புதுவருட நிகழ்வில் ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு இதை கேட்கும்!

ஜனாதிபதி செயலகத்தின் புதுவருட நிகழ்வுகள், இன்று காலை 11 மணிக்கு இடம்பெறும். இதற்காக கட்சிகளின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்களிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த புது வருட நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இதேவேளை, ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் கடந்த சில வாரங்களாக பகீரத பிரயத்தனத்தில் ஈடுபட்டு வந்தனர். எனினும், ஜனாதிபதி நேரம் ஒதுக்காமல் “டிமிக்கி“ கொடுத்து வந்தார்.

கடந்த, வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணியில் மைத்திரியுடன் உரையாடிய இரா.சம்பந்தன், சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கி தருமாறு கோரியிருந்தார். இன்றையதினம், புதுவருட நிகழ்வில் நேரம் கிடைத்தால், ஜனாதிபதியுடன் சில விடயங்களையாவது பேசி விட வேண்டுமென்பதில் கூட்டமைப்பு உறுதியாக உள்ளதாக தெரிகிறது.

அதிகாரப்பகிர்வு தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழு, தனது ஆவணத்தை தயாரித்து, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த ஆவணம் தொடர்பாக ஆராய உடனடியாக சர்வகட்சி கூட்டத்தை நடத்தும்படி கூட்டமைப்பு கோரவுள்ளது.

புதிய அரசியலமைப்பு பணிகள் குழப்பத்தில் உள்ளதால், அதிகார பகிர்வை மாத்திரம் தனியாக நிறைவேற்ற அனைத்துக்கட்சிகள் கூட்டத்தில் முடிவேற்பட்டது. தேர்தல் முறை மாற்றம், நிறைவேற்று அதிகார ஒழிப்பில் ஒத்திசைவு ஏற்பட்டிருக்கவில்லை. இந்தநிலையில் அதிகார பகிர்வு தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க ஐ.தே.க சார்பில் ராஜித சேனாரத்ன, ஐ.மு.சு.கூ சார்பில் டிலான் பெரேரா, சரத் அமுனுகம, கூட்டமைப்பின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த குழுவின் அறிக்கையை எம்.ஏ.சுமந்திரன் தயாரித்து முடித்துள்ளார். அதை குழுவின் ஏனைய உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதன் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டும்படி, தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரவுள்ளது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here