உலகக்கிண்ணத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது!

இங்கிலாந்தில் வரும் மே மாதம் நடைபெறும் உலகக் கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

இந்திய அணியில் தோனிக்கு அடுத்து 2-வது விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் இருவரில் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக்குக்கு தேர்வாளர்கள் வாய்ப்பளித்துள்ளனர்.

அதேபோல இங்கிலாந்து ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கக் கூடியது என்பதால், 4வது வேகப்பந்துவீச்சாளர், சகலதுறை வீரர் என்ற அடிப்படையில், தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நடுவரிசையில் ராயுடுவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. கே.எல்.ராகுல் மாற்று தொடக்க வீரர், நடுவரிசையிலும் விளையாடக் கூடியவர் என்பதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல் இருவரும் சிறப்பாக சுழற்பந்துவீச்சு வீசி வரும் நிலையில், கூடுதலாக சகலதுறை வீரர் தேவை என்பதால், ரவிந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்க்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக ஒருநாள் போட்டியில் மோசமாகப் பந்துவீசியதால், உமேஷ் யாதவை தேர்வுக் குழுவினர் பரிசீலனைக்கு எடுக்கவில்லை.

மற்றவகையில் தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்.கே பிரசாத் தேர்வு செய்த அணியில் புதிதாக எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை.

5 துடுப்பாட்ட வீரர்கள் , 2 விக்கெட் கீப்பர்கள், 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 3 சகலதுறை வீரர்கள், 2 ஸ்பின்னர்கள் என்ற ரீதியில் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உலகக் கோப்பைக்கான இந்திய அணி விவரம்:

விராட் கோலி (கப்டன்) ரோஹித் சர்மா (துணை கப்டன்), ஷிகர் தவண், கே.எல்.ராகுல், எம்.எஸ்.தோனி, கேதார் ஜாதவ், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ரவிந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here