வயது குறைந்த ஆணை காதலித்தேன்… பிரிவிற்கு காரணமென்ன?: மனமே நலமா?

உங்கள் சந்தேகங்களை கேளுங்கள்

பதிலளிக்கிறார்
கு.நக்கீரன்
உளவள ஆலோசகர்

லக்ஷன் (22),
கிளிநொச்சி

சிறு வயதிலிருந்தே விருப்பமின்றி எனது சித்தப்பாவால் ஓரினச் சேரர்க்கைக்குப் பழக்கப்படுத்தப்பட்டேன். அறியாத வயது என்பதால் அப்போது இதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் இப்போது இந்த உணர்வால் மிகவும் கஷ்டப்படுகின்றேன். இதை ஒரேயடியாக ஒதுக்கவும் முடியவில்லை. இதை ஏற்றுக் கொள்ளவும் குற்ற உணர்வு தடுக்கின்றது. ரொம்பவே கஷ்டப்படுகின்றேன். எனக்கு ஒரு வழி கூறுங்கள்?

பதில்: அன்புச் சகோதரா! நீர் வீணாகக் குழம்பிப் போயுள்ளீர். உண்மையில் அநேகமான ஆண்களின் சிறு வயதில் இந்த மாதிரியான நிகழ்வுகள் நடைபெறுவது உண்டு. அதற்காக அவர்கள் எல்லோரும் ஓரினச் சேரக்கையாளர்கள் ஆவதில்லை.
உண்மையில் ஓரினச்சேர்க்கை இயல்புள்ள நபர்கள் சமூகத்தில் மிகக் குறைந்த சதவீதத்திலேயே (1-2 வீதம்) உள்ளனர். இவர்களின் பாலியல் உணர்வுத் திருப்தி என்பது ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகளிலேயே உள்ளது. இவர்களைப் பொறுத்தவரை எதிர்ப்பால் உறவு என்பது திருப்தியற்ற, விரும்பத்தகாத ஒன்றாகவே இருக்கும். இப்படியான பலர் சமூக அந்தஸ்துக்காக திருமண பந்தத்தில் இணைந்து பின் தன் வாழ்க்கைத் துணையின் பாலியல் வாழ்வைத் திருப்திப்படுத்த முடியாது துன்பப்படுகின்றனர்.

இதன் காரணமாகவே இன்று பல மேற்குலக நாடுகள் ஓரினச்சேர்க்கையாளர்கள் தொடர்பான தமது சமூக அணுகுமுறைகளை மாற்றி மனித உரிமைப் பண்புகளின் அடிப்படையில் செயற்படத் தொடங்கியுள்ளனர்.

நீர் உண்மையில் ஓர் ஆண் ஓரினச்சேர்க்கையாளன் எனின் இந்த விடயங்களையிட்டு அதிகம் கஷ்டப்படமாட்டீர்.

முதலில் உமது பாலியல் உறவுமுறை எது என்பதை நீர் தெளிவாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். நீர் உண்மையில் ஓர் ஆண் ஓரினச்சேர்க்கையாளன் எனின் உமக்குச் சில ஆலோசனைகள் தருகின்றேன்.

1) ஆண் ஓரினச்சேர்க்கை (பெண் ஓரினச்சேர்க்கையும்தான்) தற்போது வரை இலங்கைச் சட்டத்தில் தண்டனைக்குரிய குற்றமாகவே உள்ளது.

2) இன்னும் எமது சமூகம் இவர்கள் தொடர்பில் சரியான, நேர்முகமான மனப்பாங்கைக் கொண்டிருக்கவில்லை.

3) சமூக அந்தஸ்துக்காக உம்மால் திருமணம் செய்து வாழ முடியுமா? அல்லது நீர் ஒரு இருபாற் சேர்க்கையுள்ள நபராக இருப்பீரா? இதனால் ஏற்படும் பிரச்சினைகளை உம்மால் எதிர்கொள்ள முடியுமா?

4) உமது மனவலிமையால் உம்மை நீரே மாற்றிக் கொண்டு இப் பிரச்சினையில் இருந்து வெளிவர முடியுமா?

5) ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்போர் உலகம் முழுவதும் எச்.ஐ.வி நோய்க்கான ஆபத்தை அதிகளவில் எதிர்கொள்பவர்களாக உள்ளனர். அவர்களுள் நீரும் ஒருவரா?

மேற்கூறிய கேள்விகளுக்கான உமது விடைகளை ஆறுதலாக ஆராய்ந்து அறிவீராயின் உமது பிரச்சினைக்கான தீர்வை நீரே ஏற்றுக் கொள்வீர்.

தர்சிகா (23)
யாழ்ப்பாணம்

ஒரு வருடமாக என்னை விட ஒரு வயது குறைந்தவரைக் காதலிக்கின்றேன். அவரும் என்னை உயிராகக் காதலித்தார். ஆனால் கடந்த இரு மாதங்களாக வெளியூருக்கு வேலைக்குச் சென்றதில் இருந்து அவர் என்னைத் தவிர்க்க நினைக்கின்றார். ஆனால் ‘நான் தப்பு செய்ய மாட்டேன்’ என்று அடிக்கடி சொல்வார். இப்போது அவரும் வேறு ஒரு பெண்ணும் காதலிப்பதாக நான் அறிந்தேன். இது பற்றி அவரிடம் கேட்டதற்கு ‘நீ என்மேல் சந்தேகப்படுகின்றாய். இனிமேல் நமக்குள் ஒத்து வராது’ என்கிறார். என்னால் அவரை விட்டுக் கொடுக்க இயலவில்லை. நான் என்ன செய்வது?

பதில்: பிரியமான சகோதரி! உங்களின் நீண்ட மடலினை வாசிக்கும் போதே உங்களின் உண்மையான காதலுணர்வு புரிகின்றது. என்ன செய்வது? நீங்கள் உங்களுக்கு ஏற்பட்ட காதலுணர்வை வெளிப்படுத்த ஒரு ஆண் கிடைத்து விட்ட நிலையில் காதலித்து இருக்கின்றீர்கள். மனித வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் இயல்பான உணர்வுதானே காதல். உண்மையில் காதலுணர்வு என்பது ஒரு பூட்டுப் போன்றது. பொருத்தமான சாவி கிடைத்தால் மட்டும் திறக்கும். பொருத்தமில்லாத சாவிகளும் சில வேளைகளில் பூட்டைத் திறக்கும். ஆனால் எப்போதும் அது சரியாக இருக்காது. கஷ்ட நேரங்களில் திறபடாது சிக்கல் கொடுக்கும்.

உங்கள் காதல் துணையும் உங்களுக்குப் பொருத்தமில்லாத ஒரு ஆண் என நினைக்கின்றேன். ஏனெனில் உங்களைப் போன்ற தூய காதலுள்ள ஒரு பெண்ணுக்கு ‘காதலி என்றால் ஒருத்திதான்’ என்ற மனப்பாங்கு உள்ள ஆண்தான் வேண்டும். நீங்கள் இப்போது தேர்ந்தெடுத்துள்ள காதலன் ‘கள்ளச் சாவி’க்கு உரிய இயல்புகளையே கொண்டவர். உங்களுக்குப் புரியும் என நினைக்கின்றேன். ஆண்கள் மட்டுமல்ல பெண்களிலும் பல ஆண்களைக் காதலிக்கும் பெண்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

உண்மையில் காதல் என்பது தனியே உடற் கவர்ச்சியின் அடிப்படையில் வரக்கூடாது. புற அழகில் தொடங்கி, அக அழகில் மயங்கி, பின் அகமும் புறமும் இணைந்து வாழும் வாழ்க்கையே காதல் வாழ்க்கை. இதில் அறிவு, மனப்பாங்கு, வாழ்க்கை முறை, பண்பாடு, கலாச்சாரம், எண்ணங்கள், கொள்கைகள் போன்ற இன்னோரன்ன விடயங்களும் பொருந்தும் போதே காதல் வாழ்வு மண வாழ்வாகி இல்லற வாழ்வு சிறக்கும்.

உங்கள் கடிதத்தில் ‘அவர் தப்புப் பண்ணும் போது என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை’ என்று எழுதியுள்ளீர்கள். தப்பு என்று நீங்கள் குறிப்பிடுவது உடலுறவையா? என்பது எனக்குப் புரியவில்லை. அப்படி நடந்திருந்தால் கூட பரவாயில்லை. உடலில் ஏற்பட்ட அழுக்கைக் கழுவுவது போல உங்கள் காதலருடனான பழக்கத்தை அழுக்காக நினைத்துக் கழுவி விடுங்கள்.

சரியான காலம் வரும். அப்போது சரியான காதலன் வருவான். அது கணவனாகவும் இருக்கலாம். திருமணத்தின் பின் கணவனை நன்றாகக் காதலியுங்கள். ஆனால் கணவனை மிகவும் ஆறுதலாக, கவனமாகத் தெரிவு செய்யுங்கள். வாழ்வு மகிழ்வாய் அமையும். உலகில் உள்ள தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கெல்லாம் திறம்படத் தீர்வு தரும் ஒருவன் இருக்கின்றான். அவன்தான் ‘காலம்’. காலத்தின் கைகளில் உங்களின் பிரச்சினையை ஒப்படையுங்கள். சரியான நேரத்தில் சரியான காதலனை அவன் தருவான். நீங்கள் தான் விழிப்பாய் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.


சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் உங்கள் மனதை அரித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் உள்ளதா? உடனே எமக்கு எழுதி அனுப்புங்கள். மனநல நிபுணர்கள் உங்கள் பிரச்சனைகளிற்கான தீர்வை தர தயாராக இருக்கிறார்கள்.

pagetamilmedia@gmail.com 
அல்லது
0766722218

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here