புலிகளின் பகுதிக்குள் ஊடுருவியவருக்கு கொழும்பில் வைக்கப்பட்ட பொறி: சிவராம் கொலை 13

சிவராமை கொன்றது யார் என்ற கேள்விக்கு இடியப்ப சிக்கலை விட சிக்கலானது விடை. புலிகள் தொடங்கி, சி.ஐ.ஏ வரை கையை காட்டுபவர்கள் பலர் உள்ளனர். இதில் உள்ள சூட்சுமங்களுடன், அந்த கொலையை செய்தது யார் என்பதை சொல்வதே இந்த மினி தொடர்.

சிவராமை கொன்றது யார் என்பதை சொல்வதற்கு முன்னர், சிவராமை யார் எல்லாம் கொல்லவில்லையென்பதை பகுதிபகுதியாக குறிப்பிட்டு வருகிறோம்.

புலிகள் மற்றும் கருணா குழுவின் கொலைப்பட்டியலில் சிவராம் இருந்தார்தான். ஆனால், அவர்கள் “போடுவதற்கு“ இன்னும் காலமிருந்தது என்பதை குறிப்பிட்டிருந்தோம்.

அதேபோல, இந்த கொலையை புளொட் அமைப்புத்தான் செய்தது என ஒரு பகுதியினர் சொல்வதும் தவறு என்பதையும் குறிப்பிட்டிருந்தோம். புளொட் தொடர்பாக சில விசயங்களை சொல்லியபோது, இடையீடாக இரண்டு விடயங்களை சொல்ல வேண்டியதாகி விட்டது. ஒன்று- புளொட் மோகன். மற்றது- செய்யாத வேலைகளிற்காக எல்லாம் எப்படி புளொட் கூலி வாங்கியது என்பதை.

புளொட் மோகன் என்பவர் புளொட் அமைப்பின் முக்கியஸ்தர் என்றுதான் பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் மோகனுடன் ஒட்டிய ஒட்டுப்பெயரான புளொட் என்பது, அவர் 1989கள் வரை அந்த அமைப்பில் இருந்ததால்தான் ஏற்பட்டது என்பதை குறிப்பிட்டோம். 1989களின் பின்னர்- சிலாவத்துறையில் புளொட் முகாமை புலிகள் தாக்கியதும், மோகன் புளொட்டை விட்டு வெளியேறி விட்டார் என்பதை குறிப்பிட்டிருந்தோம்.

அதன் தொடர்ச்சியாக, மோகன் தொடர்பான சில அவசியமான குறிப்புக்களை தந்திருந்தோம். வரலாற்றில் மோகனின் பாத்திரம் என்னவென்பதையும், அவர் புளொட்டுக்கு வெளியில் எப்படி செயற்பட்டார் என்பதையும் புரிந்து கொள்ளவே அந்த தகவல்களை தந்திருந்தோம்.

ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பின் முக்கிய தளபதியாக இருந்து, பின்னர் இந்திய இராணுவத்தால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய இராணுவத்தின் தளபதியாக இருந்த காளித் கொலை பற்றி, இதுவரை வெளிப்பட்டிராத முக்கிய தகவல் ஒன்றையும் குறிப்பிட்டிருந்தோம்.

இதன் தொடர்ச்சியாக, இந்த பாகத்திலும் மேலும் சில தகவல்களை தருகிறோம்.

காளித் வசம் நிறைய பணம், ஆயுதம் இருப்பதை அறிந்த பின்னரே, அவரை கொல்லும் முடிவை மோகன் எடுத்தார். இந்தியப்படைகள் வெளியேறியதும், மட்டக்களப்பு காட்டுக்குள் நிர்க்கதியாகிய காளித்திற்கு, உதவிகோர மோகன் மட்டுமே இருந்தார்.

இதேவேளை, வவுனியாவில் புளொட் அமைப்பில் செயற்பட்ட மோகன், சிலாவத்துறை முகாம் தாக்குலையடுத்து, மட்டக்களப்பில் செயற்படப் போவதாக புளொட் தலைமையிடம் கூறிவிட்டு மட்டக்களப்பு வந்தார். எனினும், மட்டக்களப்பு வந்ததும் புளொட்டுடனான தொடர்புகளை துண்டித்து, காட்டுக்குள் தங்கியிருந்து செயற்பட ஆரம்பித்தார். இந்த சமயத்தில் இந்தியாவின் கீழ் செயற்பட்ட தமிழ் தேசிய இராணுவத்தின் தளபதி காளித், மற்றும் இலங்கை இராணுவத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தினார்.

இந்த இடத்தில் இருந்துதான் மோகனின் இன்னொரு அத்தியாயம் ஆரம்பித்தது.

காளித்தை கொன்று அவரிடமிருந்த பணத்தை எடுத்துக் கொண்ட பின்னர், மோகன் கொழும்பில் தங்கினார். அப்பொழுதே இராணுவத்துடன் இணைந்து செயற்பட தொடங்கி விட்டார்.

இலங்கை இராணுவம், புலிகள் மற்றும் இந்திய படைகளுடன் என சமநேரத்தில் மூன்று தரப்புடனும் மோதிக் கொண்டிருந்த இயக்கம் புளொட். ஆனால் வரலாற்றில் அது சரியாக பதிவாகியிருக்கவில்லை. உமாமகேஸ்வரனிடமிருந்த இந்திய எதிர்ப்புணர்வும், இந்திய புலனாய்வு அமைப்புக்களின் பின்னணியில் அவர் கொல்லப்பட்டதும் முறையாக பதிவாகியிருக்கவில்லை.

இந்த மோதல் சமயத்தில் எந்த ஆயுத வழங்கலுமில்லாமல் புளொட் திண்டாடியது. உமாமகேஸ்வரனை கொன்றால் மாத்திரமே, அமைப்பிலுள்ளவர்கள் உயிர் தப்பலாமென அப்போது சிவராம் பிச்சாரம் செய்ததையும் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். இந்த சமயத்தில் தன்னிடம் இருந்த பணத்தின் மூலம், புளொட் அமைப்பிலிருந்த போராளிகள் பலரை தனது பக்கம் மோகன் இழுத்தெடுக்க தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த புளொட் மாணிக்கதாசன், மோகனை கொலை செய்ய வேண்டுமென முடிவெடுத்த சம்பவமெல்லாம் நடந்தது.

பின்னர், படிப்படியாக இராணுவத்துடன் நெருங்கி, இரணுவத்தின் புலனாய்வு பிரிவின் முக்கியஸ்தர்களில் ஒருவராகி விட்டார் மோகன். ஆரம்பத்தில் ஆட்களை அடையாளம் காண்பதில் ஆரம்பித்த அவரது பணி, பின்னர் புலிகளின் பகுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவது வரை வளர்ந்திருந்தது. 2000களில் மட்டக்களப்பில் புலிகளின் பகுதியில் ஆழ ஊடுருவும் படையணி நடத்திய முதலாவது தாக்குதலிலும் மோகனே முக்கிய பங்காற்றினார்.

பின்னர் அத்துகிரிய மிலேனியம் சிற்றியில் செயற்பட்ட ஆழஊடுருவும் படையணியின் அமைவிடம், பொலிஸ் சோதனையில் அம்பலமானதில், அங்கு செயற்பட்ட பலரின் பெயர் விபரம் வெளியானது. இதன்பின்னரே மோகன் குறிவைக்கப்பட்டார்.

மோகனை புலிகள் குறிவைத்ததும் சுவாரஸ்யமான கதை.

இந்த தொடரின் முன்னை பாகத்தை படிக்க: 40 இலட்சம் பணத்திற்காக நடந்த கொலை… புலிகளின் தலையில் விழுந்த பழி: சிவராம் கொலை 12

மட்டக்களப்பில் இயங்கிய மதுபான விற்பனை நிலையமொன்றின் உரிமையாளர் மூலமே அவர் குறிவைக்கப்பட்டார். அவர் கொழும்பில் மதுபான விற்பனை நிலையமொன்றை அமைக்க முயற்சிப்பதை போல மோகனிடம் காண்பித்து வந்தார்.

இதற்குள் மோகனிற்கு திடீர் பணத் தேவை ஏற்பட்டது. தன்னிடம் நெருங்கிய சிலரிடம் இரண்டு நாளில் தருவதாக சில இலட்சம் ரூபா பணத்தை கேட்டார். ஆனால் அவர்களிடம் அப்போது அவ்வளவு பணமிருக்கவில்லை. அந்த வர்த்தகரிடம் மோகன் பணத்தை கேட்க, ஒருநாள் காலையில் பணத்தை கொடுப்பதை போல வந்தவர்கள் மோகனின் குடியிருப்பிற்கு அருகில் அவரை சுட்டுவிட்டு தப்பித்தனர்.

(தொடரும்)

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here