காணாமல் போன உறவுகளை தேடி வவுனியாவில் போராட்டம்: முடிவற்ற போராட்டத்தால் உறவுகளிடம் சோர்வு!

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியறியும் சங்கத்தினர் இன்று (14) வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா கந்தசுவாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று, வவுனியா பஜார் வீதி ஊடாக வவுனியா தபால் அலுவலகத்திற்கு அருகில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் 785 வது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் கொட்டகையில் முடிவடைந்ததுடன், அவ்விடத்தில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதன் போது தமிழர்கள் மேல் நிகழ்த்தப்பட்ட இனவழிப்பையும் போர்க்குற்றத்தையும் சர்வதேசத்துடன் பேசி தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை தரும் தமிழர் தலைமைகளை தேர்ந்தெடுப்போம் என்ற பதாதைகையும், ஐரோப்பிய, அமெரிக்க கொடிகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியறியும் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தின் போது சங்கத்தின் தலைவி கா.ஜெயவனிதா தெரிவிக்கையில்-

“நாம் ஆர்ப்பாட்டம் தொடங்கி முதல் வருடம் சம்மந்தர் தெரிவித்தார், அடுத்த வருடம் உங்களது பிள்ளைகளுடன் வீடுகளிற்கு சென்று சந்தோசமாக இருப்பீர்கள் என. ஆனால் அடுத்த வருடமும் எங்களிற்கு தீர்வும் கிடைக்கவில்லை. தற்போது மூன்றாவது வருடமாகவும் தாய்மார்கள் தெருவிலேயெ இருக்கின்றனர்“ என்றார்.

இதேவேளை, ஒவ்வொரு பண்டிகை மற்றும் விசேட தினங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல்வேறு இடங்களிலும் அடையாள போராட்டத்தை நடத்துவது வழக்கம். காணாமல் போன தமது பிள்ளைகளை மீட்டுவிட வேண்டுமென்ற ஏக்கத்துடன், அவர்களின் நினைவுகளுடனும், படங்களுடனும் தாயகத்தின் பல பகுதிகளிலும் தொடர் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். எனினும், இம்முறை பரவலாக போராட்டங்கள் இடம்பெறவில்லை. உறவுகளை தேடும் தொடர் போராட்டங்கள் சகல தரப்புக்களாலும் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், வயோதிப வயதில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சோர்வடைந்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான போராட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பை அவர்களின் உறவினர்களிடம் மட்டுமே விட்டுவிடாமல், தமிழ் அரசியல் தரப்புக்கள் முன்னெடுக்காத பட்சத்தில், இன்னும் சிறிது காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம் தமிழர் தரப்பாலும் கவனத்தில் கொள்ளப்படாத ஆபத்து நிகழலாம் என அஞ்சப்படுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here