தமிழ்பக்கம்
தரப்படுத்தலிற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டுமென்ற அபிப்பிராயம் இளைஞர்களிடையே வலுவடையத் தொடங்கின. ஏற்கனவே ஈழவிடுதலை இயக்கத்தில் செயற்பட்ட நண்பர்களை இணைத்து ஒரு கூட்டம் நடாத்தப்பட்டது. யாழ் மலாயன் கபேக்கு மேலிருந்த மண்டபத்தில் நடைபெற்றது. சத்தியசீலன், மாவை சேனாதிராஜா, லோரன்ஸ், மகா உத்தமன், சந்திரசேகரம், அரியரட்ணம் (புன்னாலைகட்டுவன்), தேசிய இலங்கை மன்னன், முத்துக்குமார், சந்திரகுமார் (பிரான்ஸ்), சபாலிங்கம், பாலநடராஜ ஐயர் எனப் பலர் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர். மாணவர் பேரவையென்ற பெயரில் அமைப்பு ஒன்று உருவாக்குவதெனத் தீர்மானிக்கப்பட்டு, தரப்படுத்தலுக்கு எதிராகப் போராட்டம் செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.
பாடசாலை நிறைவடையும் நேரங்களில் பாடசாலை வாசலுக்குச் சென்று தரப்படுத்தலுக்கு எதிரான பிரசாரங்களைச் செய்ததோடு எதிர்ப்பு ஊர்வலத்தில் பங்கு கொள்ள கோரிக்கை விடுத்தோம். எமது பிரசாரத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்தது. திட்டமிட்டபடி கொக்குவில் சந்தியிலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகியது. ஏராளம் மாணவர்கள் கலந்து கொண்டனர். முற்றவெளியில் கூட்டம் நடந்தது.
அக்காலகட்டத்தில் மாணவர்களை மிகப்பெரியளவில் ஒன்று திரட்டிய சம்பவம் இது. கூட்டத்தின் முடிவில் அரியரட்ணத்திற்கு பல இளைஞர்கள் இரத்தத் திலகமிட்டார்கள். சிவகுமாரன் என்ற தனிமனிதன் ஆரம்பித்து வைத்த ஆயுதவழிமுறையை இளைஞர்கள் பெருமளவில் ஏற்றுக்கொண்ட நிகழ்வாக இதனைக் கருதலாம்.
இதேகாலத்தில் அரசியல் வன்முறை செயற்பாட்டாளர்கள் இன்னொரு பக்கத்திலும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர் ஞானசுந்தரம் சட்டங்களிலிருந்து தப்பிக்கக் கூடிய வகையில் எவ்வாறு அரசியல் வன்முறைகளைக் கையாள முடியுமென்று இளைஞர்களிற்கு போதித்து வந்தார். சிறிய குற்றங்கள், பெரிய விளைவுகள்தான் அவரது எண்ணக்கரு. உ-ம் குண்டுகளை வைக்காமல் சத்தவெடிகளை வீட்டுக்குள் போட்டாலே போதும், அவர்கள் பயந்துவிடுவார்கள், இது பிடிபட்டாலும் பெரிய குற்றமாகாது.
இக்காலத்தில் பரவலாக வன்முறைகள் ஆரம்பித்தன. மார்டின் வீதியிலிருந்த துரையப்பாவின் அலுவலகத்திற்குக் குண்டு வைத்தோம். ஆனால் அதில் சம்பந்தப்பட்டதாக பிடிபட்டது தமிழரசுக்கட்சியின் பேச்சாளர்.
வன்முறைகள் அதிகரிக்க அதிகரிக்கக் கைதுகளும் அதிகரித்ததால், எமக்கு சட்ட உதவி தேவைப்பட்டது. எங்களில் சிலர் வட்டுக்கோட்டையிலிருந்த அமிர்தலிங்கத்தின் வீட்டிற்குச் சென்று எமக்குச் சட்ட உதவி வழங்கும்படி கோரினோம். அமிர்தலிங்கம் வன்முறைச் செயற்பாட்டினை ஏற்கத் தயங்கிப் பல காரணங்களைக் கூறிக்கொண்டிருந்தார். இதனை வீட்டின் மையப் பகுதியிலிருந்த திரைச்சீலையின் பின்னிருந்து செவிமடுத்துக் கொண்டிருந்த அவரின் மனைவி, “வன்முறைப் பாதையில் அவர்கள் செல்ல விரும்பினால் நீங்கள் ஏன் அதனைத் தடுக்கிறீர்கள்” எனக் கேட்டார். அதன்பின்னர்; அமிர்தலிங்கம் உதவி செய்வதாக வாக்களித்திருந்தார்.
அரசியல் வன்முறைச் செயற்பாடுகள் நாளிற்குநாள் அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில் அரியரட்ணமும் (புன்னாலைக்கட்டுவன்) வேறு சில இளைஞர்களும் கைது செய்யப்பட்டதுடன் சத்தியசீலனை பொலிசார் தீவிரமாக தேடினர். அவர் தலைமறைவாகியிருந்து கொண்டு இளைஞர்களை அரசியல் வன்முறைச் செயற்பாட்டில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.
மட்டக்களப்பில் வைத்து சத்தியசீலன் கைதாகியதைத் தொடர்ந்து காசிஆனந்தன், வண்ணை ஆனந்தன், மாவை சேனானதிராசா உள்ளிட்ட நாற்பத்தியிரண்டு பேர்கள் கைதானார்கள். விசாரணையில் சத்தியசீலன் கொடுத்த பெயர்ப் பட்டியலில் எனது பெயரும் இருப்பதாக சில பொலிஸ் உள்ளக தகவல்கள் தெரிவித்ததை அடுத்து நானும் தலைமறைவானேன். ஆனால் பொலிசார் என்னைத் தீவிரமாகத் தேடவில்லை. மீண்டும் படிப்படியாக வெளியில் நடமாடத் தொடங்கினேன்.
இக்காலகட்டத்தில் தமிழர் ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்கான முனைப்புகளில் வல்வெட்டித்துறை ஞானமூர்த்தி ஐயா உள்ளிட்ட பலர் ஈடுபட்டிருந்தனர். தமிழ் காங்கிரசிற்கு அதில் முழுமையான சம்மதமிருக்கவில்லை. தமிழரசுக்கட்சியின் தீவிர செயற்பாட்டாளர் வடிவேற்கரசனின் தம்பி பேபி போன்றவர்கள் ஒரு திட்டம் தீட்டினர். கொழும்பு செட்டித்தெருவில் உள்ள வீட்டிற்கு சிவசிதம்பரம் ஐயாவை அழைத்தார்கள். இயக்கங்கள் ஐக்கியத்தை விரும்புகின்றன எனக் கூறி, இயக்கங்களின் சார்பில் என்னை அறிமுகப்படுத்தினார். அதன்பின்தான் தமிழ் காங்கிரஸ் ஐக்கிய முன்னணியில் இணைவதற்குத் தனது சம்மதத்தைத் தெரிவித்தது. அன்றைய கூட்டத்தில் வல்வெட்டித்துறை ஞானமூர்த்தி ஐயாவும் கலந்துகொண்டிருந்தார்.
இக்காலகட்டத்தில் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அமைப்பிலிருந்து பிரிந்து முத்துகுமார், வரதராஜப்பெருமாள், புஸ்பராசா, பிரான்சிஸ் (கி.பி.அரவிந்தன்), சந்திரமோகன், அன்னிலிங்கம், மண்டூர் மகேந்திரன், பத்மநாபா, புஸ்பராணி ஆகியோர் இணைந்து தமிழீழ விடுதலை இயக்கத்தை (இன்றைய ரெலோ அமைப்பு அல்ல) ஆரம்பித்தார்கள். நான், பாலகுமார் ஆகியோரும் அவர்களுடன் இணைந்து செயற்பட்டோம்.
பின்னர் முத்துகுமார், வரதராஜப்பெருமாள், புஸ்பராசா போன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நான், சந்திரமோகன், தங்கமகேந்திரன், ஜெயக்கொடி, புஸ்பராணி ஆகியோர் அந்த அமைப்பை செயற்படுத்தினோம்.
எமது செலவிற்கு பணமிருக்கவில்லை. பெரிய வர்த்தகர்களிடம் சென்று பண உதவி செய்யுமாறு கெஞ்சிக் கேட்டோம். பெரியளவில் உதவி கிடைக்கவில்லை. புலோலி கிராமிய வங்கியில் முகாமையாளராக பாலகுமாரன் இருந்தார். பழைய வாகனமொன்றை கடத்தி அதன் சாரதியை டிக்கியில் கட்டிப் போட்டு, புலோலிக்கு சென்றோம். அடகுவைக்கப்பட்ட நகைகளை பாலகுமாரனின் அனுசரணையுடன் கொள்ளையடித்தோம். நகையுடன் அந்த வாகனத்தில் அதியுச்ச வேகத்தில் யாழ்ப்பாணத்திற்கு பறந்தோம்.
அந்த வேகத்தை வாகனம் தாங்க முடியாமல் இடைவழியில் இயந்திரகோளாறாகி நின்றுவிட்டது. வீதியிலேயே வாகனத்தைக் கைவிட்டு ஆளுக்கொரு திசையாகத் தப்பியோடினோம். நகைகள் உருக்கப்பட்டு புஸ்பராணி, கல்யாணி ஆகியோரின் உதவியுடன் கொழும்பிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, கொழும்பில் விற்கப்பட்டது. எங்களிற் பலர் நீர்கொழும்பில் தலைமறைவாகி இருந்தோம். எனினும், எம்மையே பின்தொடர்ந்த பொலிசார் குறுகிய கால இடைவேளையில் இதில் சம்பந்தப்பட்ட எல்லோரையும் கைது செய்தனர்.
நாம் எல்லோரும் கோட்டை கிங்ஸ் ஹவுசில் வைக்கப்பட்ட நிலையில் புஸ்பராணி, தங்கமகேந்திரன், ஜெயக்கொடி ஆகியோர் பொலிசாரினால் மிகமோசமாகத் தாக்கப்பட்டனர். சத்தியசீலன் கைதானதைத் தொடர்ந்து தடுப்புக் காவலிற்குச் சென்றவர்களுடன் நாங்களும் மகசின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டோம்.
1977 தேர்தலின் முன்னர் அவசரகாலநிலைமை நீக்கப்பட்டதை தொடர்ந்து, நாம் எல்லோரும் படிப்படியாக விடுதலையானோம். தடுப்புக் காவலில் வைப்பதற்கு முன்னர் கொழும்பில் கணக்கியல் துறையில் படித்துக் கொண்டிருந்ததனால் விடுதலையின் பின் அதனைத் தொடர்ந்தேன். இக் காலகட்டத்தில் பத்மநாபா லண்டன் சென்றார்.
ஏழெட்டு மாதங்களின் பின் ஒருநாள் நான் கொழும்பில் தங்கியிருந்த அறைக் கதவை யாரோ தட்டினார்கள். திறந்து பார்க்க, பத்மநாபா நின்றார். ஈழ மாணவர்கள் அமைப்பு (Eelam Unions of Students) என்ற அமைப்பொன்றில் தான் இலண்டனில் இணைந்துள்ளதாகவும், அவ்வமைப்பின் செற்பாடுகளை விஸ்தரிப்பதற்கு வந்துள்ளதாகவும் கூறினார்.
1977இல் பாரிய சூறாவளி கிழக்கு மாகாணத்தைத் தாக்கியது. அதில் மோசமாகப் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பிற்கு பத்மநாபா, நித்தியானந்தன்(பிரான்ஸ்), நான் மூவரும் சென்றிருந்தோம். பத்மநாபா ஒருவருடம் வரை அங்கே தங்கியிருந்து பாதிக்கப்பட்ட மக்களிற்காகப் பணியாற்றினார். இன்றும் ஈரோஸ் அமைப்பிற்கு மட்டக்களப்பில் இருக்கும் ஆதரவுத்தளம், பத்மநாபா அன்று போட்ட விதைதான்.
அதன்பின் நான் கல்வி, தொழில் எனத் தனிப்பட்ட வாழ்வில் கவனம் செலுத்தினேன். அமைப்புகளின் செயற்பாட்டாளனாக அல்லாமல் அவர்களுடனான தொடர்புகளைப் பேணி வந்தேன். 1987 இந்திய இலங்கை உடன்படிக்கை வரை நான் தீவிர இயக்க செயற்பாட்டாளராக இருக்கவில்லை.
கொழும்பில் என்னுடன் மிக நெருக்கமாக இருந்தவர்களுள் ஒருவர் ஒப்ரோய் தேவன். அவரும் நானும் ஒரே அறையில் இருந்தோம். அவர் அப்போது ஒப்ரோய் ஹோட்டலில் பணியாற்றிக் கொண்டிருந்தார். வன்முறை அரசியற் செயற்பாடுகளில் தீவிர நாட்டங் கொண்டிருந்தார். ஒருநாள் கொழும்பில் பாதாளக்கோஷ்டியுடன் தொடர்புடையவர்களிடமிருந்து பணத்திற்கு பிஸ்டலொன்றை வாங்கி வந்து அறைக்குள் வைத்துப் பரிசோதித்திருக்கின்றார். வீட்டு உரிமையாளர் கதவு ஓட்டைகளினூடே இதனை அவதானித்து பொலிசிற்கு அறிவித்துவிட்டார். பொலிஸ் வரும்போது தேவன் வேலைக்குச் சென்று விட்டார். நான் மட்டுமே அறையிலிருந்தேன். தேவனின் பெட்டிகளை அவரது அனுமதியின்றித் திறக்க முடியாதெனப் பொலிசாரிற்கு நான் கூறியதனையடுத்து அவர்கள் மீண்டும் வருவதாகக் கூறிச் சென்றுவிட்டனர். தேவனிற்கு உடனடியாகவே தகவல் கொடுக்கப்பட்டு பிஸ்டல் அறையிலிருந்து அகற்றப்பட்டது..
அக்காலகட்டத்தில் கொழும்பில் எனது அறை நண்பராக இருந்தவர் ராம் ராஜகாரியர் (பின்னர் வடக்கு கிழக்குமாகாணசபையின் அவைத்தலைவராக இருந்தவர்). அறையை விடும்படி வீட்டுக்காரர் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், எங்கு போவதெனத் தெரியாமல் திண்டாடியபோது, றோயல் கல்லூரியில் தன்னுடன் படித்த ஒரு நண்பர் இருக்கிறார். அவர்களின் வீட்டில் தங்கலாம் என ராம் கூறினார்.
அப்படித்தான் கே.சி.நித்தியானந்தாவின் (டக்ளஸ் தேவானந்தாவின் சிறியதந்தை) வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அந்த வீட்டில் தங்குவதற்கு எனக்கும் ஒரு இடம் ஒதுக்கித்தரப்பட்டது. அதிலிருந்துதான் டக்ளஸ் தேவானந்தா குடும்பத்துடனான எனது உறவு ஆரம்பித்தது. அதுதான் காலப்போக்கில் அரசியல் உறவாக மாறியது.
நித்தியானந்தா அப்போது பனை அபிவிருத்திச்சபையின் தலைவராக இருந்தார். அவரது செயலாளராக டக்ளஸ் இருந்தார்.
(தொடரும்)