அனைத்து பொறுப்புக்களையும் வடக்கிற்கே எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை, துரைராசசிங்கத்தை மட்டும் செயலாளராக்க வேண்டாம்: கிழக்கு தமிழ் அரசு பிரமுகர்கள் கூட்டாக கோரிக்கை!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய செயலாளர் நியமனம் குறித்த சிறிய சர்ச்சையொன்று தோன்றியுள்ளது. தற்போதைய செயலாளர் கி.துரைராசசிங்கத்தின் செயற்பாடுகளில் கட்சிக்குள் அதிருப்தி எழுந்துள்ள நிலையில், அவரை மாற்றியே தீர வேண்டுமென கிழக்கு தமிழரசுக்கட்சி பிரதானிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர் என்பதை தமிழ்பக்கம் அறிந்தது.

தமிழ் அரசுக்கட்சியின் தேசிய மாநாடு இம்மாதம் 26,27,28ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக மாவை சேனாதிராசா ஒரு வருடத்தின் முன்னர் கடிதம் மூலம் அறிவித்திருந்தார். கட்சிக்குள் தேசியப்பட்டியல் எம்.பி சர்ச்சை தலைதூக்கியபோது, மாவை அந்த முடிவை எடுத்திருந்தார். தற்போது, அந்த முடிவிலிருந்து பின்வாங்கி விட்டார்.

எனினும், மாவையின் ஒரு வருடத்திற்கு முந்தைய கடித விவகாரத்தை கையிலெடுத்த பிரதானிகள், புதிய தலைவர் தொடர்பாக பிரஸ்தாபிக்க ஆரம்பித்தனர். சிலர் இந்த பந்தயத்தில் குதித்துமிருந்தனர்.

பதவி விலகும் முடிவை தற்போது மாற்றம் செய்துள்ள மாவை, தனக்கு நெருக்கமான பொருளாளர் பொ.கனகபாபதி, நிர்வாக செயலாளர் குலநாயகம் மூலமாக வித்தியாசமான நகர்வொன்றை ஆரம்பித்துள்ளார். மாவையே மீண்டும் தலைவராக ஆதரவை வழங்கும்படி கட்சியின் எல்லா பிரமுகர்களுடனும் அவர்கள் பேசி வருகின்றனர்.

அண்மையில் மாவை சேனாதிராசா தலைமையிலான குழு கிழக்கிற்கு பயணம் செய்திருந்தது. தலைமையை மீண்டும் தானாகவே பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இதன்போது, பொ.கனகசபாபதி, குலநாயகம் ஆகியோர் கிழக்கு தமிழ் அரசுக்கட்சி பிரமுகர்களுடன் இது தொடர்பில் பேசி, மாவையை மீண்டும் தலைவராக்க அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென கோரியுள்ளனர்.

இதனால் மாவையின் தலைமை பதவியில் எந்த சிக்கலுமில்லை.

ஆனால், செயலாளர் பதவியில் குழப்பம் தோன்றியுள்ளது. தமிழ் அரசுக்கட்சியின் பிரதான “அனுசரணையாளராக“ கனடா கிளையின் குகதாசன் களத்தில் இறங்கியிருக்கிறார். அவரை கட்சியின் செயலாளராக்கி, நாடாளுமன்ற தேர்தலிலும் களமிறக்க இரா.சம்பந்தனும், கனடா கிளையும் விரும்புகிறார்கள்.

இதேவேளை, தற்போதைய செயலாளர் கி.துரைராசசிங்கத்தின் செயற்பாடுகளில் கட்சிக்குள் பலருக்கும் அதிருப்தியுள்ளது.

“கூட்டங்களில் குட்டிக்கதைகள் சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர, வேறொன்றையும் செய்யவில்லை. அவரது செயல், பேச்சுக்களால் கிழக்கில் கட்சி மீது கடுமையான அதிருப்தி உருவாகிவிட்டது. அவரை செயலாளராக வைத்துக்கொண்டு இங்கு இன்னொரு தேர்தலை சந்திக்க முடியாது“ என கிழக்கு தமிழ் அரசு கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

கிழக்கிற்கு மாவை தலைமையிலான குழு வந்தபோது, செயலாளர் பதவி தொடர்பாக விரிவாக பேசப்பட்டதாக தெரிவித்தார்.

“மாவையை தலைவராக தொடர ஆதரவளிக்கும்படி கேட்டார்கள். அதில் எமக்கு ஆட்சேபணையில்லை. ஆனால் செயலாளரை மாற்றியே தீர வேண்டுமென கிழக்கு எம.பிக்கள், முன்னாள் எம்.பிக்கள், மற்றும் முக்கியஸ்தர்கள் கூட்டாக வலியுறுத்தினோம். அவரால் கிழக்கில் கட்சிக்கு சேதம்தான் அதிகம். தேவையானால் செயலாளர் பதவியையும் வடக்கிற்கே எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கூட எமக்கு ஆட்சேபணையில்லை. ஆனால், துரைராசசிங்கத்தை மட்டும் செயலாளராக தொடர அனுமதிக்க வேண்டாம் என்றோம். ஆனால், தலைவர் வடக்கிற்கு வழங்கப்பட்டால், செயலாளரை கிழக்கிற்கு வழங்கியே தீர வேண்டும், இல்லாவிட்டால் விமர்சனங்கள் வரலாம் என்றார்கள். அப்படியானால், குகதாசனை செயலாளராக்கிக் கொள்ளுங்கள். துரைராசசிங்கத்தை விட அவரை ஏற்கலாம்“ என தெரிவித்ததாக, அந்த மூத்த பிரமுகர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here