இன்று வடக்கில் சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள் இவைதான்!

மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்

சூரியனின் வடதிசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ம் திகதியிலிருந்து 15ம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று (14ம் திகதி) குமுழமுனை, கொக்காவில் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.09 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-25 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here