வெருகல் கரையோரம் பெண்போராளிகள் பாலியல் வன்கொடுமைக்காளானர்களா?- பல பொய்களும் சில உண்மைகளும்!

“2004இல் வெருகல் ஆற்றங்கரையோரத்தில் கிழக்கு மாகாண போராளிகள் பலரை விடுதலைப்புலிகள் ஈவு இரக்கமின்றி கொன்றார்கள். தமது சகோதரர்கள் என்பதையும் உணர மறுத்து மிலேச்சத்தனமாக கொன்றார்கள். அது கூட பரவாயில்லை. கருணா படையணி பெண்கள் பலரை பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தி கொன்றார்கள். வெருகல் ஆற்றில் கருணா தரப்பு பெண்களின் உடல் நிர்வாணமாக மிதந்தது“

இப்படி டெம்ளேட் வசனங்களை பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். புலிகள் பாசிசவாதிகள் என நிறுவக் கிடைத்த இன்னொரு வாய்ப்பு என நினைத்துக் கெண்டு, ஒரு தரப்பினர் அதை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அனேகமாக, புலி எதிர்ப்பாளர்கள்தான் இதை சொல்பவர்கள்.

இதன் அர்த்தம், புலி எதிர்ப்பாளர்கள் என்ற ஒரே காரணத்தை முன்னிறுத்தி, அவர்கள் சொல்வதை கணக்கிலெடுக்காத உத்தியல்ல. உண்மையில் இது ஒரு டெம்ளேட் வசனம்தான். ஏனெனில், வெருகலில் என்ன நடந்ததென்பதை, டெம்ளேட் வசனத்தை உச்சரிக்கும் யாருமே அறிந்ததில்லை. அதை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டியதுமில்லை.

முக்கியமாக பெண் போராளிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளானார்கள் என்ற குற்றச்சாட்டை சுமத்துபவர்கள், முறையான கள ஆய்வை செய்யவில்லை.

“விடுதலைப்புலிகளில் இருந்து கருணா அணியுடன் இணைந்து போரிட்ட பெண் போராளிகளில் ஒரு சிறிய எண்ணிக்கையானவர்கள், பின்னர் குழந்தை பரசவித்தார்கள். அது தொடர்பான அறிக்கைகளில்- வாகரை முன்களத்தை கைப்பற்றிய புலிகள் தம்மை வன்புணர்விற்குட்படுத்தியதாக குறிப்பட்டனர்“ என்ற ஒரு தகவலின் அடிப்படையிலேயே, புலிகளின் மீது அந்த பாலியல் குற்றச்சாட்டு கிளம்பியது.

சில மனித உரிமை அமைப்புக்கள், வெளிநாடுகளில் உள்ள புலி எதிர்ப்பு புத்திஜீவிகள் இந்த கருத்தை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால், உண்மையான கள ஆய்வை இவர்கள் மேற்கொண்டால் அதிர்ச்சி தரும் தகவல்களே கிடைக்கும். அப்பொழுது, புலிகள் மீது பழி சுமத்த உருவாக்கப்பட்ட தகவல் அது. அது, அந்த களத்தில் நின்ற கருணா அணி முக்கியஸ்தர்களிற்கே தெரியும்.

உண்மையில் நடந்தது என்ன?

கருணா கலவரத்தின் பின்னர், அவருடைய மகளிர் அணி பெண் போராளிகள் சிலர் கர்ப்பவதிகளாக அடையாளம் கண்டு, திருமணத்தின் முன்னரே குழந்தை பிரசவித்து, சில தன்னார்வ அமைப்புக்களால் பராமரிக்கப்பட்டனர். வழக்கமான அரச செயற்திட்டத்திற்கமைய சில குழந்தைகள் தத்தும் கொடுக்கப்பட்டன. கசப்பான இந்த மறுபக்கத்தை இதுவரை பேசாமல் இருந்ததற்கு காரணம்- எல்லா முரண்களிற்கும் அப்பால் இது தமிழர்களின் உள்ளக மோதல். உண்மைகள் உறங்காதுதான். இப்போதைக்கு நமது காயங்களை நாமே எதற்கு கிளற வேண்டும் என்பதன் அடிப்படையில், சில விடயங்களில் பலரும் மௌனமாக இருக்கிறார்கள்.

ஆனால், புலி எதிர்ப்பாளர்கள் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் புதிய கதையொன்றை பரப்ப முற்படுகிறார்கள். உண்மையில், இந்த கதையை பரப்பும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தரப்பில் இப்படியான கதைகளை பரப்புபவர்கள் இளையவர்கள். இந்த கதைகளை வேறுயாரோ சொல்லி, அதை உண்மையான சம்பவங்களாக நம்பியிருப்பவர்கள்.

வெருகல் ஆற்றோரம் நடந்த அந்த கசப்பாக நாட்களில் பெண்கள் யாரும் பாலியல் கொடுமைக்கு உள்ளாகவில்லை. ஆனால் அந்த நாட்களில் வெருகல் கரையோரம் நின்ற பெண்களில் சிலர் குழந்தை பிரசவித்தது உண்மை.

வெருகலில் நிறுத்தப்பட்ட பெண்கள் அணி, புதிய போராளிகள். கட்டாயமாக இணைக்கப்பட்டவர்களும், தாமாக இணைந்தவர்களுமே அந்த அணியில் இருந்தனர்.  அதிலிருந்த பெரும்பாலானவர்கள் எதிர்கொண்ட முதலாவது மோதல் அதுதான். அந்த சூழலை அவர்களால் எதிர்கொள்வது கடினம். இதனால், கருணா அணியினரே ஒரு உத்தியை செய்தார்கள். ஒவ்வொரு நிலையிலும் ஆண், பெண் போராளிகளை கலந்து நிறுத்தினர். ஜெயசிக்குறு யுத்தகாலகட்டத்தில் புலிகள் வன்னியிலும் இந்த உத்தியை கையாண்டனர். அதையே கருணா தரப்பும் கையாண்டது.

இதன்விளைவே, பின்னாளில் அந்த அணியிலிருந்த பெண் போராளிகள் பலர் தாயாக நேர்ந்தது. எனினும், கருணா தரப்பு இந்த உண்மையை வசதியாக மறைத்து விட்டது.

அதேபோல, வெருகல் சகோதர படுகொலையை புலிகள் மீதான பழியாக, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினர் இன்றும் நினைவுகூர்கின்றனர்.

அந்த நாட்களை வரலாற்றின் ஓட்டத்தில் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். 70களில் இருந்து கட்டுக்கோப்பாக- ஒரே இலட்சியத்துடன் ஒரு அமைப்பு உருவாகிறது. அதை உருவாக்கிய பிரபாகரனினிற்கு, அர்ச்சுனனிற்கு தெரிந்த கிளியாக, தமிழீழம் மட்டுமே தெரிகிறது. அதை நோக்கி அவர் பயணிக்கிறார். அதற்காக பின்னாளில், தன்னையும், தன் குடும்பத்தையும் கூட பலியிடுகிறார். அவர் எதற்கும் சமரசம் செய்யவில்லை. அவரது மூத்த பிரதானிகள் எல்லோருமே அவரது வழியிலேயே இறுதி முடிவை எடுத்தனர். பிரபாகரனும், அவரது மூத்த பிரதானிகளும் தமது இலக்கில் தெளிவாகவும், விசுவாசமாகவும் இருந்தார்கள்.

கருணா பிளவு அவரது இலக்கை பலவீனப்படுத்த ஏற்படுத்தப்பட்ட நிகழ்வு. கருணா பிளவு தத்துவார்த்தமான பிளவல்ல. அது தனிமனித பலவீனங்களின் விளைவு. வரலாற்றுரீதியான இந்த விவகாரத்தை அணுகினால், கருணா என்ற தனி மனிதனின் பிரச்சனைக்காக தாயகக்கோட்பாட்டை சிதைக்கும் நகர்விற்கு பணிந்து பிரபாகரன் தனது முடிவிலிருந்து ஒதுங்கிக் கொள்வதா அல்லது கிழக்கு குழப்பத்தை முறியடிப்பதா சாத்தியமான சம்பவம் என்பதை புரிந்து கொள்ளலாம்.

கிழக்கு குழப்பத்தில், உண்மையில் செய்யப்பட்டிருக்க வேண்டிய நகர்வு- கருணாவை ஒதுங்கிச் செல்லும்படி வலியுறுத்தியிருக்க வேண்டியதே. அதை யாரும் செய்யவில்லை. இன்றும் அதைப்பற்றி யாரும் சுயவிமர்சனம் செய்யவில்லை.

இதன் அர்த்தம்- வெருகல் கரையோரம் நடந்த மோதலில் நடந்த கொலைகளை நியாயப்படுத்துவதல்ல. அந்த மோதலில் இருதரப்பிலுமான இறந்தவர்கள் அதிகபட்சமாக 30 இற்குட்பட்ட எண்ணிக்கைதான். எனினும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் வேறு ஒரு தொகையை காண்பிக்கிறார்கள். அது முழுமையான கிழக்கு மோதலின் கணக்கா என்பது தெரியவில்லை. அதை அவர்கள் வெளிப்படையாக- நேர்மையாக பகிரங்கப்படுத்த வேண்டும்.

இந்த சமயத்தில் இன்னொரு முக்கியமான விடயத்தையும் குறிப்பிட வேண்டும்.

அதற்கு முன்னதாக வெருகல் கரையோர சூழலை விபரித்து விடுகிறோம்.

வெருகல் ஊடாக புலிகள் முன்னேறலாமென கருதி கருணா அணியினர் நிறுத்தப்பட்டனர். அந்த அணிக்கு கருணாவின் சகோதரர் ரெஜி கட்டளை அதிகாரி. இன்றைய பிள்ளையான் உள்ளிட்ட சிலர் அடுத்த கட்ட அதிகாரிகள்.

கிழக்கில் போரிட்ட கீழ்மட்ட போராளிகள் பெரும்பாலானவர்கள் இந்த மோதலில் சிக்க விரும்பவில்லை. இன்னும் ஒரு தொகுதியினர் அரசியல் தெளிவற்றவர்கள். பொறுப்பாளர்கள் காட்டுபவர்களை எதிரிகளாக கருதுபவர்கள். உயர்மட்டத்தில் ஒரு பகுதியினர் கருணாவை ஆதரித்தனர்.

கருணா அணி மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக, கிழக்கு போராளிகளுடன் புலிகள் இரகசியமாக தொடர்பு கொண்டு பேச்சு நடத்தினர். அவர்களிற்கு நிலவரத்தை புரிய வைத்து, தமது பக்கம் அழைத்தனர். இதற்கு நல்ல பலன் கிடைக்க தொடங்க, கருணா தரப்பு இந்த தொடர்ப வழிகளை துண்டித்தது. போராளிகளிற்கு இலகுவாக வோக்கி டோக்கி கிடைக்காத விதமாக பார்த்துக் கொண்டார்கள்.

வெருகலில் சொர்ணம் தலைமையில் புலிகள் அரண் அமைத்து, பல நாட்கள் காத்திருந்தனர். கிழக்கு பிளவு தனிமனித பலவீனம் என்பதை ஒலிபெருக்கிகள் ஊடாக புலிகள் அறிவித்து, முன்னரணில் நின்றவர்களை தமது பக்கத்திற்கு அழைத்தனர். அந்த அழைப்பை ஏற்று புலிகளிடம் சிலர் சரணடைய தொடங்க, தமது பக்கமிருந்து சரணடைய செல்பவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுமென எச்சரித்தனர்.

பின்னர், புலிகளின் அறிவிப்புக்கள் தமது பகுதியிலுள்ளவர்களிற்கு கேட்கக்கூடாது என்பதற்காக நெருக்கமாக ஒலிபெருக்கிகளை பொருத்தி, ஹிந்திப்பாடல்களை ஒலிபரப்பினார்கள். அதாவது, தமது தரப்பினால் முன்னரணில் நிறுத்தப்பட்டவர்களை சுய முடிவெடுக்க வாய்ப்பற்ற நிலையில் பலிக்கடாவாக்கினார்கள் என்று கொள்ளத்தக்க நிலைமையை உருவாக்கியிருந்தனர்.

வெருகலில் உயிரிழந்தவர்களிற்கான நினைவஞ்சலியை அல்ல, பொறுப்புக்கூறலையே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் செய்ய வேண்டும். அஞ்சலி நிகழ்வின் மூலம் அந்த உயிரிழப்புக்களிற்கான பொறுப்புக்கூறலில் இருந்து அன்றைய கிழக்கு பிரதானிகள் தப்பிக்க முடியாது.

வெருகலில் அப்பாவி போராளிகளை நிறுத்திவிட்டு, மோதல் ஆரம்பித்ததும் பிரதானிகள் தப்பிச் சென்று விட்டனர். பின்னாளில், ஒரு “அமைப்பு அரசியலாக“ இந்த நினைவேந்தலை அவர்கள் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

உண்மையில், அங்கு உயிரிழந்த அனைவருக்கும் தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்துவதே முறை. அந்த அஞ்சலியை இப்போது செய்யும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பு, அந்த உயிரிழப்புக்களிற்கான பொறுப்புக்கூறலை செய்யட்டும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here