பழைய பாலியல் தொடர்பை மனைவியிடம் சொன்னது தவறா?: மனமே நலமா?

உங்கள் சந்தேகங்களை கேளுங்கள்

பதிலளிக்கிறார்
கு.நக்கீரன்
உளவள ஆலோசகர்

கோபி (27)
மாம்பழம் சந்தி, அரியாலை

நான் 26 வயதுடைய ஆண். சந்தைப்படுத்தல் பிரிவில் தொழில் புரிகின்றேன். இதனால் எனக்குப் பல பெண்களிடம் தவறான தொடர்பு இருந்தது. அண்மையில்தான் எனக்குத் திருமணமானது. இப்போது அந்தப் பெண்களுடனான எல்லாத் தொடர்புகளையும் விட்டுவிட்டேன். மனைவியிடம் மறைக்கக் கூடாது என்பதற்காக எல்லா உண்மையையும் சொல்லிவிட்டேன். மன்னிப்பும் கேட்டேன். ஆனால் இப்போது அவர் என்னோடு முகம் கொடுத்துப் பேசுவதில்லை. என்னைப் பிடிக்காதது போல் நடந்து கொள்கின்றார். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. எனக்கு ஒரு நல்ல பதில் சொல்லுங்கள்?

பதில்: என் அன்புச் சகோதரா! வடிவேலு பாணியில் சொன்னால் “நீர் ரொம்ப நல்லவராக இருக்கின்றீர்”. அதனால் தான் இந்த நிலைமை வந்தது. சமுதாய ஒழுக்கம், பண்பாடு என்பது எழுதாத ஒரு சட்டமே. ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நமது நாட்டின் எழுத்துருவான சட்டம். ஆனால் அது திருமணத்தின் பின்னரே நடைமுறைக்கு வரும். நீர் எழுத்துச் சட்டத்தைப் பின்பற்றி நடைமுறைப்படுத்துகின்றீர். ஆனால் எழுதாத சட்டத்தை மீறிவிட்டீரே. அதனால் தான் தண்டனையை அனுபவிக்க வேண்டிய நிலை.

உமக்கு ஒரு உளவியல் பாடம் சொல்லலாம் என்று நினைக்கின்றேன். ‘யோகாரி’எனும் ஒரு உளவியல் ஞானியின் தத்துவம் ஒன்று உள்ளது. சமூகவாழ்வில் எமது அறிவு, அனுபவம், மனப்பாங்கு போன்றவற்றின் அடிப்படையிலான ஒரு எண்ணக்கரு பற்றியது இது. இதன்படி ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் 4 துவாரங்கள் உள்ள ஜன்னல் ஒன்று உள்ளது.

முதலாவது துவாரம் என்னவெனில் சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்தவைகளைப் பற்றியது. அதாவது எனக்கும் தெரியும், ஏனையோருக்கும் தெரியும் பகுதி. எடுத்துக்காட்டாக சூரியன் கிழக்கில் உதிக்கும் என்பது.

இரண்டாவது துவாரம் எனக்குத் தெரியாது, ஏனையோருக்குத் தெரியும் எனும் பகுதி. இதில் கல்வியறிவு, ஞானம், திறமைகள் போன்ற பல விடயங்கள் உள்ளடங்கும்.

மூன்றாவது துவாரம் எனக்கும் தெரியாது. ஏனையோருக்கும் தெரியாது எனும் பகுதி. இதனுள்தான் சமயச் சடங்குகள், நம்பிக்கைகள், கடவுள் பற்றிய கருதுகோள்கள், ஆன்மீக விடயங்கள் என்பவை அடங்கும்.

நான்காவது துவாரம்தான் உமது பிரச்சினைக்கு உரிய துவாரம். அதாவது எனக்கு மட்டும் தெரியும், ஆனால் ஏனையோருக்குத் தெரியாது எனும் பகுதி. இந்த துவாரத்தில்தான் ஒவ்வொரு மனிதனதும் அனுபவங்கள் அடங்குகின்றன. குறிப்பாக பாலியல் நடத்தைகள் இந்த துவாரத்திற்கு உரியவை. எனக்கு மட்டுமே தெரிந்த, வேறு யாருக்கும் தெரியாதவைதான் பாலியல் நடத்தைகள்.

எமது சமுதாயத்தில் பலர் ஆண்டாண்டு காலமாகத் தமக்கே தெரிந்த இப் பகுதியை இறப்புவரை தம்மோடு கொண்டு செல்லுகின்றனர். அந்த அளவுக்கு உணர்ச்சிபூர்வமான விடயங்கள்தான் பாலியல் நடத்தைகள். எனவே உமக்கு மட்டுமே தெரிந்த இந்த விடயத்தை நீர் இன்னொருவருக்குக் கூறலாமா? அதுவும் மனைவியிடம் கூறலாமா? ஒருவேளை மனைவி மீதான அதீத ஆர்வக் கோளாறால் உளறிவிட்டீர் போலும். அதுவும் குடும்ப வாழ்க்கைப் பயணத்தின் ஆரம்பத்திலேயே கூறிவிட்டீரே! கொஞ்சகாலம் பயணித்தபின் கூறியிருந்தால் சேர்ந்து வந்த பயண அனுபவங்கள் சிலவேளை நிலைப்பாட்டை மாற்றியிருக்கலாம். என்றாலும் பரவாயில்லை. மனதைத் தளரவிட வேண்டாம். அன்பு வாகனத்தில் பண்பெனும் பாதையில் நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடருங்கள். நிச்சயமாக உங்கள் மனைவியும் ஒருநாள் அதில் சேர்ந்துகொள்வார்.

பிரதாபன் (20)
மண்டைதீவு

நான் ஒரு ஆண். வீட்டிற்கு ஒரே பிள்ளை என்பதால் செல்லமாக வளர்ந்துவிட்டேன். இப்போது மேற்படிப்புக்காக வீட்டைவிட்டு வந்து மாணவர் விடுதி ஒன்றில் தங்கியிருக்கின்றேன். ஆனால் என்னால் அங்கு தங்கியிருக்கும் சக மாணவர்களுடன் இயல்பாகப் பழக முடியவில்லை. தனிமையாகவே இருந்துவிட வேண்டும் என்று தோன்றுகின்றது. எனக்கு ஏன் இப்படி எல்லாம் தோன்றுகின்றது? எனக்கு ஏதாவது பிரச்சினை இருக்குமா?

பதில்: தம்பி இதில் புதினம் ஒன்றும் இல்லை. நீர் தனிப் பிள்ளையாக வளர்ந்தவர். உமக்கான சமூகவாக்கம் இன்னும் போதாமல் உள்ளது. நீர் விடுதியில் பல்வேறு விதமானசமூகச் சூழலில் வளர்க்கப்பட்டவர்களுடன் சேர்ந்து பழகவேண்டி இருக்கும். புதிதில் அது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். காலப்போக்கில் விடுதியிலேயே அதிக நட்புவட்டம் உள்ள மனிதனாகக் கூட நீர் மாறலாம்.

பேச்சுத் திருமணத்தின் பின் பிறந்தவீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு வந்துள்ள பெண்ணின் மனநிலையே இப்போது உம்மில் உள்ளது. ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். உமது இயல்புடன் ஒத்துப் போகக் கூடிய முதலாவது நபரைத் தேடும். எல்லாம் சரியாகிவிடும்.

இன்னுமொரு விடயம்- நீர் விடுதியில் உள்ள ஆண் நண்பர்களுடன் இயல்பாகப் பழக முடியவில்லை என்று குறிப்பிட்டதை வைத்துப் பார்க்கும்போது சிலவேளைகளில் நீர் ஆண் உருவத்தில் பெண் தன்மை உள்ள திருநங்கையாக கூட இருக்கமுடியும். ஏனெனில் இந்தமாதிரியான இயல்புள்ள ஆண் பிள்ளைகள் ஆண் நண்பர்களுடன் பழகுவதில் சில சங்கடங்களை எதிர்கொள்ளும் அதேவேளை பெண் பிள்ளைகளுடன் அதிக அன்னியோன்யமாக நல்ல நட்புடன் பழகுவார்கள். நீர் அப்படியான ஒரு திருநங்கையாகக் கூட இருக்கலாம். எதற்கும் நேரடியான சிறந்த உளஆலோசனையைப் பெற்றுக் கொள்வது இன்னும் நல்லது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here