பேய்களை நம்பலாமா?… யாழ்ப்பாணத்தில் எங்கெல்லாம் பேயோட்டலாம்?

-வன்னிமது-

பேய் இருக்கின்றதா?… கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை போல இந்தக் கேள்விக்கும் எத்தனை பட்டிமன்றம் வைத்தாலும் தமிழ் சமூகம் இன்னும் விடை கண்டுபிடிக்கவில்லை. இன்னும் எத்தனை காலாமானாலும் கண்டுபிடிக்குமென்பதற்கும் உத்தரவாதமில்லை.

நம்மில் பெரும்பாலானவர்கள் பேயை தீவிரமாக நம்புபவர்கள். சைக்கிளில் தனியாக வரும்போது பின்னால் இருந்தது, திடீரென முன்னால் தோன்றி மறைந்தது, தூரத்தில் நடந்து போனது, ‘அந்தா.. அதுலதான் குந்திக்கொண்டிருந்தது’… இப்படி ஏராளம் கதை சொன்னவர்கள்தானே நாம்.

சின்ன வயதில் தாத்தா, பாட்டிகள் சொன்ன முக்கிய கதையே பேய்க்கதைதான். ‘இப்பிடித்தான் தாத்தாவின்ர அப்பா, வல்லைவெளிக்குள்ளால வண்டியில அளம்பில் ஏத்தி வரேக்க திடீரென்டு பேய் முன்னால வந்து, வண்டில்ல ஏறி இருந்திட்டுது. அவர் துவரம் கம்பால ஓங்கி அடிச்சார். பேய்க்கு கோபம் வந்திட்டுது. அவர்ர முகத்தில ஓங்கி அடிச்சுது. அவ்வளவுதான். ஆள் மயங்கி விழுந்திட்டார். ஆனால் அந்த மாடு ரெண்டும் சோக்கானதுகள். அவரை பத்திரமாக வீடு கொண்டு வந்திட்டுதுகள்’.

இப்படியான கதையை கேட்டு அன்று இரவு முழுக்க பேந்தப்பேந்த விழித்தபடி இருந்திருப்போம்.

பேய், பிசாசு, மோகினி, இரத்த காட்டேறி, கொள்ளிவாய் பிசாசு என அதிலும் வெரைட்டி கண்டறிந்த சமூகம் நமது. அதனால்தான் இன்றும் தமிழ் சினிமாவில் காதலுக்கு நிகராக, பேயும் நன்றாக விற்கிறது. அண்மைக்காலமாக திரையுலகமும் பேய் பிடித்து நிற்கிறது. முனி, காஞ்சனா, அரண்மனை, டார்லிங் என பேய்ப்படங்களாகவே வந்து கொண்டிருக்கிறது.

எவ்வளவுதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும், பெரும்பாலானவர்களின் அடிமனதில் பேய் பயம் குடியிருக்கிறது. பெருநகர இளைஞர்களிடமே இப்படியென்றால், கிராமப்புறங்களை பற்றி சொல்லவே தேவையில்லை. பேய் கதைகள் மட்டுமல்ல பேயோட்டுபவர்கள், பேயோட்டும் ஆலயங்கள் எல்லாம் வெகு பிரபலம்.

சில இடங்களில் சிலரின் மேல் அவரின் உறவினரின் ஆவி வந்ததாகவும், நண்பர்களின் ஆவி வந்ததாகவும் சொல்லுவார்கள். இவ்வாறானவர்களின் செயற்பாடுகள் ஆக்ரோசமாக, சூழலில் இல்லாத மர்மநபர் ஒருவருடன் கதைப்பதை போலிருக்கும். இது மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் செயற்பாட்டை போலவும் இருக்கும். பேய்ப் பிடிப்பது போன்ற கதைகளை நவீன மருத்துவம் நம்புவதில்லை. ஒருவகை மனநோய் என்றுதான் வகைப்படுத்துகிறார்கள். இது மட்டுமல்ல பிசாசு, பில்லி, சூனியம் போன்ற அறிவியலுக்குப் புறம்பான எதையும் நம்புவதில்லை. ஆனால், மக்கள் மத்தியில் இந்த நம்பிக்கைகள் பல்லாண்டுக் காலமாகப் பரவலாக உள்ளன.

பொதுவாக பேய் பிடித்ததாக சொல்லப்படுபவர்களை மனநல மருத்துவர்களிடம் அழைத்துச் செல்ல மாட்டார்கள். அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப மத வழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். இதற்கென பிரபல்யமான இடங்கள் உள்ளன. வவுனியாவில் தோணிக்கல் அனுமார் கோவில், யாழ்ப்பாணம் இருபாலை முனீஸ்வரன் கோவில், வடமராட்சியில் மாயக்கை என இந்தப்பட்டியல் பெரியது. பேய் பிடித்தவர்களை அழைத்து வரும்போது பிரண்டை, தேசிக்காய், தேங்காய் என குறிப்பிட்ட சிலவற்றை கொண்டு செல்கின்றனர். அதன் பின்னர் பேயோட்டம் நடைபெறுகின்றது.

200 – 300 வருடங்களுக்கு மேற்பட்ட இருபாலை முனீஸ்வரன் ஆலயம் இந்த பேயோட்டத்திற்கு பிரசித்தி பெற்றது. இங்கு பலவிதத்தில் பேயோட்டப்டுகின்றது. ஒன்று சாதாரணமாக மத்திர உச்சாடனம் மற்றும் தேசிக்காய், நீத்துப்பூசணி இவற்றை கொண்டு பேய் ஒட்டுகின்றனர். இரண்டாவது இரவு வேளையில் சுற்றி நெருப்பு மூட்டி மந்திரங்கள் சொல்லி பேயோட்டுகிறார்கள். இதனை மயான பூஜை என்கின்றனர். இது மிகவும் பயங்கரமாகவும் இருக்கும். முக்கியமாக இரவில் மட்டுமே இது நடைபெறும்.

இதுபோல, வடமராட்சியின் மாயக்கை பகுதியிலும் போயோட்டுபவர்கள் இருக்கிறார்கள். அங்குள்ள ஆலயமொன்றின் பின்பகுதியில் பேய் பிடித்தவர்களை இரும்பு சங்கிலியால் கட்டிவைத்து சிகிச்சை வழங்குகிறார்கள்.

இப்படியான சிகிச்சைகளின் மூலம் பேய் பிடித்தவர்கள் குணமடைவதாக நம்புபவர்கள்தான் பெரும்பாலானவர்கள். பாதிக்கப்பட்டவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும்போது அவர்கள் பாதிப்பிலிருந்து விடுபடுவதாக சொல்லப்படுகிறது. இதைத்தான் குடிகொண்டுள்ள ஆவியின் விருப்பத்தை நிறைவேற்றும் போது, அந்த ஆவி உடலைவிட்டு வெளியேறி விடுவதாக நம்பப்படுகிறது.

பேய்ப் பிடிப்பது எனச் சொல்லப்படுவது ஒருவகையில் மனநோய்தான் என்கிறது நவீன மருத்துவம். இளகிய மனம் கொண்டவர்கள், கிராமியப் பின்னணி கொண்டவர்கள்தான் இந்த வகை நோய்க்கு அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். உதாரணமாக கிராமத்தில் துர்மரணச் சம்பவத்தால் இறந்து போனவர்கள் ஆவியாக அலைவதாக நம்பிக்கை உண்டு. ஆற்றில்;, கிணற்றில் விழுந்து மாண்டவர்கள் அங்கேயே ஆவியாக அலைவதாக நம்பிக்கை உண்டு. அந்தப் பக்கம் செல்லும் திருமணமாகாத கன்னிப் பெண்கள் மீது ஆவி புகுந்துவிடும் எனவும் சொல்வார்கள். இதனால் இளகிய மனம் படைத்த இளம் பெண்களின் மனநிலை பாதிப்புக்குள்ளாகி, அவர்களே தங்களுக்குள் ஆவி புகுந்துவிட்டதாக நம்பி மனநோய்க்கு ஆளாவார்கள். பெரும்பாலும் இளம் பெண்கள்தான் இந்தப் பாதிப்புக்கு உள்ளாவதாகச் சொல்லப்படுகிறது.

மனநோய் பலவிதமானவை. பல நிலைகளையுடையவை. சிலவகை மன சிதைவுகள் உடனடியாக தீர்க்கப்படக்கூடியவை. அப்படியான சில உள்ளுரிலுள்ளவர்களால் தீர்க்கப்படலாம். ஆனால் மனநோயின் தன்மையை எல்லோராலும் கண்டறிந்து விட முடியாது, முறையான வைத்திய பரிசோதனையால்தான் அது முடியும் என எச்சரிக்கிறார்கள் வைத்தியர்கள். ஆரம்பநிலையிலிருக்கும் சில மனநோயாளர்கள் வழிபாட்டு தலங்களிற்கு கொண்டு செல்லப்பட்டு கட்டிப்போடப்படுவதால் அதிகமாக மனச்சிதைவடைந்து மீளமுடியாத பாதிப்பிற்குள்ளாகிவிடக்கூடும் என்றும் எச்சரிக்கிறார்கள்.

சில நம்பிக்கைகளை நாம் பேணத்தான் வேண்டும். ஆனால், அது ஒருவருடைய வாழ்க்கையையே அழித்துவிடக்கூடாதல்லவா…மனநோயாளியென நவீன மருத்துவர்களாலும், பேய் பிடித்ததென கிராமிய பூசாரிகளாலும் வகைப்படுத்தப்படுபவர் எதையும் தீர்மானிக்க முடியாத நிலையில் இருப்பவர். இவரை சரியான சிகிச்சையளித்து குணமடைய வைக்க வேண்டியது சுற்றியுள்ளவர்களின் பொறுப்பு. அவர்களை முறையான சிகிச்சைக்கு வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதுதான் பொருத்தமானது.

 


விஞ்ஞானம் என்ன சொல்கிறது?

எஸ்.சிவதாஸ்
மனநல வைத்திய நிபுணர்
வவுனியா பொது வைத்தியசாலை

 

பிரங்ஞை மாற்றம் என்பது மனிதன் உடைய ஒரு சாதாரண அனுபவங்கள், நெருக்கடிகளுக்கு ஊடாக தன்னை தேற்றிக்கொள்கின்றான். இதன் ஊடாக மனிதனுக்கு ஏற்படுகின்ற தீவிரமான நெருக்கடிகளில் இருந்து தற்காலிகமேனும் விடுபடுவதற்கு அது உதவி செய்வதால். இது கால காலத்திற்கு மனிதனுடைய கலாச்சார சமூக விழுமிங்களிற்குள் ஒன்றாகி விட்டது. முக்கியமாக இதை சமய நிறுவனங்கள், சமயமற்ற பாரம்பரிய மருத்துவத்தில் இது உள்வாங்கப்பட்டு ஒரு சிகிச்சை முiறாகவும் வழங்கப்படுகின்றது. அதே நேரத்தில் இது தீவிர நிலைக்கு இட்டுச்செல்லும் போது ஒரு நோயியல் வழிபாடாகவும் கருதுவதற்கு உண்டு. தீவிர நிலை ஏற்படும் பேர்து மருத்துவ ரீதியான சிகிச்சை அளிக்க வேண்டிய கடப்பாடும் உள்ளது. இதை ஒற்றைப்பரிமானத்தில் விளங்கப்படுத்த முடியாது. இந்நிலை பல்பரிமாணத்தையுடையது. இவ்வாறான நிலையை கவனமாக நாம் விளங்கிக் கொள்ளாதவிடத்து அதனை துஸ்பிரயோகம் செய்க்கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளது.

 

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here