இளம்கைதிகளை பார்வையிட்ட ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (13) பிற்பகல் நீர்கொழும்பு தளுபொதவிலுள்ள இளங்கைதிகள் சீர்திருத்த மத்திய நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.

இளங்குற்றவாளிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி, அங்குள்ள இளைஞர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

தமது வாழ்க்கை கதைகள் பற்றியும் தாம் இழைத்த தவறுகள் பற்றியும் சில இளைஞர்கள் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டதுடன், ஜனாதிபதியும் அவற்றை செவிமடுத்தார்.

சிறிய குற்றங்களை புரிந்துள்ள இளங்குற்றவாளிகளை வினைத்திறனாக புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்கள் பாரிய குற்றவாளிகளாக மாறுவதனை தவிர்த்து சமூகத்தில் நற்பிரஜைகளாக மாறுவதற்கு இந்த நிலையத்தின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இளைஞர்கள் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவதை தவிர்த்து, அவர்களிடத்தில் ஆன்மீக அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் நற்பிரஜைகளாக வாழ்வது பற்றிய தெளிவை வழங்குவதற்கும் அவர்களுக்கு தொடர்ச்சியாக அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி அந்நிலைய அதிகாரிகளுக்கு விளக்கினார்.

மேலும் அவ் இளைஞர்களை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மேம்படுத்துகின்ற நிகழ்ச்சித்திட்டங்களின் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதனைத்தொடர்ந்து அந்நிலையத்தின் நலன்பேணல் நடவடிக்கைகள் மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி, புனர்வாழ்வளிக்கப்படும் அனைத்து இளைஞர்களுக்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here