ரெலோவிற்குள் பெரும் களேபரம்; அவசரமாக கூடுகிறது தலைமைக்குழு!

ரெலோ அமைப்பின் அரசியல் உயர்பீட கூட்டம் எதிர்வரும் 20ம் திகதி வவுனியாவில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

கட்சியின் தீர்மானத்தை மீறி வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக கோடீஸ்வரன் வாக்களித்தது, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி மாற்று அணியொன்றை உருவாக்கும் நோக்கத்துடன் யாழில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை போன்ற சூடான சம்பவங்களின் பின்னணியில், அவசரகதியில் இந்த கூட்டம் ஏற்பாடாகியுள்ளது.

இதில், கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்லும் பிரேரணையை சிறிகாந்தா தரப்பு முன்வைக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, கூட்டமைப்பிலிருந்து தனித்து செல்லும் நோக்கத்துடன் ரெலோ செயலாளர் நாயகம் ஆரம்பித்து பேச்சு, ரெலோவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெலோவின் பிரமுகர்களின் கணிசமானவர்கள் இந்த முயற்சிக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.

ரெலோவின் அதியுயர் பீடமான தலைமைக்குழுவில் ஒன்பது உறுப்பினர்கள் அங்கம் வகிக்கிறார்கள். இவர்களில், செல்வம் அடைக்கலநாதன், தேசிய அமைப்பாளர் சுரேன், இந்திரகுமார் பிரசன்னா, ஹென்ரி மகேந்திரன், கோவிந்தன் கருணாகரம், விந்தன் கனகரட்ணம் ஆகியோர் கூட்டமைப்பிலிருந்து ரெலோ பிரிந்து செல்வதை தீவிரமாக எதிர்க்கிறார்கள்.

எஞ்சிய மூவர்- என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், வினோநோகராதலிங்கம்.

தலைமைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களான, கட்சியின் செயலாளர் என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் ஈ.பி.ஆர்.எல்.எவ் உடனான பேச்சில் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சு தொடர்பாக தகவல்களை தமிழ்பக்கம் முதன்முதலாக பகிரங்கப்படுத்தியிருந்தது. இதன்பின்னர், எம்.கே.சிவாஜிலிங்கத்தை நேரில் சந்தித்த தமிழ் அரசுக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், சமரசப் பேச்சில் ஈடுபட்டிருந்தார். இப்போதைய நிலைமையில் கூட்டமைப்பு உடையக் கூடாது என கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன்போது, “எனக்கு அதில் ஆர்வமில்லை. சிறீகாந்தாதான் விடாப்பிடியாக நிற்கிறார்“ என சிவாஜிலிங்கம் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் தலைமைக்குழு கூட்டத்திலும், நழுவல் போக்கையே சிவாஜிலிங்கம் கடைப்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வினோநோகராதலிங்கம் கூட்டமைப்பு தொடர்பான அதிருப்தியை பகிரங்கமாக தெரிவித்து வந்தாலும், பிரிந்து செல்லும் அளவிற்கு தீவிரமான எதிர்ப்புணர்வுடன் இருக்கவில்லையென கூறப்படுகிறது.

இதனால், கூட்டமைப்பிலிருந்து ரெலோ பிரிந்து செல்லும் தீர்மானம் தலைமைக்குழுவில் வெற்றியளிக்காதென தெரிகிறது. குறிப்பாக, கிழக்கு மாகாண ரெலோ பிரதிநிதிகள், பிரிவதை அடியோடு விரும்பவில்லை.

அதேவேளை, யாழில் நடந்த மாற்றுஅணி பேச்சுக்கள் ரெலோவின் உயர்மட்ட உறுப்பினர்கள் பலரும் அறியாமலேயே நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுமென்றும் கருதப்படுகிறது.
அத்துடன் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த

கோடீஸ்வரன் விவகாரமும் ஆராயப்படும்.

இதேவேளை, தமிழ்பக்கத்தின் அரசியல் செய்திகளை கந்தையா பாஸ்கரனிற்கு சொந்தமான ஜேவிபி, தமிழ்வின் இணையங்கள் திருடி வெளியிடுவதும் குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here