இவர்களில் யார் அடுத்த பிரதம நீதியரசர்?

தற்போதைய பிரதம நீதியரசர் நளின் பெரேரா இம்மாதம் 28ம் திகதியுடன் ஓய்வு பெறுகிறார். அன்று தனது 65வது வயதை பூர்த்தி செய்யும் பிரதம நீதியரசர், தனது கடமையிலிருந்து ஓய்வுபெறுகிறார்.

புதிய பிரதம நீதியரசராக யார் நியமிக்கப்படுவார் என்ற மிகப்பெரிய கேள்வி இப்பொழுது எழுந்துள்ளது.

புதிய பிரதம நீதியரசரை முன்னிறுத்தி பெரும் அரசியல் மோதலொன்று உருவாகுமென்பதை தமிழ்பக்கத்தில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். புதிய பிரதம நீதியரசர் நியமிக்கப்பட்ட பின்னர், தனது பதவிக்காலம் குறித்து உயர்நீதிமன்றத்தில் ஜனாதிபதி விளக்கம் கோருவார் என தெரிகிறது.

ஜனாதிபதியின் இந்த நகர்வை, அரசியலமைப்பு பேரவையில் வைத்து முறியடிக்க பிரதமர் முழு முயற்சியெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்படுபவரை, அரசியலமைப்பு பேரவை அங்கீகரித்தால் மாத்திரமே, அவர் பிரதம நீதியரசராக முடியும்.

தற்போதைய நிலையில் யார் பிரதம நீதியரசராக தகுதியானவர்?

பிரதம நீதியரசராகும் பிரகாசமான வாய்ப்பு தற்போதைய சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவிற்கே இருப்பதாக கருதப்படுகிறது. வரும் டிசம்பர் 2ம் திகதி அவர் 60வது வயதை பூர்த்தி செய்கிறார். இன்னும் ஐந்தரை வருடங்கள் பிரதம நீதியரசராக சேவையிலிருக்க முடியும்.

இது தவிர, தற்போதைய உயர்நீதிமன்ற நீதியரசர்களாக உள்ள புவனேக அலுவிகார, சிசிர அவ்ரூ, பிரசன்ன ஜயவர்த்தன ஆகியோரில் ஒருவரும் ஜனாதிபதியின் பரிந்துரையில் இடம்பெறலாமென கருதப்படுகிறது.

புவனேக அலுவிகார இன்னும் இரண்டரை வருடங்களில் 65 வயதை பூர்த்தி செய்வார். சிசிர அவ்ரூ மூன்றரை வருடங்களில் 65 வயதை பூர்த்தி செய்வார்.

இவர்களில் முதல் ஜனாதிபதியின் முதல் தெரிவாக, தற்போதைய சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவையே, ஜனாதிபதி கண்ணைமூடிக் கொண்டு தெரிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒக்ரோபர் அரசியல் குழப்பத்தின் பின்னர் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்களால், உடனடியாக தனது பதவிக்காலம் குறித்து விளக்கம் கோர ஜனாதிபதி விரும்பியிருக்கவில்லை. அந்த அமர்விடம் தன் குறித்த எதிர்ப்புணர்வு இருக்கலாமென கருதியோ என்னவோ, புதிய பிரதம நீதியரசர் நியமிக்கப்பட்ட பின்னரே ஜனாதிபதி உயர்நீதிமன்றத்தை நாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், அரசியல் குழப்ப தீர்ப்பை வழங்கிய அமர்வில் இருந்த புவனேக அலுவிகார, சிசிர அவ்ரூ, பிரசன்ன ஜயவர்த்தன ஆகியோரும் தகுதியானவர்கள் பட்டியலில் உள்ளனர்.

எப்படியோ, ஜனாதிபதியின் முதல் தெரிவாக தற்போதைய சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய இருந்தால், அதை நிச்சயம் அரசியலமைப்பு பேரவை ஏற்றுக்கொள்ளாது. இது தகுதி சார்ந்த விடயமாக அல்லாமல், பின்னணி அரசியலை கொண்ட விடயமாக இருக்கிறது. இதனால்தான், புதிய பிரதம நீதியரசரை முன்னிலைப்படுத்தி பெரிய அரசியல் குழப்பம் மீண்டும் ஆரம்பிக்கலாமென ஏற்கனவே எச்சரித்திருந்தோம்.

தற்போதைய நிலையில், அரசியலமைப்பு பேரவையில் புதிதாக இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் எதிர்க்கட்சி அங்கத்துவத்தை பெற்றாலும், ரணில் விக்கிரமசிங்கவின் விருப்பங்களிற்கு எதிராக அரசியலமைப்கு பேரவைக்குள் நிச்சயம் செயற்பட மாட்டார். அங்கும் ரணிலை நிபந்தனையின்றி காப்பாற்றுவார். இதன்மூலம், அரசியலமைப்பு பேரவைக்குள் ரணில் தரப்பே, பெரும்பான்மையை கொண்டிருக்கும்.

அரசியலமைப்பு பேரவையை கடந்து புதிய நீதியரசர் ஒருவரை நியமிப்பது, ஜனாதிபதிக்கு பெரிய தலையிடியாக அமையப் போகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here