கொழும்பில் இராணுவ புலனாய்வு அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்ட கதை தெரியுமா?

நேற்று திருகோணமலையில் சுட்டுக்கொல்லப்பட்ட வர்த்தகர், விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவுடன் சேர்ந்து இயங்கி, இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரியான லெப்.கேணல் துவான் றிஸ்லி மீடினை கொலை செய்ய உதவினார் என்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் ஆவார்.

திருகோணமலை- சிறிமாபுர  சந்தியில் நேற்றுக்காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

தனது வீட்டின் முன்பாக, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரஊர்தியில் அமர்ந்திருந்த தெல் குமார என அழைக்கப்படும், ஹெந்தவிதாரண செலின் குமார என்ற இந்த வணிகரை, கார் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத மூவர் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிச் சென்றனர்.

கொல்லப்பட்ட தெல் குமார, 2005 ஒக்ரோபர் 20ஆம் திகதி கொழும்பு கிரிபத்கொடவில், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியான துவான் றிஸ்லி மீடின், சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபராவார்.

மேற்படி கொலையுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்பட்ட, ஐஸ் மஞ்சுவுடன் தெல்குமார மிக நெருக்கமானவர்.

ஐஸ் மஞ்சு, விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள், வெடிபொருட்களை கொழும்புக்கு கடத்திச் செல்வதற்கு உதவினார் என்றும் குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.

2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் ஐஸ் மஞ்சு காணாமல் போயிருந்தார். இந்த நிலையில் அவரது நண்பரான தெல் குமார நேற்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

லெப்.கேணல் துவான் றிஸ்லி மீடின் எப்படி கொல்லப்பட்டார் தெரியுமா?

கொழும்பு பகுதி புலனாய்வு நடவடிக்கைகளிற்கு பொறுப்பாக இருந்த லெப்.கேணல் துவான் றிஸ்லி மீடின் விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையுடன் ஐஸ் மஞ்சு நேரடியாக தொடர்புபட்டிருந்தார்.

லெப்.கேணல் துவான் றிஸ்லி மீடின் விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவுடன் நெருக்கமான உறவை வைத்திருந்தார். இது இராணுவ புலனாய்வு பிரிவிற்கு தெரிந்திருக்கவில்லை. அவருக்கு புலிகள் பெருமளவு பணமும் வழங்கிக் கொண்டிருந்தனர். இதன்மூலம் புலிகளின் கொழும்பு நடவடிக்கைகளிற்கு மறைமுக ஒத்துழைப்பும் வழங்கிக் கொண்டிருந்தார்.

எனினும், பின்னர் வேறு காரணங்களினால் அவரை கொலைசெய்ய புலிகள் முடிவெடுத்தனர். இதற்காக ஐஸ் மஞ்சு பயன்படுத்தப்பட்டார்.
சம்பவ தினத்தில் லெப்.கேணல் துவான் றிஸ்லி மீடினின் வீட்டிற்கு ஐஸ் மஞ்சுவும் (திருகோணமலை லிங்கநகரை சேர்ந்த இவரது உண்மையான பெயர் சமிந்த தர்சன) இன்னொருவரும் சென்று, றிஸ்லி மீடினை காரில் அழைத்து சென்றுள்ளனர். காருக்குள் வைத்தே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

லெப்.கேணல் துவான் றிஸ்லி மீடினிற்கும், விடுதலைப்புலிகளிற்குமிடையிலான நிதி கொடுக்கல் வாங்கல்கள் ஐஸ் மஞ்சு ஊடாகவே நடந்தன. இந்த அறிமுகத்திலேயே ஐஸ் மஞ்சுவுடன், லெப்.கேணல் துவான் றிஸ்லி மீடின் காரில் கிளம்பி சென்றார்.

பின்னர் இது குறித்த விசாரணையை புலனாய்வுதுறையினர் நடத்தியபோது, ஐஸ் மஞ்சுவுடன் காரில் சென்றதை, லெப்.கேணல் துவான் றிஸ்லி மீடினின் மனைவி வெளிப்படுத்தினார். இதன் மூலம் ஐஸ் மஞ்சு கொலையில் சம்பந்தப்பட்டது வெளிப்பட்டது. பின்னர் ஐஸ் மஞ்சு தலைமறைவாகி விட்டார்.

இந்த விசாரணைகளில்ஸ்ரீ லெப்.கேணல் துவான் றிஸ்லி மீடினிற்கு விடுதலைப்புலிகள் பெருமளவு நிதிவழங்கியது அம்பலமானது. அந்த பணங்களை அரசடைமையாக்க புலனாய்வுத்துறையினர் சட்டவழிமுறையில் முயற்சியில் இறங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here