விக்னேஸ்வரனின் தாமதங்கள்… மாற்று அணிக்குள் வலுக்கும் அவநம்பிக்கை!

வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி முயற்சி தொடர்ந்து பிசுபிசுத்து வருகிறது. தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை அறிவித்து, அதே பெயரிலேயே கூட்டணியையும் அமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி கணிசமான பின்னடைவை சந்தித்துள்ளது. விக்னேஸ்வரனுடன் நெருக்கமாக இருந்த அணிகளிற்குள்ளேயே சில மனக்கசப்பு, அவநம்பிக்கை தோன்றியுள்ளதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.

வடக்கு முதலமைச்சராக க.வி.விக்னேஸ்வரன் பதவி வகித்தபோது, தமிழரசுக்கட்சியின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வந்தார். அவர் குறிப்பிட்ட விடயங்களில் மக்களில் கணிசமானவர்களிற்கும் விமர்சனம் இருந்ததால், அவரை கணிசமானவர்கள் ஆதரித்தனர். அவர் தலைமையில் மாற்று அணியொன்று உருவாக வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது.

மிகப்பெரிய தாமதம் தயக்கத்தின் பின்னர் தமிழ் மக்கள் கூட்டணியென்ற கட்சியையும், கூட்டணியையும் விக்னேஸ்வரன் அறிவித்தார். எனினும், இதற்கு முன்னரே அவருடன் முரண்பட்டுக் கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி, கூட்டணிக்கு எட்டும் தூரத்தை விட வெளியில் சென்று விட்டது.

எனினும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமது கூட்டணிக்குள் திரும்பி வருமென விக்னேஸ்வரன் எதிர்பார்த்திருப்பதாக தெரிகிறது. தமிழ் மக்கள் கூட்டணிக்குள், தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைந்தால், நாடாளுமன்ற தேர்தலில் முன்னணியின் வேட்பாளர்கள் 4 பேர், கூட்டணியின் வேட்பாளர்கள் 5 பேர் களமிறங்குவதென விக்னேஸ்வரன் தீர்மானித்து, முன்னணிக்கும் கூறியிருந்தார். இதன்படி, இன்றுவரை தனது தரப்பிலிருந்து யாழில் 5 வேட்பாளர்களைத்தான் அவர் தயார் செய்து வைத்துள்ளார். முன்னணி திரும்பி வருமென்பதை அவர் எவ்வளவு தூரம் நம்புகிறார் என்பதற்கு இது சான்று. முன்னணிக்கு நிதியளிக்கும் வெளிநாட்டு சக்திகள் அழுத்தம் கொடுத்து, அவர்களை கூட்டணிக்குள் கொண்டு வருவார்கள் என விக்னேஸ்வரன் நம்புகிறார்.

இதேவேளை, தேர்தலிற்கான நாள் தள்ளிச் சென்று கொண்டிருக்க, விக்னேஸ்வரன் அணியின் பலவீனங்கள் துருத்திக் கொண்டு தெரிய ஆரம்பிப்பது, அவர்களுடன் கூட்டணி வைக்க தயாராக இருந்த அணிகளிற்கும் தயக்கத்தை அதிகரித்து வருகிறது.

ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய பசுமை இயக்கம், மற்றும் சில பொது அமைப்புக்கள் விக்னேஸ்வரன் அணியுடன் கூட்டு வைத்திருக்கிறார்கள். இதில் பொதுஅமைப்புக்கள் செல்வாக்கு செலுத்தும் அமைப்புக்கள் கிடையாது. ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் தமிழ் தேசிய பசுமை இயக்கம், விக்னேஸ்வரனின் நகர்வுகளில் முழு திருப்தியுடன் இருப்பதாக தெரியவில்லை.

இன்னும் கூட்டணியாக உருவாக்க முடியாமல் விக்னேஸ்வரன் திண்டாடிக் கொண்டிருப்பது அவரது அணியினரை அவநம்பிக்கை கொள்ள வைக்கிறது. விக்னெஸ்வரனுடன் நெருக்கமாக உள்ள கட்சிகள் அண்மையில் அவரை தனிமையில் சந்தித்து பேசி, உடனடியாக கூட்டணி உருவாக்கத்தை வலியுறுத்தியிருந்தனர். இதையடுத்து, தனது கட்சியின் மத்தியகுழுவை கூடி இது தொடர்பாக விக்னேஸ்வரன் ஆராய்ந்தார். இதன்போது, கட்சியின் ஊடகச்செயலாளர் அருந்தவபாலன், உடனடியாக கூட்டணி அமைக்க அவசியமில்லையென வலியுறுத்தியதாக, அந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார். “ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற மற்றைய கட்சிகளிற்கு வடக்கு கிழக்கில் வலையமைப்பு உள்ளது, நமக்கு அப்படியல்ல. இந்த நிலையில் கூட்டணியமைத்து செயற்பட்டால், மற்ற கட்சிகளின் கை ஓங்கும் வாய்ப்புள்ளது. அதனால் முதலில் நாம் மாவட்டக்கிளைகளை திறந்து, கட்சியை பலப்படுத்துவோம்“ என ஆலோசனை சொன்னார் என அந்த மூலங்கள் குறிப்பிட்டன.

இதன்படி வவுனியா மற்றும் மன்னாரில் மாவட்டக்கிளைகள் திறக்கப்படவுள்ளன.

கூட்டணி அமைப்பதில் இழுபறி, தனித்தனியே கட்சிகளை வளர்ப்பதில் இரகசிய அக்கறையென்பதால், மாற்று அணியொன்றை உருவாக்கப் போவதாக குறிப்பிட்டு ஒன்று சேர்ந்த தரப்பிற்குள் அவநம்பிக்கை வலுத்து வருவதை அவதானிக்க முடிகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here