சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் திடீரென நுழைந்த வைரவர்: நோயாளர் பாடு திண்டாட்டம்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் திடீரென வைரவர் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களின் முன்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் இனம்தெரியாதவர்கள், வைரவர் சூலமொன்றை கொண்டு வந்து போட்டுள்ளனர். சூலத்தை அவதானித்த தாதிய உத்தியோகத்தர்கள் சிலர், வைத்தியசாலைக்குள் சூலம் தானாக தோன்றி விட்டது என பக்திப்பரவசத்துடன் வழிபட ஆரம்பித்துள்ளனர்.

இதையடுத்து, தாதிய உத்தியோகத்தர்கள் கடந்த சில நாட்களாகவே, கடமை நேரத்தில் வைத்தியசாலை வளாகத்தின் ஒரு பகுதியை துப்பரவு செய்து, கொட்டகை அமைத்து, அங்கு “தானாக தோன்றிய“ சூலத்தை பிரதிட்டை செய்துள்ளனர்.

தற்போது நாளாந்தம் வெற்றிலை வைத்து வணங்கி வருகின்றனர்.

கடமைநேரத்தில் தாதியர்கள் வளாகத்தை சுத்தம் செய்து கோயில் அமைத்தாலும், வளாகத்தின் ஏனைய பகுதிகள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதும், அண்மையில் விபத்தில் சிக்கிய சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற 3 மண நேரம் காத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த சம்பவம் குறித்து தமிழ்பக்கத்திடம் பேசிய வைத்தியர் ஒருவர் வேறொரு பின்னணி தகவலையும் சொன்னார்.

கிறிஸ்தவ மதப்பிரிவொன்றினால் ஆலயத்திற்குள் தேவாலயம் கட்ட அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், அதற்கான நிதியை அந்த மத அமைப்பு தயாராக வைத்துள்ளதாகவும், எனினும், தேவாலயம் கட்ட அனுமதியளித்தால் ஏனைய மத வழிபாட்டிடங்களையும் அமைக்க அனுமதிக்க வேண்டியதாகிவிடும், தற்போது இடநெருக்கடியில் வைத்தியசாலை இயங்கி வரும் நிலையில், வழிபாட்டிடங்களையும் அமைத்தால், வைத்தியசாலையை நவீனப்படுத்த முடியாத நிலைமை உருவாகும் என்றார்.

இந்த பின்னணியில் மர்மநபர்கள் சூலத்தை கொண்டு வந்து போட்டது, வைரவர் ஆலயம் அமைக்கப்பட்ட பின்னர், தேவாலயத்தை அமைப்பதற்காகவும் இருக்கலாம் என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here