‘உன்னை நினைத்து’ படத்தை போன்ற உண்மை சம்பவம்: காதலிக்கும் பெண்கள் மட்டும் குற்றமற்றவர்களா?


தமிழகத்தில் கல்லூரி மாணவி அஸ்வினி கொலையில் புதிய திருப்பமாக பல தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘உன்னை நினைத்து’ படம் போல் சில சம்பவங்கள் நடந்துள்ளன. தனக்கே என்று நினைத்த பெண் மனம் மாறி ஒதுங்கியதும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற முடிவோடு வந்துள்ளார் இளைஞர்.

இன்று சென்னையையே உலுக்கிய கல்லூரி மாணவி கொலை அனைவரையும் பதை பதைக்க வைத்தது. கொடூரமாக நடந்த இக்கொலையைச் செய்த இளைஞர் பொதுமக்களால் கடுமையாக தாக்கப்பட்டு மயக்கமடைந்தார். ஆரம்பத்தில் ஒருதலைக்காதல் என்பது போல் கூறப்பட்டாலும் போலீஸ் தரப்பில் விசாரித்தபோது பல தகவல்கள் கிடைத்தன.

‘உன்னை நினைத்து’ படம் சூர்யா நடிப்பில் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்தது நினைவிருக்கலாம். அதில் நாயகி லைலாவுக்காக சூர்யா கடுமையாக உழைத்து உதவி செய்வார். படிப்பதற்கும் உதவுவார். நாயகி இதனால் சூர்யாவை விரும்புவார். அவரது பெற்றோரும் சூர்யாவின் நல்ல குணத்தைப் பார்த்து ஏற்றுக்கொள்வார்கள்.

இதனிடையே வேறொரு நல்ல வரன் வந்தவுடன் சூர்யாவை சுத்தமாக ஒதுக்கிவிடுவார்கள். அதன் பின்னர் சூர்யா வாழ்ந்து காட்டுவார். அந்த நாயகிக்கே பின்னாளில் உதவுவார். இது நல்ல பண்பைக் கற்றுக்கொடுத்த படம், ஆனால் நிஜ வாழ்க்கை கோபம், ஆவேசம், சுற்றுப்புற சூழ்நிலை கற்றுத்தரும் குணாம்சத்தோடு வளரும் இளைஞர் கதாநாயகன் போல் இருக்க வாய்ப்பில்லை என்பதைத்தான் இன்று நடந்த கொலை நிரூபித்துள்ளது.

கொலை செய்த இளைஞர் அழகேசனும், கொலை செய்யப்பட்ட அஸ்வினியும் சிறு வயது முதலே நன்கு அறிந்தவர்கள். படிப்பு சரியாக வராததால், கிடைத்த வேலையைப் பார்த்த அழகேசன், தண்ணீர் கேன் போடுவது, மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக பணியாற்றுவது என்று கடுமையாக உழைத்துப் பணம் சேர்த்துள்ளார்.

தந்தையில்லாமல் வறுமையில் வாடிய அஸ்வினிக்கு கல்விச் செலவுக்கும் உதவியுள்ளதாக கூறப்படுகிறது. நன்றாக படிக்கும் படி அஸ்வினியிடம் கூறிய அழகேசன் அவர் கல்லூரி படிப்புக்கும் லட்சக்கணக்கில் பணம் கட்டியுள்ளார். இது அஸ்வினியின் தாய்க்கும் தெரிந்தே நடந்துள்ளது.

இவர்கள் இருவர் காதலும் அஸ்வினியின் உறவினர்களுக்கு தெரிய வர அவர்கள் அஸ்வினியின் தாயிடம் காதலை கண்டித்துள்ளனர். அஸ்வினியிடமும் நமது தகுதிக்கு இப்படிப்பட்ட நபரை நீ விரும்பலாமா? என்று கூறி மனதை மாற்றியுள்ளனர்.

இதை அறிந்த அழகேசன் அஸ்வினியிடம் கேட்க அவர் அழகேசனை தவிர்த்துள்ளார். இதையடுத்து அஸ்வினியிடமும், அவரது அம்மாவிடமும் அழகேசன் தகராறு செய்ய அஸ்வினியின் பெரியப்பா சம்பத் தலையிட்டு கடந்த பிப்ரவரி 16-ம் தேதி அன்று மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அங்கு போலீஸார் அழகேசனை எச்சரித்து, ‘விருப்பம் இல்லாத பெண்ணை தொந்தரவு செய்யாதே உனக்கு பெண்ணா கிடைக்க மாட்டாள்? இனி அஸ்வினி வாழ்க்கையில் குறுக்கிடாதே’ என்று எச்சரித்து, அஸ்வினியிடமும் புகார் வாங்கியுள்ளனர்.

அஸ்வினி தனது புகார் மனுவில் தானும் அழகேசனும் காதலித்ததாகவும் தற்போது அதற்கு அவர் தகுதி இல்லாதவர் என்று தெரிந்து ஒதுங்கியதால் தொல்லை கொடுப்பதாகவும் இனி அவர் என் வாழ்க்கையில் குறுக்கிடக் கூடாது என்று எழுதிக் கொடுத்துள்ளார். அதன் பின்னர் போலீஸுக்கு பயந்து சிறிது நாட்கள் சும்மா இருந்துள்ளார் அழகேசன்.

ஆனாலும், அழகேசனால் அஸ்வினியை மறக்க முடியவில்லை. அஸ்வினி தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைத்து குமுறிய அவர் தனக்கு கிடைக்காத அஸ்வினி யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்துடன் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று கத்தியுடன் கல்லூரிக்கு வந்துள்ளார்.

அஸ்வினி வந்தவுடன் தயாராகக் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டு அஸ்வினியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ‘நீயில்லாமல் என்னால் வாழ முடியாது’ என்று கூறியுள்ளார். அஸ்வினி மறுத்து உன்னை மறந்துவிட்டேன் என்று கூறியவுடன் ஆத்திரத்தில் கத்தியால் சரமாரியாக குத்தி தன் பழியைத் தீர்த்துக்கொண்டுள்ளார்.

கொன்ற பின்னர் தானும் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று மண்ணெண்ணெயை ஊற்றி வந்த அழகேசனை பொதுமக்கள் பிடித்து அடித்ததில் தன்னை கொளுத்திக்கொள்ள முடியாமல் போனது. ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று கூறப்பட்டாலும் அஸ்வினியை கொன்றதில் அழகேசனுக்கு மட்டுமல்ல இந்த விவகாரத்தை சரியாக கையாளாத அனைவருக்கும் பங்கு உண்டு என்றே கூற வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here