அவுஸ்திரேலியா, லண்டனிலிருந்து வரும் பணம்… முதலமைச்சரின் டைமிங் வசனம்: இன்றைய சந்திப்பின் சுவாரஸ்யங்கள்!

முதலமைச்சர் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களிற்கும்- பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டு நிதி பின்னணியில் இயங்கும் உள்ளூர் அமைப்பின் பிரதிநிதிகளிற்குமிடையில் இன்று நடந்த சந்திப்பில்  நடந்த முக்கியமான விசயங்களை பட்டியல்படுத்தியுள்ளோம்.

1. இந்த சந்திப்பிற்கு முன்னதாக முன்னாள் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் பஷீர் காக்கா, யோகன் பாதர், ரூபன் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்தனர்.

2.இதன்பின்னர் வடமாகாணசபையின் உறுப்பினர்களில்- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒழுங்கமைப்பு குழுவினருடன் முதலமைச்சர் கலந்துரையாடினார். இதன்போது, அவர்கள் முதலமைச்சரிடம் முன்வைத்த முக்கிய கோரிக்கை- பல்கலைகழக மாணவர்கள் வெளிநாட்டு நிதி பின்னணியில் இயங்குகிறார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்ககூடாது என.

3.பல்கலைகழக மாணவர்கள்தான் இன்று முதலமைச்சரை சந்திப்பதாக இருந்தது. எனினும், வேறு ஆட்களையும் அழைத்துக்கொண்டு அவர்கள் வந்திருந்தனர். காணாமல் போனவர்களிற்கான அமைப்பின் பிரதிநிதியென ஒரு பெண் (இந்த அமைப்பும் தலைமைசெயலக நிதி பின்னணியிலேயே உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது). மற்றும் இலங்கை போக்குவரத்துசபையில் பதிவே செய்யப்படாத தொழிற்சங்கம் ஒன்றின் பிரதிநிதியாக தன்னை கூறிக்கொள்ளும் ஒருவர் உள்ளிட்ட சிலர் வந்திருந்தனர்.

4. வடமாகணசபையின் ஒழுங்கமைப்பு குழுவையும் தன்னுடன் பேச்சில் கலந்துகொள்ளுமாறு முதலமைச்சர் கேட்டபோதும், முதலமைச்சர்- பல்கலைகழக மாணவர் சந்திப்பென குறிப்பிட்ட பின்னர் தாம் கலந்துகொள்வது சரியல்ல என அவர்கள் கூறியிருந்தனர். ஆனால் பல்கலைகழக மாணவர்கள் தம்முடன் அனாமதேய ஆட்களையெல்லாம் அழைத்து வந்தபின்னர், ஒழுங்கமைப்புகுழுவையும் பேச்சில் கலந்துகொள்ள முதலமைச்சர் அழைத்தார்.

5.ஆரம்பத்திலிருந்தே இந்த நிகழ்வை குழப்பும் விதமாக செயற்பட்ட மாணவர்கள், இன்றைய பேச்சிலும் அதேவிதமாகவே செயற்பட்டனர். வடமாகாணசபை இதை நடத்த முடியாது, இதை மக்கள் நிகழ்வாக நடத்த போகிறோம் என்ற சாரப்பட பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் அலப்பறையை பொறுக்க முடியாமல் ஒரு கட்டத்தில் முதலமைச்சர் சொன்னார்- “தம்பியவை… மக்கள் மக்கள் என்கிறீர்களோ. அது யார்? நீங்கள் நாங்கள் எல்லாம் மக்கள்தான். இப்பொழுது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளாக வடமாகாணசபையில் நாம் இருக்கிறோம்“ என. மாணவர்களிடம் அதற்கு பதில் இருக்கவில்லை.

6.காணாமல் போனவர்களிற்கான அமைப்பொன்றை நிறுவி போராட்டங்களை முன்னெடுத்த அனந்தியும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார். எனினும், அண்மையில் தலைமைசெயலகத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் காணாமல் போனவர்களிற்கான அமைப்பின் பிரதிநிதியாக தன்னை அறிமுகப்படுத்திய பெண்மணி- வடமாகாணசபை, தமிழ் தேசிய கூட்டமைப்பை உரத்த குரலில் திட்டி தீர்த்தார்.

7.கடற்றொழிலாளர் சங்கத்தை சேர்ந்தவர் என கூறிக்கொண்டு, சந்திப்பிற்கு வந்திருந்த பூநகரியை சேர்ந்த நபர் முதலமைச்சருடன் மரியாதை குறைவாகவும், மரியாதை குறைவாகவும் பேசினார்.

8.அந்த நபரின் பேச்சை தொடர்ந்து பல்கலைகழக மாணவர்களும் குரலை உயர்த்தி, வடமாகாணசபை நினைவேந்தலை செய்ய முடியாது, நாம் அனுமதிக்கமாட்டோம், நாம் மக்கள் கட்டமைப்பை உருவாக்கி நடத்தப்போகிறோம் என உரத்தகுரலில் பேச தொடங்கினார்கள். இதையெல்லாம் எந்த சலனமுமில்லாமல் முதலமைச்சர் கவனித்துக் கொண்டிருந்தார். அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தனக்கு பக்கத்தில் இருந்தவரிடம்- முதலமைச்சருடன் கதைப்பதற்கு ஒரு நாகரிகமுறையிருக்கிறது. அதை கடைப்பிடியுங்கள் என கூறினார். இதையடுத்து அந்த நபர், கண்ணசைவால் மற்றவர்களிற்கு சைகை கொடுக்க, மாணவர்கள் கொஞ்சம் அடங்கினார்கள்.

9.நினைவேந்தலை ஒழுங்கமைக்க தம்மை அனுமதிக்க வேண்டுமென மாணவர்கள் விடாப்பிடியாக நிற்க, அதற்கு முதலமைச்சர் மறுத்துவிட்டார். ஏற்கனவே வடமாகாணசபை குழுவொன்றை அமைத்திருந்ததை சுட்டிக்காட்டினார். மீண்டும் மீண்டும் “மக்களின் விருப்பப்படி இதை செய்ய போகிறோம்“ என மாணவர்கள்கூற, மக்களின் பிரதிநிதிகள்தான் நாம் என முதலமைச்சர் பதிலளித்தார்.

10.ஒழுங்கமைக்கும் பொறுப்பு கிடைக்காமல் போக, விளக்கு பந்தங்களை நாட்டி, அதில் விளக்கேற்றுபவர்களை ஒழுங்கமைக்கும் பொறுப்பை தருமாறு மாணவர்கள் கேட்டனர். அதை நாளை, முள்ளிவாய்க்காலில் நடக்கும் மாகாணசபையின் ஒழுங்கமைப்புகுழுவின் கூட்டத்தில் முடிவுசெய்யலாமென மாகாணசபை தரப்பில் கூறப்பட்டது. அதை மாணவர்களிற்கு விட்டு கொடுக்கலாமென மாகாணசபை தரப்பில் முடிவெடுத்துள்ளனர்.

11.நினைவேந்தலை மதியம் 12.30 மணிக்கு நடத்தலாமென மாணவர்கள் கூற, தற்போதைய காலநிலையை அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டினார். முதலமைச்சரும் அதை ஆமோதித்தார். அப்பொழுது கதையுடன் கதையாக ஒரு டைமிங் பஞ்ச் விட்டார். அதை அப்படியே தருகிறோம் “ஓமோம் 12.30 மணியென்றால்தால் அவுஸ்திரேலியாவில இருந்தும், லண்டனில இருந்தும் லைவ் (Live) இல் பார்க்கலாம்“ என. மாணவர்களிற்கு நிதியளிக்கும் வசந்தன் அவுஸ்திரேலியா, நளின் லண்டன் என்பதையே முதலமைச்சர் இப்படி குறிப்பிட்டார்.

12.தமிழ்தேசிய கூட்டமைப்பு இந்த நினைவேந்தலை ஒழுங்கமைக்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒழுங்கமைத்தால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்தகொள்ளாது என அரிய அரசியல் முத்தொன்றை ஒரு மாணவர் பிரதிநிதி உதிர்த்தார்.

13இன்றைய சந்திப்பில் மாணவர்களிடம் நிறைய குழப்பங்கள் தென்பட்டன. ஆரம்பத்தில் இருந்த நிலைப்பாட்டிற்கும், கலந்துரையாடல் முடிவின்போதும் நிறைய குழப்பமடைந்தவர்களாக காணப்பட்டனர். யாருடையதோ தூண்டுதலில் அவர்கள் இயங்குவது இன்றைய சந்திப்பின்போது வெளிப்பட்டதாக கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

14.மாகாணசபை இந்த நிகழ்வை நடத்தாமல் தடுத்து விட வேண்டுமென்ற எத்தனம் மாணவர்களிடம் வெளிப்பட்டது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here