ஈக்வடோர் ஜனாதிபதியின் இந்தப்படத்தை கசிய விட்டதாலா அசாஞ்சேவின் அடைக்கலம் இரத்தானது?

லண்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்தில் கடந்த ஏழு வருடங்களாக தஞ்சமடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவுனர் யூலியன் அசாஞ்சே கைது செய்யப்பட்டதில், ஈக்வடோர் ஜனாதிபதி குறித்து கசிந்த புகைப்படம் ஒன்றும் காரணமென்ற தகவல் இப்பொழுது வெளியாகியுள்ளது.

அமெரிக்கா, சுவீடனின் எதிர்ப்பை மீறி இலண்டனிலுள்ள தமது தூதரகத்தில், அசாஞ்சேக்கு அடைக்கலமளித்திருந்தது ஈக்வடோர் அரசாங்கம். எனினும், அண்மைக்காலமாக ஈக்வடோர் அரசு- அசாஞ்சே உறவு நல்ல நிலையில் இருக்கவில்லை.

இந்த முரண்பாட்டின் உச்சமாக, அவருக்கு வழங்கப்பட்டிருந்த அடைக்கலத்தை விலக்கிக் கொள்வதாக ஈக்வடோர் அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து, கடந்த 11ம் திகதி அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

அசாஞ்சே கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, ஈக்வடோர் ஜனாதிபதி மற்றும் மனைவியின் உல்லாச வாழ்க்கையை குறிக்கும் சில புகைப்படங்கள் இணையங்களில் வெளியானது. ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஈக்வடோர் ஜனாதிபதி, நட்சத்திர விடுதியில் படுத்திருந்தபடி உயர்தர உணவுவகைகளை உட்கொள்ளும் படங்களும் அதிலிருந்தன.

இந்த படங்கள் உள்நாட்டில் ஈக்வடோர் ஜனாதிபதிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஈக்வடோரில், நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதியின் உல்லாச வாழ்க்கை புகைப்படங்கள் அங்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

இந்த புகைப்படங்களை யூலியன் அசாஞ்சேதான் கசிய விட்டதாக, ஈக்வடோர் ஜனாதிபதி கருதுகிறார். எனினும், இதை விக்கிலீக்ஸ் பகிரங்கமாக மறுத்துள்ளது. “அசாஞ்சே விவகாரத்தில் ஏதாவது காரணத்தை கற்பிக்க ஈக்வடோர் முயல்கிறது“ என விக்கிலீக்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.

முன்னதாக, அசாஞ்சே தூதரகத்திற்குள் ஒழுக்கமற்ற வாழ்க்கையை வாழ்ந்ததாக ஈக்வடோர் தூதரகம் தெரிவித்து சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தது. அவரது சமையலறை, கழிவறையை கூட சுத்தம் செய்வதில்லை, உள்ளாடைகளுடன் நடமாடுவார், சுவர்களை அசிங்கம் செய்வார் என ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here