பழிவாங்கல்… பக்கச்சார்பு… வால்பிடி: என்ன நடக்கிறது வடக்கு கல்வியமைச்சில்?- எக்ஸ்ரே ரிப்போர்ட்!

யாழ் தீவக வலய கல்விப் பணிப்பாளருக்கு எதிராக தனிப்பட்ட பழிவாங்கல் நோக்கத்துடனேயே குற்றச்சாட்டுக்களை முன்வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் மற்றும் சில அதிகாரிகளின் நடவடிக்கை தொடர்பாக, இரண்டு விதமாக சிந்திக்க வேண்டிய பின்னணி சம்பவங்கள் இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீவல வலய பணிப்பாளருக்கு எதிராக 10 ஆசிரிய ஆலோசகர்கள் போர்க்கொடி தூக்கியிருந்தனர். தம்மை வலயக்கல்வி பணிமனையில் கையெழுத்திட பணிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சுமத்தினர்.

இதையடுத்து, அவர்கள் சிறுகுழுவாக வடக்கு ஆளுனரிடம் சென்றார்கள். ஆளுனர் சந்திக்காத பட்சத்தில் ஆளுனரின் செயலாளர், வடக்கு கல்வியமைச்சின் செயலாளர், மாகாண கல்விப்பணிப்பாளர் ஆகியோரை சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து, அவர்கள் ஒரு விசாரணைக்குழுவை நியமித்தனர்.

ஏன் சர்ச்சை தொடங்கியது?

தீவக வலயத்தில் கடமையாற்றும் சில ஆசிரிய ஆலோசகர்கள் அதிகாரிகள் தமது கடமையில் அசன்டையீனமாக இருக்கிறார்கள், பாடசாலைகளிற்கு கண்காணிப்பு பயணம் மேற்கொள்வதாக குறிப்பிட்டாலும் அவர்கள் இடைப்பட்ட நேரத்தில் சொந்த அலுவல்களிலும் ஈடுபடுகிறார்கள் என்ற முறைப்பாடு தீவக வலய கல்விப்பணிப்பாளரிற்கு சென்றிருக்கிறது.

இதையடுத்தே குறிப்பிட்ட 10 அதிகாரிகளையும், வலய கல்வி பணிமனையில் கையெழுத்திடுமாறு உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே, அதிகாரிகள் முறையிட்டனர். இந்த நிர்வாகரீதியான பிரச்சனையை ஆராயவே, அவசர கதியில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. ஆனால் விசாரணைக்குழு அமைக்க வேண்டிய பிரச்சனைகள் எதிலும் வடக்கு அதிகாரிகள் விசாரணைக்குழு அமைக்கவில்லை.

வடக்கில் நடந்த- அதிகாரிகள் அதை கண்டும் காணாமலும் விட்ட- சில சம்பவங்களை பட்டியலிடுகிறோம். 2017இல் சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி அதிபருக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. பாடசாலையின் ஆசிரியர்கள் 16 பேர் கையொப்பமிட்டு, அது தொடர்பான முறைப்பாட்டை மாகாண கல்விப்பணிப்பாளர், செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். ஆனால், அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை- முறையிட்ட ஆசிரியர்களிற்கு இடமாற்றம் வழங்கியது. எனினும் ஆசிரியர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்ட பின்னரே, அவர்களிற்கு நீதி கிடைத்தது.

துணுக்காய் கல்வி வலய பணிப்பாளர் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மாகாண அதிகாரிகளிடம் முன்வைக்கப்பட்டபோதும், அதிகாரிகள் மௌனமாக இருந்து விட்டனர். பின்னர், உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம் செய்து, வடக்கு கல்வியமைச்சரின் அலுவலகத்தின் முன்பாக போராடிய பின்னர்தான் மாகாண அதிகாரிகள் விருப்பமின்றி தலையிட்டனர்.

இதுதவிர, தற்போது தீவக கல்வி வலய பணிப்பாளருக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புக்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். எல்லா அறிக்கைகளிலும், இது பழிவாங்கும் செயல் என ஒரு சொல் குறிப்பிட்டிருந்தது.

அதென்ன பழிவாங்கும் செயல்?

தீவலக கல்வி வலய பணிப்பாளருக்கு எதிரான நடவடிக்கைகளில் மூன்று முக்கிய தரப்புக்கள் முனைப்பாக உள்ளன. தமிழர் ஆசிரியர் சங்கம், மாகாண கல்விப்பணிப்பாளர் தரப்பு, மாகாண கல்வியமைச்சின் செயலாளர் தரப்பு என்பனவே அந்த மூன்று அமைப்புக்கள்.

தற்போதைய தீவக கல்வி வலய பணிப்பாளருக்கும், இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்திற்கும் ஒரு முரண்பாடு உள்ளது. அந்த சங்கத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர், பாடசாலைக்கு செல்லும் போதே வெற்றிலை போட்டுக்கொண்டுதான் செல்வார். அண்மையில் மண்டைதீவில் பாடசாலையொன்றில் போதைப்பாக்கு மீட்கப்பட்டதாக வெளியான செய்தியை தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் அந்த “வெற்றிலை போடும் வாத்தியார்“ தீவகத்திற்கு வெளியில் இடமாற்றப்பட்டார். (யாழ் கல்வி வலயத்தில் தற்போது இணைக்கப்பட்ட பாடசாலையிலிருந்தும், வெற்றிலை போடும் வாத்தியார் தொடர்பான முறைப்பாடு வலயக்கல்வி அலுவலகத்திற்கு சென்றுள்ளது) அப்போது தமிழர் ஆசிரியர் சங்க செயலாளர், தீவக கல்வி வலய பணிப்பாளருடன் தொலைபேசியில் முரண்பட்டார். “எமது சங்க ஆள் ஒருவரை எப்படி இடமாற்றலாம்?“ என்பது தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரச்சனை.

சில வருடங்களின் முன்னர் சம்பள உயர்வு தொடர்பான ஒரு சர்ச்சையில், தற்போதைய தீவக கல்வி வலய பணிப்பாளர் மனித உரிமைகள் ஆணைக்குழு வரை சென்றிருந்தார். அதில் எதிர்தரப்பு- மாகாண கல்விப்பணிப்பாளர். அந்த விவகாரத்தில் தனது தனிப்பட்ட கோவையை பார்வையிட வேண்டுமென தீவக கல்வி வலய பணிப்பாளர் கோர, மாகாணப்பணிப்பாளர் அதை மறுத்தார். இறுதியில் தகவல் ஆணைக்குழு வரை அது சென்று, அவரது கோவையை பார்வையிட அனுமதிக்க வேண்டுமென மாகாணப் பணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டது. இறுதியில், இரண்டு பக்கங்களை கிழித்து விட்டே, தீவலக வலய பணிப்பாளருக்கு அவரது கோவை பார்வைக்கு வழங்கப்பட்டது.

இதேபோல இன்னொரு சம்பவமும் உள்ளது. யாழ் கல்வி வலயத்தில் பணிப்பாளர் வெற்றிடம் பல காலமாக நிரப்பப்படாமல் இருந்தது. இறுதியில் ஆளுனராக ரெஜினொல்ட் குரே பதவி வகிதத சமயத்தில் அதை நிரப்ப முடிவெடுக்கப்பட்டு, வடக்கு கல்வி அமைச்சு விண்ணப்பங்களை கோரியது. இதன்போது, தற்போதைய தீவக, கிளிநொச்சி கல்வி வலய பணிப்பாளர்கள் விண்ணப்பித்தனர். எனினும், ஒரே கல்வி வலயத்தில் மூன்று வருடங்களின் மேல் பணியாற்றியவர்கள்தான் விண்ணப்பிக்கலாமென ஒரு விசித்திர நிபந்தனையையும் நமது வடக்கு கல்வியமைச்சின் அதிகாரிகள் விதித்தனர்.

நமது அதிகாரிகள் விதித்த தகுதி, கிளிநொச்சி மற்றும் தீவக கல்வி வலய பணிப்பாளர்களிடம் இருக்கவில்லை. இது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அரச நடைமுறையும் அல்ல. இதையடுத்து, தீவல வலய கல்விப்பணிப்பாளர், நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றத்தில், அச்த விசித்திர நிபந்தனையை விலக்கிக் கொள்வதாக வடக்கு கல்வி அமைச்சின் செயலாளர் சம்மதித்தார்.

அதாவது, தீவக கல்வி வலய பணிப்பாளர் இப்பொழுது வடக்கு கல்வியமைச்சின் செயலாளர், வடக்கு கல்விப்பணிப்பாளர், இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் என்பவற்றுடன் முட்டிமோதி விட்டார்.

போதாதற்கு இன்னொரு சம்பவமும் நடந்தது. தீவல வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றின் அதிபர் தொடர்பாக, மிக அண்மையில் நீண்ட குற்றச்சாட்டு பத்திரத்தை தயாரித்து, 25 ஆசிரியர்கள் கையொப்பமிட்டு, வடக்கு ஆளுனர் சுரேன் ராகவனிற்கு அனுப்பினார்கள். அது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தீவல வலய கல்விப்பாளர், 10 அதிகாரிகளை வலயக்கல்வி பணிமனையில் கையெழுத்திட சொன்னார் என்ற குற்றச்சாட்டிற்கு உடனடியாக விசாரணைக்குழு அமைத்த நமது மாகாண அதிகாரிகள், ஏன் இந்த பாடசாலை அதிபர் விடயத்தில் மௌனமாக இருக்கிறார்கள்?

இன்னொரு சம்பவமும் சொல்கிறோம்.

இதேபாடசாலையின் பழைய மாணவர் சங்க கிளை வெளிநாட்டிலிருந்து அனுப்பிய பணத்தில் தில்லுமுல்லுகள் நடந்ததென்ற குற்றச்சாட்டுடன், இன்னும் சில குற்றச்சாட்டுக்களும் எழுந்தன. தீவக கல்வி வலய பணிப்பாளருக்கும் குற்றச்சாட்டு சென்றது. பாடசாலைக்கு நேரில் சென்று ஆராயும்படி, இரண்டு உதவி பணிப்பாளர்களை அவர் அனுப்பி வைத்தார்.

அந்த சமயத்தில் தவணை பரீட்சைகள் நடந்து கொண்டிருந்தது. அந்த இரண்டு அதிகாரிகளின் முன்னிலையிலேயே, மாகாண பணிப்பாளரை தொலைபேசியில் அழைத்த பாடசாலை அதிபர், பரீட்சை நேரத்தில் விளக்கம் கோரி வந்துள்ளனர் என தெரிவித்துள்ளார். அவர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறும்படி மாகாண பணிப்பாளர் உத்தரவிட்டார். பின்னர், இரண்டு அதிகாரிகளையும் நேரில் அழைத்த மாகாண பணிப்பாளர், கடும் “டோஸ்“ கொடுத்தார்.

இதில் கவனிக்க வேண்டியது இரண்டு விடயங்களை.

1. அந்த பாடசாலை அதிபர், தொலைபேசியில் அழைத்தது மாகாண பணிப்பாளரை. முறைப்படி அவர் வலயக்கல்வி பணிப்பாளரையே அழைத்திருக்க வேண்டும். அவரிடமே முறையிட்டிருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல், அவர் மாகாண பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு, வலய செயற்பாட்டை முடக்குகிறார் என்றபோதே, அங்கு ஏதோ “கோளாறு“ இருப்பதை புரிய வைக்கிறது.

2. அன்று அதிகாரிகள் இருவர் பாடசாலையை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டதற்கு காரணம், “பரீட்சை நடந்து கொண்டிருக்கும்போது குழப்பும் விதமாக செயற்படாதீர்கள்“ என்பதுதான். ஆனால், இன்றும், பரீட்சை நடந்து கொண்டிருந்தபோதுதான் இவ்வளவு சம்பவமும் நடந்தது.

இன்னொரு கொசுறு தகவல். நாம் குறிப்பிட்ட அந்த பாடசாலை அதிபரின் நெருங்கிய உறவினர் ஒருவர்தான், வடக்கு ஆளுனர் செயலக உயரதிகாரியொருவர்.

இந்த விவகாரத்தில் இப்போது வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நிற்கும் தமிழர் ஆசிரியர் சங்கம் தொடர்பான நிறைய கரும்புள்ளிகளும் உள்ளன. தொழிற்சங்கமொன்று வருடாந்தம் கூட்ட அறிக்கை, கணக்கறிக்கை தொழில் திணைக்களத்தில் சமர்ப்பித்து, தொழிற்சங்க பதிவை உறுதி செய்ய வேண்டும். எனினும் 2006இன் பின்னர் அந்த பதிவொன்றையும் தமிழர் ஆசிரியர் சங்கம் செய்யவில்லை. தொழில் திணைக்களத்தில் 5001 என்ற பதிவிலக்கத்தை கொண்ட இந்த சங்கம், 2006இன் பின் செயலிழந்ததாகவே கருதப்பட வேண்டியது. கிட்டத்தட்ட சட்டவிரோத அமைப்பு. பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் ஒன்று அல்லது இரண்டு பேரை சம்பளத்துடனான விடுப்பில் அனுமதிக்க சட்டத்தில் இடமுண்டு. ஆனால், 2006இன் பின் பதிவுகள் செய்யப்படாத அமைப்பாக தமிழர் ஆசிரியர் சங்கம் இருந்த நிலையில், 2011இல் இருந்து சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா புவனேஸ்வரன் சம்பளத்துடன் கூடிய விடுப்பில் விடுவிக்கப்பட்டார். சட்டத்தில் இதற்கு எந்த ஏற்பாடும் கிடையாது. வடக்கு கல்வியமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோரே இதற்கு பதில் கூற வேண்டிய பொறுப்பாளிகள்.இந்த சர்ச்சைகள் தோன்றியதையடுத்து, 2018இலேயே மீளவும் தொழிற்சங்க பதிவை தமிழர் ஆசிரியர் சங்கம் மேற்கொண்டது.

தீவக வலய கல்விப் பணிப்பாளர் மீதான திடீர் நடவடிக்கைக்கு மேலுள்ள விடயங்களின் பின்னணியை பொருத்திப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அது மனித இயல்பு. அப்படி பொருத்திப் பார்த்தது சரியா, தவறா என்பதை, இந்த விவகாரத்தில் அதிகாரிகளின் அடுத்த நடவடிக்கையும், முடிவும்தான் எப்படியும் வெளிப்படுத்தி விடும். இந்த விவகாரத்தில் இன்னும் சில தகவல்கள் உள்ளன. அவற்றை பின்னர் பார்க்கலாம்.

இறுதியாக, இது தீவக வலய கல்விப்பணிப்பாளரை காப்பாற்றுவதற்கான முயற்சியல்ல. அவர் மீது நிர்வாக ரீதியான முறைப்பாடுகள் உள்ளன. முக்கியமாக கீழுள்ள உத்தியோகத்தர்கள் மீது எப்பொழுதும் “எரிந்து விழுகிறார்“ என்பதை போன்ற குற்றச்சாட்டுக்கள். தன் மீதான சுயவிமர்சனம் அவருக்கும் அவசியம். ஆனால், அதைவிட மோசமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட பலர் மீது வடமாகாண கல்வியமைச்சு நடவடிக்கையெடுக்காமல் காப்பாற்றியது என்பதும் உண்மைதான். நமது கல்வியமைச்சு அதிகாரிகளின் முறையற்ற நடவடிக்கையால் அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள் என்பதற்காக, இனிவரும் காலங்களில் வரும் குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்படக்கூடாது என்பதல்ல. ஏற்கனவே பாரதூரமான குற்றச்சாட்டு உள்ளவர்கள் இன்னும் கடமையில் உள்ளனர். அவர்கள் உட்பட அனைத்து குற்றச்சாட்டுள்ளவர்கள் தொடர்பாகவும் முறையாக விசாரிக்கப்பட வேண்டும். முக்கியமாக- அந்த குற்றச்சாட்டுள்ளவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல், அவர்களை பாதுகாக்க முயன்ற அதிகாரிகள் தொடர்பாகவும் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏனெனில், வடக்கு கல்வித்தரம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது.

அதை உறுதிசெய்ய வேண்டியது ஆளுனரின் பொறுப்பு!

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here