்சினையைக் கூறுகின்றீரா? அல்லது தமிழ் சினிமாவில் வந்த கதையைக் கூறுகின்றீரா? என்று எண்ணத் தோன்றுகின்றது. உமது நிலை பற்றிய இரண்டு, மூன்று தமிழ் சினிமாக்களை நான் பார்த்துள்ளேன். (பெயர்கள்தான் ஞாபகத்திற்கு வரவில்லை)

இருந்தாலும் ஒரே பெண்ணை நீங்கள் இருவரும் காதலிக்கின்றீர்கள். அந்தப் பெண்ணும் உங்கள் இருவரையும் காதலிக்கின்றாரா? ஏனெனில் இப்போது நம்மூர் பெண்கள் Face bookஇல் ஒரு காதல், Whats appஇல் ஒரு காதல், Phoneஇல் ஒரு காதல் கல்யாணத்தின் பின் வேறொரு காதல் எனத் திரிகின்றார்கள். நீங்கள் இருவரும் காதலிக்கும் அந்தப் பெண் உங்கள் இருவரையும் தவிர்த்து வேறொருவரைக் கூடக் காதலிக்கலாம். எனவே அவரது காதல் என்ன என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள்.

உண்மையில் அப்பெண் உம்மைத்தான் உயிராய் காதலிக்கின்றார் எனின் உமது நண்பனுக்கு உங்கள் இருவரதும் காதலைப் புரிய வையுங்கள். உண்மையான நண்பனாக இருந்தால் அவர் அதைச் சரியாகப் புரிந்து கொள்ளுவார். இல்லை அப் பெண் உமது நண்பனைத்தான் நேசிக்கிறார் எனின் அவர்களது காதலை வளர்த்து விடுவதே ஒரு உண்மையான நண்பனுக்கு அழகு. எனவே இப் பிரச்சினைக்கான தீர்வென்பது உங்களது காதலியின் நிலைப்பாட்டையும், உங்கள் இருவரினதும் உண்மையான, பண்பான நட்பையும் பொறுத்து இலகுவில் தீர்க்கக் கூடிய ஒன்றே.

சகோதரா! மனித வாழ்க்கையின் மகிழ்ச்சியே விட்டுக்கொடுப்பிலும், தியாகிப்பிலும்தான் அதிகமாக உள்ளது. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளுக்காக எவ்வளவு தியாகங்களையும், விட்டுக் கொடுப்புக்களையும் இழப்புக்களையும், சந்திக்கின்றார்கள்? இவை பற்றி அவர்கள் ஒருபோதும் கவலைப்படுவது இல்லை. மாறாக பிள்ளைகளின் மகிழ்ச்சியைப் பார்த்துத் தாம் மகிழ்கின்றார்கள்.

எனவே எமக்கு வேண்டியவர்களுக்காக விட்டுக் கொடுப்புக்களையும், அர்ப்பணிப்புக்களையும் செய்கையில் உண்மையில் ஆத்மார்த்தமான மனத் திருப்தியும், மகிழ்ச்சியும், உயர்ந்த மனப்பாங்குமே ஏற்படுகின்றது. எனவே களநிலைகளைக் கவனத்தில் கொண்டு உயர் மனிதனாக வாழ விழைவதே உண்மயான வாழ்க்கையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here