கடற்புலிகளிற்கு பொறிவைத்த விமானங்கள்… தனக்குதானே சுட்ட பாப்பா: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 12

யுத்தத்தில் புலிகளின் தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்று கடற்புலிகளின் முடக்கம். நவீன போரியல்முறைக்கு தக்கதாக கடற்புலிகள் மாற்றமடையாததால் நான்காம் ஈழப்போரில் கடற்புலிகளால் ஒரு வெற்றிகரமான தாக்குதலை கூட செய்ய முடியாமல் முடங்க வேண்டியதாகி விட்டது.

நான்காம் ஈழப்போர் என்பது வன்னியில் நடத்தப்பட்ட ஒரு சர்வதேச யுத்தம். புலிகளை அழிப்பதென சில நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட நீண்டநாள் இணக்கத்தின் வெளிப்பாடு. சமாதான பேச்சுக்கள் நடந்து கொண்டிருந்தபோது பாதுகாப்பு தரப்பை தொழில்நேர்த்தி மிக்கவர்களாக மாற்றும் பணி பல சர்வதேச நாடுகளால் மேற்கொள்ளப்பட்டது. ஆயுத தளபாட விநியோகம் மட்டுமல்ல, இராணுவ நுணுக்கங்கள் பலவும் பிறநாட்டு இராணுவங்களினால் போதியளவில் புகட்டப்பட்டது.

விடுதலைப்புலிகளின் உயிர்வாழ்விற்கு பிரதான காரணம் கடல்வழி விநியோகம் என்பதை இலங்கையும், பிறநாடுகளும் சரியாக கணக்கு பண்ணியிருந்தன. இந்த விடயம் ஒன்றும் சிதம்பர இரகசியம் கிடையாது. இலங்கைக்கும் நீண்டகாலமாக தெரியும்.

யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பின்னர் புலிகளை வன்னிக்குள் வளைத்து அழித்து விடலாமென்றுதான் நினைத்தார்கள். ஆனால் புலிகள் முல்லைத்தீவு இராணுவ முகாமை அழைத்து, முல்லைக்கடலால் ஒரு சர்வதேச வாசலை திறந்தார்கள். அதுபோல பூநகரி, மன்னார் கடற்பரப்பினால் தமிழகத்துடன் பிணைப்பை பேணினார்கள். ராஜீவ்காந்தி கொலையின் பின்னர் தமிழகத்திலிருந்து பெருமெடுப்பிலான விநியோகம் நடக்கவில்லை. ஆனால் மருந்து, எரிபொருள், தொழில்நுட்ப சாதனங்கள் முதலான சிறுசிறு வரத்துக்கள் தமிழகத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. முக்கியமாக மருத்துவத்திற்கான விநியோகம் பெரும்பாலும் தமிழகத்தையே நம்பியிருந்தது.

3ம் ஈழப்போர் காலத்திலேயே பூநகரி ஏ 35 சாலையை கைப்பற்றி தமிழக தொடர்பை அறுக்க இராணுவம் முயன்றது. ரணகோஷ என்ற பெயரில் இதற்காக ஆரம்பிக்கப்பட்ட படைநடவடிக்கை வெற்றியளிக்கவில்லை.

Image result for டோரா படகு
டோரா படகு

முல்லைத்தீவை கைப்பற்றிய பின்னர் சர்வதேச கடற்பரப்பிற்குள்ளால் புலிகள் பெருமளவு ஆயுதங்களை கொண்டு வந்து சேர்த்து விட்டனர். புலிகளை முடக்குவதெனில் கடல்வழி விநியோகத்தை தடுத்து, கடற்புலிகளை செயலிழக்க செய்ய வேண்டுமென்பதை பாதுகாப்பு தரப்பு உணர்ந்து, சமாதானபேச்சு காலத்திலேயே இதற்கான நடவடிக்கைகளில் இறங்கிவிட்டது. புலிகளின் ஆயுதக்கப்பல்களின் நடமாட்டங்களை அமெரிக்கா, இந்தியா போன்ற வல்லரசுகளின் தகவல் உதவியுடன் நடக்கடலிலேயே புலிகளின் ஆயுதக்கப்பல்கள் அழிக்கப்பட்டன. சமாதானகாலத்தில் புலிகளின் ஆயுதக்கப்பல்கள் சுமார் 12 வரையில் நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை சர்வதேச கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்டன. கரையிலிருந்து வெகுதொலைவிற்கு சென்று எதிரிகளின் கடற்கலங்களை மூழ்கடிக்கும் ஆற்றலை அதுவரை இலங்கை கடற்படை பெற்றிருக்கவில்லை. அதனால்த்தான் சர்வதேச கடலில் புலிகளின் கப்பல் மூழ்கடிப்பில் இந்திய பங்களிப்பு இருக்கலாமென்ற அபிப்பிராயம் பரவலாக எழுந்தது.

விடுதலைப்புலிகள் விட்ட மிகப்பெரிய தவறு- எதிர்தரப்பை குறைவாக எடைபோட்டது. வாகனங்கள், படையணி கட்டுமானங்கள், நிர்வாக அலகுகள், சர்வதேச தொடர்புகள் அதிகரிக்க, அதனை பெரு வளர்ச்சியாக கற்பனை செய்யும் போக்கு இயக்கத்திற்குள் பெருகியது. முக்கியமாக கடற்புலிகள் அப்படியான மாயைக்குள் சிக்கியிருந்தனர்.

கடற்புலிகள் சமாதானகாலத்தில் சில பல தொழில்நுட்ப உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து பெற்றிருந்தனர். தாமே சிலவற்றை உருவாக்கியுமிருந்தனர். ஆனால் கடற்புலிகளின் போரிடும் ஆற்றலில் மேம்பாடு எட்டப்படவில்லை. கடற்புலிகளின் போருத்தியில் மேம்பாடு எட்டப்படவில்லை. இதை சற்று விளக்க வேண்டும்.

மூன்றாம் ஈழப்போரில் கடற்புலிகள் கணிசமாக வெற்றியை பெற உதவியது- கடற்புலிகளின் போரியல் முறைமை. கடற்படையின் கட்டளை கப்பல் ஒன்று பின்னணியில் நிற்க டோரா அதிவேக பீரங்கி படகுகளுடன் கடற்படையினர் முன்னணிக்கு வருவார்கள். அதில் 20 mm, 12.7 mm கனோன்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

கடற்புலிகளின் சிறியரக படகுகளில் அதிவேக இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும். இவற்றில் பெரும்பாலும் 12.7 mm கனோன்கள் இருக்கும். ஆர்.பி.ஜியும் சில படகுகளில் இருக்கும். இப்படியான அதிவேக சண்டை படகுகள் சிலவற்றுடன் சற்றே பெரிய படகொன்றும் களத்திலிருக்கும். அதில் 20 mm மாதிரியான ஆயுதங்கள் இருக்கும்.

Image result for கடற்புலிகள்
கரும்புலி படகுகள்

கடற்புலிகளின் படகுகள் உருவில் சிறியவை. அலையில் தாவிச்செல்லும். அவற்றை இலகுவாக குறிவைப்பது சிரமம். மறுவளமாக, போக்கு காட்டும் கடற்புலிகளின் சிறிய படகுகள் கடற்படை படகுகளை இலகுவாக குறிவைக்கலாம்.

2002 ரணில்- பிரபா உடன்படிக்கை காலத்தில் இலங்கை பாதுகாப்பு படைகளின் அத்தனை கட்டமைப்பை போலவும் கடற்படையிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன. அதுவரை பிரதான தாக்குதல் படகுகளாக இருந்த டோராக்களை தவிர்த்து அளவில் சிறிய தாக்குதல் படகுகள் உருவாகின. இவற்றில் பெரும்பாலானவை உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவை. அவற்றில் அதிக சூட்டுவலு ஏற்படுத்தப்பட்டன.

அடுத்தது, கடல் வேவு விமானம் பயன்பாட்டிற்கு வந்தது. சுமார் 36 மணித்தியாலங்கள் இடைவிடாமல் பறத்தலை மேற்கொள்ளும் ஆற்றல் மிக்க விமானம் விமானப்படையிடம் இருந்தது.

புலிகளின் வீழ்ச்சிக்கு பிரதான காரணங்களில் ஒன்று இந்த வேவு விமானங்கள். வேவு விமானங்களை களமிறக்கியது மட்டுமல்ல, வேவு விமானங்கள் மூலம் இனம்காணும் இலக்குகளை வானிலிருந்தும் தரையிலிருந்தும் ஒருங்கிணைத்து தாக்கும் வல்லமையை இலங்கை பெற்றது. வேவு விமானங்கள் அடையாளம் காணும் இலக்கை வானிலிருந்தும், தரையில் தொலைவிலிருந்து எறிகணை மூலமும் தாக்கும் வல்லமையினால் புலிகள் பேரிழப்பை சந்தித்தார்கள்.

தமிழ்பக்கத்தில் வெளியாகும் இப்படியான விசேட தொடர்களை, எதிர்வரும் நாட்களில் தமிழ்பக்கத்தின் உத்தியோகபூர்வ பக்கத்தில் மட்டுமே பிரசுரிக்க எண்ணியுள்ளோம். அதனால், தமிழ்பக்கத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் வாசகர்கள். இதனால் இன்னொரு நன்மையும் உண்டு- அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். இந்த லிங்கை கிளிக் செய்து, லைக் செய்துகொள்ளலாம்.

கடலில் புலிகளின் படகுகளை வேவு விமானங்கள் அடையாளம் காண, தாக்குதல் விமானங்கள் தாக்கியழிக்க ஆரம்பித்தன. கடற்புலிகளின் படகுகளிற்கு எதிராக நின்று போரிடும் கடற்படையின் படகுகளினால் ஏற்படும் ஆபத்தைவிட பல மடங்கு ஆபத்தை இவை கொடுத்தன. மிக், கிபிர், எம்.ஐ 24, 35 ஹெலிகொப்ரர்கள் மூலம் கடற்புலிகளின் படகுகளை கடலிலேயே நிர்மூலம் செய்யப்பட்டன.

ஒரு கட்டத்தில் கடற்புலிகளால் கடலில் படகை இறக்கவே முடியவில்லை. கடற்புலிகளுடன் பூனை, எலி விளையாட்டில் கடற்படை இறங்கியது. கடற்புலிகளை தூண்டி கடலில் இறங்க வைத்து அவர்களின் படகுகளை அழிக்கும் உத்தியையும் கையாண்டார்கள். இதனை புரிந்த கடற்புலிகள் கடலில் இறங்குவதையே தவிர்த்தார்கள். யுத்தகாலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி கரையோரத்தை அண்மித்த கடற்படை என்ற செய்தியை அடிக்கடி கேள்விப்பட்ட நினைவு உங்களிற்கு இருக்கலாம். இதற்கு உதாரணம், யுத்தம் மன்னாரில் உச்சமடைந்திருந்த சமயத்தில் நாச்சிக்குடா கடற்கரையோரம் வரை இலங்கை கடற்படை படகுகள் நெருங்கி வந்து, புலிகளிற்கு வலைவீசியது. நாச்சிக்குடாவில் கரையை தொடும் தூரத்திற்கு கடற்படை படகுகள் வந்தன. ஆனால் கடற்புலிகள் கடலில் இறங்கவில்லை. விமானப்படை விமானங்களை கட்டுநாயக்காவில் தயார் நிலையில் நிற்க, வைத்துவிட்டுத்தான் கடற்படை இந்த உத்தியை கையாண்டது. கடற்புலிகளின் படகுகள் கடலில் இறங்கியிருந்தால் உடனே விமானங்கள் வந்து தாக்குதல் நடத்தியிருக்கும். ஆனால், புலிகள் அதை ஊகித்து, கடலில் இறங்கவில்லை.

இப்படியான நிலைமையில், புலிகளால் ஒரு ஆயுதக்கப்பலை கூட கரைக்கு கொண்டு வர முடியவில்லை. மிகச்சிறிய கப்பல்கள்தான் சில சமயங்களில் கரையை எட்டின. அப்படியான ஒரு படகு 2008 இன் இறுதியில் சுண்டிக்குளம் தொடுவாயில் விமானப்படையால் தாக்கியழிக்கப்பட்டது.

இதேகாலப்பகுதியில் நடந்த இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட்டு விடுகிறோம்.

ஆட்சேர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் களமுனைக்கு செல்ல பயந்தவர்கள் என போராளிகளிற்குள் ஒரு அபிப்பிராயம் இருந்தது. அந்த அபிப்பிராயத்தை மெய்ப்பிப்பதைபோல ஒரு சம்பவம் நடந்தது. அது வவுனியா களமுனைக்குட்பட்ட பாலமோட்டை பகுதியில் நடந்தது.

டுமையாக ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட பாப்பா அந்த களமுனைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் களமுனையில் நிற்க பாப்பா தயாரில்லை. களமுனையிலிருந்து பின்னால் செல்ல பல உபாயங்களை கடைப்பிடித்தார். ஒன்றும் பலனளிக்கவில்லை. இறுதியில், அவர் தனது காலில் தானே துப்பாக்கியால் சுட்டார்.

(களமுனையில் நிற்பதற்கு பயந்தவர்கள் நீண்டகாலமாகவே இந்த உத்தியை கையாள்வது வழக்கம். தமது காலில் பாதிப்பில்லாமல் சூட்டை நடத்துவார்கள். இப்படி செய்பவர்களை அமைப்பிற்குள் மதிப்பதில்லை)

வடபோர்முனையில் சிறப்பாக செயற்பட்ட லோரன்ஸ்தான் அப்போது பாலமோட்டை பகுதியில் கட்டளை தளபதியாக செயற்பட்டார். களமுனையில் தமக்கு தாமே சூடு நடத்துபவர்களை லோரன்ஸ் கடுமையாக அணுகினார். அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பவதில்லை. காயத்திற்கு கட்டுப்போட்டு, குறிப்பிட்டளவான நேரம் களமுனையிலேயே வைத்திருப்பார். இப்படியான நடவடிக்கை மூலம் தமக்குதாமே சூட்டை நடத்துபவர்களை கட்டுப்படுத்தலாமென நினைத்தார்.

பாப்பா தனது காலில்தானே சுட்டதும், சாதாரண போராளிகளிற்கு என்ன நடவடிக்கையோ, அதையே கடைப்பிடித்தார். பாப்பாவின் கால் காயத்திற்கு முதலுதவி செய்துவிட்டு, அவரை களமுனையிலேயே வைத்திருந்தார் லோரன்ஸ். கிட்டத்தட்ட அரைநாளின் பின்னர்தான் பாப்பா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.

(தொடரும்)

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here