11 வருடங்களின் பின் ‘திரும்பி வந்த’ டைகர் வூட்ஸ்!

பிரபல கோல்ப் வீரரான டைகர் வூட்ஸ் 11 ஆண்டுகளுக்கு பிறகு பெரியளவிலான வெற்றியை பதிவு செய்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த நட்சத்திர கோல்ப் வீரரான 43 வயதாகும் டைகர் வூட்ஸ், ஒருகாலத்தில் கோல்ப் விளையாட்டில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தினார்.

2008ஆம் ஆண்டிற்கு பிறகு பெரியளவில் பதக்கம் எதுவும் வெல்லாமல் அவதிப்பட்டு வந்த டைகர், கோல்ப் விளையாட்டின் முக்கிய போட்டிகளில் ஒன்றான ‘மாஸ்டர்ஸ் ரூர்னமெண்டில்’ ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிச் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.

முன்னதாக, தண்டுவடத்தில் ஏற்பட்ட காயத்திற்காக டைகர் நான்கு முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

15 முறை முக்கிய கோல்ப் சம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற டைகர், தான் அறுவை சிகிச்சைக்கு முன்னதாக ‘நடப்பதே மிகவும் கடினமாக’ இருந்ததாகவும், அதற்கு கோல்ப் விளையாட்டே காரணமென்று தனது குழந்தைகள் கருதியதாகவும் தெரிவித்தார்.

“நான் மிகவும் விரும்பி செய்யும் ஒன்றிற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை பெற்றதில் அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன். கடந்த பல ஆண்டுகளாக உட்கார முடியாமல், எதையும் சரிவர செய்ய முடியாமல் மிகவும் அவதிப்பட்டேன். அதிலிருந்து மீண்டு வருவதற்கு நான் கையாண்ட நடைமுறைகளின் காரணமாகவே எனது இயல்பு வாழ்க்கை திரும்ப கிடைத்துள்ளது” என்று டைகர் வூட்ஸ் கூறினார்.

“நான் மீண்டும் இயல்பு பாதைக்கு திரும்புவதற்கு உதவிய இந்த போட்டியில் பெற்ற வெற்றியை மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன். எனக்கு கோல்ப் எவ்வளவு முக்கியமானது என்பதை என் குழந்தைகள் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளார்கள் என்று நினைக்கிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.

முதலில் தொழில்ரீதியிலான வாழ்க்கை, அதற்கடுத்து தனிப்பட்ட வாழ்க்கை என தொடர் சரிவுகளை சந்தித்த டைகர் வூட்ஸ், இடைப்பட்ட காலத்தில் சர்ச்சைகளிலும் சிக்கினார்.

தனது வாழ்வில் சந்தித்த பிரச்சனைகளையெல்லாம் கடந்து, 11 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய போட்டி ஒன்றில் வெற்றிப்பெற்றுள்ள டைகர் வூட்ஸை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here