விபத்தில் உயிரிழப்பவர்களின் குடும்பங்களின் கதை: பெண்ணெழுத்து 8

பி.சியா

யுத்தம் இட்டுச் சென்ற வடுவினால் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிகரித்துள்ளன என்று பார்த்தால், அதையும் மீறி நோய் விபத்து என்று கணவன்மாரை பறிகொடுத்து விட்டு தலைமைத்துவத்தை கையில் எடுத்து தம் கணவர்மார் செய்த தொழிலையே ஆண்கள் போல் தம்மை தாமே மனதளவில் எண்ணி தொழில் செய்து சமூகத்தோடு போராடி வாழும் பெண்கள் வடக்கில் ஏராளம் என்பதை கண்கூடவே காண முடிகின்றது.

இவர்களை பார்க்கும் பொழுது, சோராத தேகமும் தாழ்வில்லாத மனமும் முயற்சியையும் உழைப்பையும் கையிலெடுத்து ஓயாது உழைக்கும் இவர்கள்தான், பாரதி கண்ட கனவு பெண்களோ என்று மீண்டும் மீண்டும் நினைக்க தோன்றுகின்றது.

வடக்கின் எல்லா பிரதேசங்களிலும் இன்று அதிகரித்த நிலையில் உள்ள ஒரு விடயம் பெண் தலைமைத்தவ குடும்பங்கள் தான். ஒரு பெண் குடும்ப சுமையை பொறுப்பேற்று உழைப்பது என்பது சாதாரண விடயம் தான். ஆனால் நமது சமூகக்கட்டமைப்புக்குள் இருந்து முன்னுக்கு முட்டுக்கட்டைகளாக இருக்கும் தடைகளை உடைத்து அவர்கள் தொழில் புரிவதென்பது தான் சிரமமான விடயம். ஒரே வீதியினால் தினமும் ஒரு பெண் செல்வதே ஆபத்து என்ற நிலையில் இன்றய சமூகம் இருக்கையில் இவர்கள் தனித்து நின்று தொழில் செய்து முன்னேறுவது என்பது சாத்தியம் என்றாலும் பலமும் பாதுகாப்பும் அற்றவர்களாகவே பல பெண்கள் கண்கலங்குகின்றனர்.

கணவரை இழந்த பெண்கள் பொட்டு வைத்தாலும் பிழை, பொட்டு வைக்காவிட்டாலும் பிழை. பொட்டு வைத்தால் கணவனை பறி கொடுத்துவிட்டு மனதில் கொஞ்சம் கூட ஈரம் இல்லாமல் பொட்டும் பூவும் வைத்து இப்ப தான் இளமை போல ஆட்டம் போடுகின்றால் என்று ஒரு பகுதி பேசும். மறு பகுதியில் புதிதாக அறிமுகம் ஆகும் பொழுது எதற்காக பொட்டு வைக்கவில்லை கணவர் இறந்து விட்டாரா. அப்போ நீங்கள் மீண்டும் ஒரு திருமணம் செய்யலாமே. எங்களிடம் ஒரு வரம் இருக்கு பார்க்கட்டுமா இப்படியான கேள்விகளை கேட்பார்கள் என்று கண்கலங்கி கூறுகின்றனர் பல பெண்கள். அறிவியலும் தொழில்நுட்பமும் ஆகாயம் தொட்டாலும் நமது பண்பாடும் மரபுகளும் சமூகத்தில் ஒருவரை பற்றி ஒருவர் அலசும் பழக்கமும் இத்தனை துன்பங்களை கடந்த பின்னரும் மாறாமலே இருக்கின்றது என்பது மனவருத்ததிற்குரிய விடயமாகும்.

இன்று பல வெளிநாட்டு அமைப்புக்களும் தனியார்களும் புலம்பெயர் தமிழர்களும் வடகின் மீள் எழுச்சிக்காக உதவி செய்ய முன்வருகின்றனர். வங்கிகள் கடன் உதவிகளை செய்கின்றது. அரசாங்கள் பல வழிகளிலும் பணம் திரட்டி உதவுவதாக கூறுகின்றது. இவை அனைத்தும் பெருமளவில் முக்கியப்படுத்துவது பெண் தலைமைத்துவ குடும்பங்களை தான். ஆனால் இவர்களின் நோக்கம் சரியானதாக பலனுடையதாக இருப்பினும் உண்மையிலே தொழில் செய்ய முயன்று கொண்டு வருந்திக் கொண்டிருக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உரிய பணமோ பொருட்களோ போய் சேர்கின்றனவா என்பது கேள்வியாகவே உள்ளது.

அண்மையில் கூட மகளிர் அமைப்பு குழுவினால் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு, சமையல் செய்து வாழ்வாரத்தை நடத்துபவர்களுக்கு, சாப்பாட்டு கடை நடத்துபவர்களுக்கு பாத்திரங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் அதே பாத்திரம் தேவைப்படுவோர் பலருக்கு அந்த பொருட்கள் சென்றடையவில்லை. காரணம் அது பற்றிய விளம்பரமோ அறிவித்தலோ சமூகத்திடம் சென்றடைவது குறைவு என்பதால் தமது தேவையை வந்து கேட்க அஞ்சுவதோடு கொடுப்பது தெரியாமலே வீட்டுக்குள் இருந்து அழுதபடி இருக்கின்றனர். இதனை விட சுய தொழில் செய்வதற்கென்று கச்சேரியூடாக உதவிகள் செய்து கொடுக்கப்படுகின்றது. அதனை பெற்று கொள்ளும் அறிவு சமூகத்தில் பெண்களிடம் இல்லை. அதனை பிரதேச செயலகங்கள் கிராம அலுவலர்கள் இனம் கண்டு பெற்று கொடுப்பதும் இல்லை. இதனால் முன்னேறவே முடியாமல் தொழிலை சீராக செய்ய முடியாமலும் ஏக்கத்தோடு வாழ்கின்றனர் நமது குடும்ப தலைவிகள்.

அண்மையில் இப்படி பலரிடம் உதவி கேட்டும் கிடைக்காமல் தன் தொழிலை எப்படி செய்வது எப்படி முன்னேறுவது என்று தூக்கம் இன்றி கனவு கண்டும் ஏங்கிய படியும் வாழ்ந்து வரும் யாழ் நகரை அண்டி வாழும் பெண்னொருவரை சந்தித்து பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. திருமணம் செய்து 10 மாதத்திலே தன் குழந்தையையும் வயிற்றில் சுமந்தபடி கணவரை பறி கொடுத்த சோகம் அகலாதவராக நந்தகுமார் சாந்தி இன்னமும்.

கணரோடு சேர்ந்து திருமணநாளை ஒரு முறையும் கொண்டாடவில்லையே என்ற துக்கத்தில் இருந்தார். அவரிடம் இப்பொழுது எஞ்சியுள்ளது, ஒரு ஆண்டுக்கும் குறைந்த காலம் கணவருடன் வாழ்ந்த காலத்தின் நினைவுகளே. மனதுக்குள் அடங்கி கிடந்த கண்ணீரை சொரிய விட்டு மனம் திறந்து பேசிய சாந்தியிடம் உழைப்பின் வெறியும் நேர்மையும் ஒட்டியிருந்தது.

“எங்களுடைய பரம்பரை தொழில் பட்டறை தான் அப்பா அப்பப்பா என் கணவர் எல்லோருமே பட்டறை தொழில் தான். எனக்கு சின்ன வயதிருக்கும் பொழுது படிக்க பள்ளிக்கு அனுப்பவில்லை. எனக்கு மூக்கால் இரத்தம் வாறதென்ற சின்ன விடயத்திற்கு பயந்து காய்ச்சல் வந்திடும் என்று பள்ளி அனுப்பவில்லையாம். அதனால் சின்ன வயதில்’ இருந்த வீட்டில் நன்றாக வேலை செய்வேன். 10 வயதிருக்கும் போதே அப்பாவோடு சேர்ந்து பட்டறையில் கால் கொலுசு செய்ய கற்று கொண்டேன். அப்பாவுக்கு கைவேலை தான் செய்து கொடுப்பேன். ஆனால் 20 வயதை தாண்டும் பொழுது நானே தனித்து கொலுசு செய்ய கற்று கொண்டு விட்டேன். நான் படிக்காவிட்டாலும் வாசிப்பதற்குமத் கணக்கு பார்ப்பதற்கும் அப்பாவுடன் நின்று கற்று கொண்டேன். பின்னர் கணவரோடு சேர்ந்து பட்டறையை பெருப்பித்து பெரியளவில் நாங்கள் வந்து விடலாம் என்று கனவு கண்டேன். அது கடவுளுக்கே பொறுக்கவில்லை போலும் அவரை பறித்து விட்டார்.

பின்னர் எங்களுக்கு உதவியும் இல்லை. நானும் அம்மாவும் தங்கச்சியும் தான் என் பையனும் பிறந்ததும் மூவரும் தான் சேர்ந்து உழைத்து அவனையும் வளர்த்து எங்களுடைய வயிற்றையும் பார்த்தோம். இவருக்கு காணி இருந்ததினால வீட்டு திட்டதில் வீடொன்று கட்டி கொண்டம். தங்கச்சி திருமணம் செய்யவில்லை. இப்ப அம்மாவும் தங்கச்சியும் தனியாக இருக்கின்றனர். நானும் மகனும் தனியாக இருக்கின்றோம்.

நான் கொலுசு செய்து கொடுக்கும்தொழிலை தான் செய்து வந்தேன் அதனால் நல்ல லாபம் இருந்தது. தங்கச்சி தையல் . ஆனால் இப்பெல்லாம் இந்தியன் கொலுசினுடைய வரத்து அதிகம் என்பதால் எல்லோரும் அதை தான் வாங்குகின்றார்களன். செய்வது குறைவு. ஆனால் பாவனையில் செய்யும் இலங்கை வெள்ளி கொலுசு தான் தரமானது என்பது நம்மவர்களுக்கு புரிவதில்லை. என் மகன் பிறக்கும் கால கட்டத்தில் நான் செய்து கொடுத்த கொலுசினை இற்றை வரை என்னிடம் பொலிஸ் போட்டு பாவிப்பவர்கள் உள்ளனர். என் தங்கை போட்டிருக்கும் கொழுசு கூட 15 வருடம் ஆகிவிட்டது. நான் தான் செய்து கொடுத்தேன். அதன் பாவனைத் தன்மை யாருக்கும் இப்ப புரியிறதில்லை.

இப்ப அப்பப்ப கொலுசு செய்ய வரும் . ஆனால் நான் செய்ய முடியாதுள்ளது. எங்கள் பரம்பரை இயந்திரப் பொருட்கள்(கொலுசு செய்யும் இயந்திரங்கள்) பழுதாகி விட்டதால் கையினால் மிக சிரமப்பட்டு வேறு கடைகளில் கொடுத்து சில வேலைகளை செய்விச்சு தான் கொலுசு செய்து கொடுக்க வேண்டியுள்ளது. அதனால் லாபம் கிடைக்காது. அதனால் செய்வதை விட்டு விட்டேன்.

இப்ப சமையல் செய்கின்றேன். காலையில் உணவுகள் தயாரித்து விற்கின்றேன். எனகக்கு கால் கொலுசு தொழில் செய்வதில் தான் நாட்டம். கால் கொலுசு மெட்டி எல்லாம் திருமண நிகழ்வு காலங்களில் நிறைய ஓடர் வரும் லாமமும் அதிகம். ஆனால் அதை செய்வதற்கான வசதி தான் இல்லை. கச்சேரி கிராம உத்தியோகஸ்தரிடமெல்லாம் கடிதம் கொடுத்தேன் எல்லோரும் வாங்கி தருவதாக சொல்கின்றார்கள். வாங்கி தாற மாதிரி இல்லை. எனக்கு பட்டறைக்கான பொருட்கள் கிடைக்குமாயின் என்னால் நன்றாக உழைக்க முடியும்“ என்று பெருமையயாகவும் தொழில் கிடைக்குமா உதவி கிட்டுமா என்ற ஏக்கத்துடனும் பேசினார் சாந்தி.

சாந்தி போன்றவர்களை மாவட்ட செயலகங்கள் கண்டு கொள்ளுமா? இவர்களின் ஆசைப்படி சுய தொழில்களில் அவர்கள் முன்னேறுவார்களா? வடக்கின் பெண் தலைவிகளிடையில் மாற்றங்கள் நிகழுமா?

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here