குமுழமுனையில் எஞ்சியிருக்கும் குதிர்

©தமிழ்பக்கம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளையை அண்டிய காட்டோரகிராமம் குமுழமுனை. காடு, வயல், குளம் என்று இயற்கையோடு இணைந்த அசல் வன்னிக்கிராம வாழ்க்கை மிச்சமுள்ள கிராமங்களில் ஒன்று.
வேளாண்மை செய்து, கால்நடைகள் வளர்த்து, அவற்றின் வருவாயிலேயே உணவுத்தேவையையும் பூர்த்தி செய்து, எஞ்சியவற்றை விற்பனை செய்து சேமிப்பாக்கி வாழும் வன்னியின் முகத்தை இன்றும் குமுழமுனையில் காணலாம். வன்னி வாழ்வின் அடையாளங்களில் ஒன்றுதான் குதிர். நெல்லை சேமிக்கும் மண் களஞ்சியசாலை.

நெல்லை சேமிக்க பண்டைய மக்கள் கண்டறிந்த அற்புத களஞ்சிய அறையே குதிர். உலகெங்கும் பல்வேறு இனமக்களும் விதவிதமான குதிரை பயன்படுத்தியுள்ளனர். குதிருக்குள் சேமிக்கப்படும் நெல் பழுதடையாமல், பூச்சிகள் அரிக்காமல் பேணப்படுகிறது. தமிழர்களின் வாழ்வியல் மாற்றமடைய மற்றைய இடங்கள் அதை கைவிட்டபோதும், வன்னியில் இன்றும் ஆங்காங்கே குதிர்கள் உள்ளன. நெல் உற்பத்தி அதிகமுள்ள, வன்னி வாழ்வியல் அகலாத கிராமங்களில் இன்றும் குதிர் ஆங்காங்கு உள்ளது. குதிர்கள் உள்ள முக்கிய இடங்களில் குமுழமுனையும் ஒன்று.

குமுழமுனையில் குதிரை வேறுவிதமாக அழைக்கிறார்கள். கொம்பறை என்பதே அங்கு பழக்கத்தில் உள்ள சொல். குமுழமுனை குடிகளில் பெரும்பாலானவர்கள் வயல் விதைப்பவர்கள். மிக அண்மைக்காலம்வரை பெரும்பாலானவர்கள் கொம்பறையிலேயே நெல்லை சேமித்துள்ளனர். அந்த பழக்கம் கைவிட்டு சென்றுகொண்டிருந்தாலும், இன்றும் சிலர் கொம்பறையில் நெல்லை சேமிக்கிறார்கள்.

வன்னி இராணுவத்தின் பிடியில் வரும்வரை கொம்பறைப் பாவனை பரவலாக இருந்துள்ளது. இராணுவ நடவடிக்கையால் கொம்பறைகள் அழிக்கப்பட்டு விட்டன. மீள்குடியேற்றத்தின் பின் அவசரகதியில் குமிழமுனை கொம்பறைகள் அமைக்கப்பட்டதாகவும், முறையான கொம்பறைகளாக அவை இல்லாததால் விரைவாக அழிவடைகிறதாக அங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்.

கூடி வாழ்ந்து… கூடிப் பயிர் செய்து… கூடி உண்ட கூட்டுவாழ்க்கை நமது பண்டைய வாழ்க்கைமுறை. இப்போதுபோல அரசுகள் நிவாரணம் வழங்கியதில்லை. நுண்கடன் நிறுவனங்கள் லோன் கொடுத்ததில்லை. பென்சன் வழங்கிய இராச்சியங்கள் கிடையாது. அனைத்தையும் மக்கள் தாமே கவனித்து கொண்டனர். இப்போது போலல்லாமல் அப்போது உலகம் மிகமிக விஸ்தீரணமானது. ஒவ்வொரு கிராமமும், இராச்சியமும் ஒரு பேரண்டம்தான்.

தேவைகளை எப்படி கையாள்வதென்ற அனுபவம் குதிரை கண்டறிந்தது. ஆரம்பத்தில் கிராமமே சேர்ந்து ஒன்று அல்லது சில குதிர்களில் நெல்லை சேமித்து, தேவைக்கேற்ற பகிர்ந்தெடுத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அப்படி சேமிக்கப்பட்ட பெரிய குதிர்களின் எச்சங்கள் கண்டறியப்படவில்லை. நாகரிக மாற்றத்தில் குடும்ப அலகு வலுவடைந்தபின் கூட்டுக்குடும்பங்கள் நீடித்தவரையும் பலகுடும்பங்கள் ஒன்றாக நெல்லை சேமித்த வாழ்வியல்முறை குமுழமுனையிலும் நீடித்துள்ளது. அறுபது, எழுபது ஆண்டுகளின் முன்னரும் அப்படியான வாழ்க்கைமுறையின் எச்சமிருந்ததாக சில பெரியவர்கள் சொன்னார்கள். எனினும், அந்தச்சமயத்தில் வீட்டுக்குவீடு சேமிப்பிடங்கள் உருவாகிவிட்டது.

ஆசிரியர் மனோரஞ்சன்

“முப்பது வருசத்துக்கு முந்தி கொம்பறையில்லாத வீட்டையே குமிழமுனையில் பார்க்க முடியாது. இப்ப எல்லாருடைய வாழ்க்கையும் மாறுது. வீட்டுக்குவீடு சேமிச்சதுபோய், கவர்மெண்டிட்ட மொத்தமாக விற்க, அவங்க நெல் களஞ்சியசாலையில சேமிக்கிறாங்க“ என்றார் சின்னத்தம்பி என்ற பெரியவர்.

வாழ்க்கைமுறை மாற்றம் குமிழமுனையில் கொம்பறைகள் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. குமழமுனைக்கு அயல்கிராமமான முள்ளியவளையும் ஒருகாலத்தில் விவசாயத்திற்கு பெயர்போன இடம். அங்கு இப்போது கொம்பறைகள் கிடையாது.

முள்ளியவளையிலுள்ள ஆசிரியர் மனோரஞ்சன் கொம்பறை தொடர்பான சில தகவல்களை சொன்னார்.

“மக்களின் வாழ்க்கைமுறை மாறிவிட்டது. நெல்லை சேமித்து வாழ வேண்டிய தேவையில்லை. எல்லோரும் வங்கியில் பணம் சேமிக்கிறார்கள். அவசரத்திற்கு கடன் பெற வசதிகள் உள்ளன. கூட்டுகுடும்ப வாழ்க்கையில்லை. அறுவடை செய்யும் நெல்லை மொத்தமாக விற்றுவிடுவார்கள். வீட்டுத் தேவைக்காக கொஞ்ச நெல்லை மட்டும் வைத்துக் கொள்கிறார்கள். அவற்றை சேமிக்க கொம்பறையை விட வேறுவழிகளை கையாள்கிறார்கள்“ என்றார்.

முன்னரைபோல பெருமெடுப்பில் வேளாண்மை செய்பவர்கள் இல்லாமை, நவீன களஞ்சிய வசதிகள் உள்ளமை, விளைச்சலை உடனுக்குடன் விற்கும் வாய்ப்பு, போக்குவரத்து வசதிகள் அதிகரித்ததால் கொம்பறை அருகியதற்கு காரணங்கள்.
அவர் சொன்ன இன்னொரு சுவாரஸ்ய தகவல்- கொம்பறையின் வளர்ச்சியடைந்த வடிவம்தான் இன்றைய நவீன நெல் களஞ்சியசாலைகள்!

எனினும், சீமெந்து களஞ்சியசாலைகளில் சேமிக்கும் நெல்லைவிட, கொம்பறையில் நெல் சேமிப்பது ஆரோக்கியமானதென்கிறார்.

“எனது நினைவுப்படி 1985 வரை கொம்பறை பல இடத்தில் இருந்தது. எங்கள் வீட்டிலேயே இருந்தது. ஆனால் பெரும்பாலும் எல்லோரும் பயன்படுத்தினார்கள் என்றில்லை. கொம்பறைக்கு கீழே தேங்காயை சேமிப்பார்கள். சில கொம்பறைகள் வெளிப்பக்கமாக பூசுவார்கள். சில உட்பக்க பூச்சுள்ளவை. வீடு மெழுகும் நாட்களில் கொம்பறையையும் மாட்டு சாணத்தினால் மெழுகிவிடுவார்கள் பெண்கள். சாணகம் இயற்கையான கிருமிநாசினி. நெல்லை பாதிக்கும் கறையானோ, பூச்சிகளோ, வேறு கிருமிகளோ உட்செல்லாது. நெல் ஆபத்தின்றி நீண்டகாலத்திற்கு சேமிக்கப்பட்டது. சோழர் காலத்தில் கோவில்களில் நெல்லை பாதுகாத்தார்கள். அந்த வழக்கம் மருவி, வீடுகளில் நெல்லை சேமித்தார்கள். இப்பொழுது அது நெற் களஞ்சியசாலைகளிற்கு போய்விட்டது.

சில வருடத்தின் முன் பிரதேசசெயலகத்தினால் நடத்தப்பட்ட பாரம்பரிய பொருட்களின் கண்காட்சியில் கொம்பறையின் மாதிரியையும் காட்சிக்கு வைத்திருந்தார்கள்.

குதிர் பாசறையென போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தகவல்கள் சங்கப்பாடல்களில் உள்ளது. நமது பாரம்பரியம் அது. ஆனால் இப்போது காண்பது அரிதாகிவிட்டது“ என்றார் ஆசிரியர் மனோரஞ்சன்.

இன்றைய தலைமுறையில் பெரும்பாலானவர்கள் கொம்பறையை அறிந்திருக்கமாட்டார்கள். நேரில் கண்டவர்கள் வெகு சிலர்தான். கொம்பறை வாழ்க்கைக்கு திரும்ப வேண்டுமென கூறுவதெல்லாம் அதீதமான கருத்துக்கள். ஆனாலும், தமிழர்களின் பாரம்பரியங்களை சேமிக்கும் கலைக்கூடம் போன்றவற்றிலாவது கொம்பறை போன்றவை சேமிக்கப்பட வேண்டும். நமது பாரம்பரிய வழித்தடத்தை இன்றைய இளைஞர்கள் சுலபமாக அறிய அது வழிசெய்யும்.


இதுதான் கொம்பறை

கொம்பறையின் அமைப்பு வட்டவடிவமாக அகன்ற உருளை வடிவில் இருக்கும். உயரமான கப்பு நட்டு, ஒரு அடி அல்லது வசதிக்கேற்ற உயரத்தில் தட்டு அமைத்து, வட்டவடிவ சுவர் அமைக்கின்றனர். இதற்கு பயன்படுத்துவது மண் மற்றும் காட்டுத்தடிகள். தடிகளை குறுக்காக அடுக்கி தட்டு அமைக்கிறார்கள். பக்கவாட்டு உருளைச்சுவரும் அப்படித்தான். காட்டுதடிகளை வளைத்து, ஒருவகை கொடியான வெப்பிள்கொடியினால் நெருக்கமாக வரிவார்கள். பின்னர் அதனை செம்களிமண்ணால் பூசி, மண்சுவர் போன்ற அமைப்பாக்குவார்கள். அதற்குமேல் மாட்டு சாணகத்தை கரைத்து மெழுகுவார்கள். தட்டு பிரிக்கப்பட்ட கீழ் பகுதிக்குள் பழைய பொருட்கள் எதையாவது போட்டு சேமிப்பார்கள். மேல் பகுதி ஓலையால் வேயப்பட்டிருக்கும். சுவரில் முக்கோண வடிவில் சிறிய பாதை வைப்பார்கள். உள்ளே போய் நெல் வைத்து அல்லது எடுத்துவிட்டு வர. அது மூடப்பட்டே இருக்கும். சில கொம்பறைகளில், கூரையை தூக்கி வைத்துவிட்டு நெல்லை வைப்பார்கள். தேவையான நேரத்தில் கூரையை தூக்கிவைத்துவிட்டு நெல்லை எடுக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும்.

உலகெங்கும் விதவிதமான அமைப்புக்களில் குதிர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடிப்பகுதி சரிவான குதிர்களில், வாசல் திறக்கப்பட்டதும் சேமிக்கப்படும் தானியம் வெளியில் கொட்டுப்படும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here