மஹிந்தவை சந்திப்பதை தவிர்த்த இந்திய பாதுகாப்பு செயலாளர்: கோத்தா விவகாரத்தில் இந்திய உடும்புப்பிடி!

இந்திய பாதுகாப்பு செயலாளர் சன்ஜே மித்ரா கடந்த 7ம் திகதி இலங்கை வந்திருந்தார். இலங்கை, இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்தும், இந்தோ- லங்கா பாதுகாப்புத்துறை கலந்துரையாடல்களிற்காக இரண்டு நாள் இலங்கையில் தங்கியிருந்தார். அப்போது பல தரப்பட்ட பிரமுகர்களுடனும் அவர் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

பெரியண்ணன் நாட்டு முக்கிய பிரமுகர் வந்தால், இலங்கை தலைவர்கள் ராஜ உபசாரம் வழங்காமல் இருப்பார்களா? வழங்கினார்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கை பாதுகாப்பு செயலாளர் என இலங்கையின் முக்கிய பிரமுகர்கள் அனைவரையும்- ஒருவரை தவிர- இந்திய பாதுகாப்பு செயலாளர் சந்தித்து பேசியிருந்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பாதுகாப்பு செயலாளர், இலங்கையில் சந்திக்காத ஒரேயொரு பிரமுகர்- எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச.

இந்தியாவின் முக்கிய தலைவர் ஒருவர் இலங்கை வந்து, இலங்கையின் சக்திமிக்க தலைவர் ஒருவரை சந்திக்காமல் போனால், பின்னணியில் ஏதோ விவகாரம் இருக்கலாமல்லவா?. அது குறித்து தேடியபோது, சில நம்பகரமான தகவல்களை தமிழ்பக்கம் பெற்றது.

இந்திய பாதுகாப்பு செயலாளரை சந்திக்க மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்த போதும், அதற்கான நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்படவில்லையென்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.

கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்திற்கு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது என்பதை தூதரகத்தில் மூத்த அதிகாரியொருவரும் உறுதிசெய்தார். எனினும், சில சாக்குப்போக்குகளை சொல்லி சந்திப்பை இந்திய தரப்பு தவிர்த்து விட்டது.

இந்தியா ஏன் இந்த சந்திப்பை தவிர்த்தது?

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன தரப்பில் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ களமிறங்குவதை இந்தியா அடியோடு விரும்பவில்லை. அந்த செய்தியை சொல்வதற்காக, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் சில வாரங்களின் முன்னர் இலங்கைக்கு இரகசிய பயணமொன்றை செய்திருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே தமிழ்பக்கம் வெளியிட்டிருந்தது.

இந்தியாவின் அழுத்தங்கள் அதிகரிப்பதற்கு முன்பாக, தமது தரப்பு ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்து விட வேண்டுமென்பதற்காகவே, கோத்தபாயவே ஜனாதிபதி வேட்பாளர் என்ற செய்தியை மஹிந்த தரப்பு ஊடகங்கள் வாயிலாக கசிய விட்டது.

கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராவதை விரும்பவில்லையென்ற செய்தியை இரண்டாவது முறையாக- சற்று உறைக்கும் விதமாக- சொல்வதற்காகவே, அந்த சந்திப்பை இந்திய தரப்பு தவிர்த்துள்ளது.

இதேவேளை, இந்திய பாதுகாப்பு செயலாளர் இலங்கை வந்திருந்த சமயத்தில்தான், கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவிற்கு சென்றிருந்தார். அங்கு அவர் மீது இரண்டு வழக்குகள் தொடரப்பட்டு, அது தொடர்பான அறிவித்தல்களும் வழங்கப்பட்டிருந்தன. இந்த சமயத்தில் மஹிந்த ராஜபக்சவை சந்திப்பது, கோத்தபாயவிற்கு சார்பான அபிப்பிராயங்களை ஏற்படுத்தி விடக்கூடும் என்பதற்காகவும் இந்திய தரப்பு சந்திப்பை தவிர்த்ததாக தெரிகிறது.

மஹிந்த ராஜபக்ச இன்றும் இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத, சக்தி மிக்க அரசியல் தலைவர். அப்படியான ஒருவரை இதுவரை வெளிப்படையாக எந்த நாடும் புறக்கணிக்கவில்லை. எனினும், அவரது குடும்ப உறுப்பினர்கள் அரசியலுக்குள் நுழைந்து சிக்கலை ஏற்படுத்த ஆரம்பித்த பின்னர், இந்தியா வெளிப்படையாகவே மஹிந்தவிற்கு தனது அதிருப்தியை காண்பித்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here