மதுவிருந்தில் வாள்வெட்டு: காயமடைந்த பாடசாலை மாணவன் மதுபோதையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதி; வைத்தியசாலைக்குள் புகுந்தும் ரௌடிகள் களேபரம்!

புத்தாண்டு தினத்தில் மதுபோதை விருந்தில் இளைஞர்களிற்கிடையில் ஏற்பட்ட மோதலில், வாள்வெட்டிற்கு இலக்கான பாடசாலை மாணவர் ஒருவர் காயங்களுடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, பாடசாலை மாணவனும் மதுபோதையில் இருந்தார்.

இதேவேளை, மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், வைத்தியசாலைக்குள்ளும் நுழைந்து இளைஞர்கள் கடுமையாக மோதிக் கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் இன்று (14) மாலை இடம்பெற்றது.

வரணி இயற்றாலை பகுதியில் இளைஞர்கள் குழுவொன்று இன்று புதுவருட தினத்தில், மதுபான விருந்தில் கலந்து கொண்டது. இதில் பாடசாலை மாணவர்கள் உள்ளடங்களான இளைஞர்களே கலந்து கொண்டுள்ளனர். இதன்போது, மோதல் ஏற்பட்டு வாள்வெட்டில் முடிந்தது.

வீரசிங்கம் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் நந்தகுமார் பாருஜன் (19) என்ற மாணவனிற்கு முதுகில் இரண்டு பெரிய வாள்வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன.

மாலை 6.15 மணியளவில் நண்பர்களால் அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருடனான முன்விரோதத்தால், பழிவாங்க மதுபான விருந்திற்கு அழைக்கப்பட்டதாகவும், அங்கு வாள்வெட்டு நடத்தப்பட்டதாகவும், அவரை வைத்தியசாலையில் அனுமதித்த நண்பர்கள் தெரிவித்தனர்.

காயமடைந்த மாணவனின் முதுகில் ஏற்பட்ட காயங்களிற்கு 32 தையல்கள் இடப்பட்டது.

இந்தநிலையில், இரவு 7 மணிக்கு அவரை தாக்கிய இளைஞர்கள் மதுபோதையில் வைத்தியசாலைக்குள் நுழைந்தனர். காயமடைந்த மாணவருடன் நின்றவர்களை மீண்டும் தாக்கினர். இதனால் அங்கு மீண்டும் பெரும் களேபரம் ஏற்பட்டது. காயமடைந்த மாணவனின் சகோதரனை கடுமையாக தாக்கி விட்டு, அந்த இளைஞர் குழு தப்பியோடியது. இந்த களேபரம் நடந்தபோது, பொலிசாருக்கு வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்தபோதும், பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்லவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

தாக்குத முடித்து விட்டு வெளியில் வந்த இளைஞர்குழு, பொலிசாரை கண்டதும், மோட்டார்சைக்கிள்களை கைவிட்டுவிட்டு தப்பியோடியது.

இதையடுத்து, இளைஞர்கள் கைவிட்ட 8 மோட்டார்சைக்கிள்களை பொலிசார் தம்முடன் எடுத்துச் சென்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here