40 இலட்சம் பணத்திற்காக நடந்த கொலை… புலிகளின் தலையில் விழுந்த பழி: சிவராம் கொலை 12

©பீஷ்மர்

சிவராம் கொலை தொடர்பான இந்த மினி தொடரில், கடந்த வாரம் புளொட் மோகன் குறித்த சில தகவல்களை குறிப்பிட்டிருந்தோம். புளொட் என்ற அடைமொழி மோகனுடன் ஒட்டியிருந்தாலும் மோகனிற்கும் புளொட்டிற்குமான உறவு 1989களிலேயே இல்லாமல் போய்விட்டது என்பதை குறிப்பிட்டிருந்தோம். உறவு இல்லாமல் போனது மட்டுமல்ல, புளொட்டுடன் முறுகி, மாணிக்கதாசனின் கொலைப்பட்டியலிலும் மோகன் இருந்தார். பின்னர் எப்படியோ, அந்த முரண்பாடு இல்லாமல் போய்விட்டது.

கடந்த பாகத்தில்- தமிழ் தேசிய இராணுவம் என்ற இந்திய இராணுவத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பின் இராணுவ தளபதியான காளித்தின் மரணம் தொடர்பான சில தகவல்களை தெரிவித்திருந்தோம்.

தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்துடன் போராட வந்த பலர், உள்ளக மோதல்களால் எதிரிகளாகி, எதிர் எதிர் முகாம்களாகி, அதனாலேயே எதிரிகளுடன் கைகோர்த்த துயரமான சம்பவங்கள் எல்லாம் நடந்தன. பொது தமிழ் மனநிலையில், இராணுவத்துடன் கைகோர்த்தவர்களையெல்லாம் சகட்டு மேனிக்கு துரோகி என்பார்கள். ஆனால், இந்த விடயம் ஆழமான பார்வைக்குரியது.

இந்த தொடரை எழுதுவதற்காக, தமிழ் தேசிய இராணுவத்தின் முக்கியஸ்தர்கள் பலரை- நீண்டகால போராளிகள்- சந்தித்து பேசியபோது, துயரமான உண்மையொன்று வெளிப்பட்டது. விடுதலையென்ற குறிக்கோளுடன் அனைத்தையும் அர்ப்பணித்து களமிறங்கிய தம்மை, திடீரென அரங்கை விட்டு துரோகி முத்திரை குத்தி அகற்ற முயன்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்றார். வாழ்க்கை, எதிர்காலம் அனைத்தையும் துறந்து போராட்டத்திற்காக தம்மை முழுதாக ஒப்படைத்த நிலையில், திடீரென “நீயெல்லாம் துரோகி. களத்தை விட்டு வெளியேறு“ என்பது ஆகப்பெரிய ஏமாற்றமும், நம்பிக்கை துரோகமும் என்றார். இப்படியான நிலைமையில் இராணுவத்தின் பாதுகாப்பை பெற்றது எந்த வகையில் தவறு என பதில் கேள்வியெழுப்பினார்?

பதிலில்லாத கேள்வி. மௌனமாகவே கடந்து வந்தேன். அப்படியே செல்வோம்.

சரி, இப்பொழுது விடயத்திற்கு வருவோம்.

இந்திய படைகள் இலங்கையில் நிலைகொண்டிருந்த சமயத்தில், அவர்களுடன் மூன்று தமிழ் இயக்கங்கள் இணைந்து செயற்பட்டன. ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.என்.டி.எல்.எவ் என்பன அவை. புளொட் அமைப்பில் இருந்து பரந்தன் ராஜன் தலைமையிலானவர்கள் பிரிந்து ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பை உருவாக்கியிருந்தனர். அதன் இராணுவ தளபதியாக காளித் இருந்தார். காளித் மட்டக்களப்பை சேர்ந்தவர். தமிழ் மாணவர் பேரவையுடன் சேர்ந்து இயங்கி, பின்னர் புளொட்டில் இணைந்தவர். அப்போது பாலஸ்தீனத்திற்கு சென்று இராணுவப் பயிற்சி பெற்றார்.

தமிழ் தேசிய இராணுவம் என்பது இந்திய இராணுவத்தின் கூலிப்படையென அப்போது மக்களிடம் அப்பிராயம் இருந்தது. அதற்கு காரணமும் இருந்தது. இந்தியா அவர்களிற்கு மாதாந்தம் சம்பளம் வழங்கியது. அதுதவிர இன்னொரு காரணமும் உள்ளது.

ஆற்றில் கல் விழுந்தால், ஆழத்திற்கு மூழ்கி செல்வதை போல, புலிகளுடனான முரண்பாட்டில் எதிர்முனைக்கு சென்ற இயக்கங்கள் ஒரு கட்டத்தில், நிலை மறந்து கூலிப்படைகளாக செயற்படுமளவிற்கு சென்றனர். தமிழ் தேசிய இராணுவம் என்பதே அந்த செயற்பாடுதான். எனினும், இந்திய படைகளின் வெளியேற்றத்துடன், இயக்கங்கள் ஓரளவு சுயவிமர்சனத்துடன் பழைய தவறுகளிலிருந்து மீள தொடங்கியிருந்தார்கள். அது புலிகளிற்கும் தெரியும். இரண்டு தரப்பும், இணங்கி… இணைந்த பல விசயங்களை செய்தார்கள். ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் என மூன்று இயக்கங்களுடனும் புலிகளிற்கு புலனாய்வு ரீதியான தொடர்பு ஏற்பட்டிருந்தது. 1995இன் பின்னர் அது மிக நெருக்கமாக இருந்தது. இதுதான் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பாக மாறியது.

1990இல் இந்தியப் படைகள் வெளியேறியபோது, தமிழ் தேசிய இராணுவம் “அம்போ“ என விடப்பட்டது. வரதராஜ பெருமாள் போன்ற முக்கியஸ்தர்களை இந்தியா பாதுகாப்பாக அழைத்து சென்றது. பலர் படகுகளில் தப்பி சென்றனர். பலர் இலங்கையிலேயே நின்றனர். அடுத்து என்ன செய்வதென தெரியாமல்.

இந்தியப்படைகள் வெளியேறியதும், தமிழ் தேசிய இராணுவம் என்ன செய்வதென தெரியாமல் திண்டாடியது. காளித் போன்ற முக்கியஸ்தர்களே தடுமாறினார்கள். தமிழ் தேசிய இராணுவத்தை ஒருங்கிணைத்து, புலிகளிற்கு எதிராக போராடும்படி இந்திய தளபதிகள் கூறியிருந்தனர். காளித்திற்கும் அதில் உடன்பாடிருந்தது. ஆனால் காளித் தனித்து போயிருந்தார். அவருடன் துணைக்கு இரண்டு பேர் மட்டுமே இருந்தார்கள். ஒருவர் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஐ சேர்ந்தவர். மற்றவர், தமிழ் தேசிய இராணுவத்தில் நேரடியாக இணைந்தவர்.

தமிழ் தேசிய இராணுவத்தில் இருந்த மூன்று இயக்கங்களிற்குமான 40 இலட்சம் பணம், கொஞ்சம் ஆயுதங்கள் காளத்திடம் இருந்தது. மட்டக்களப்பின் காட்டிற்குள் காளித் மறைந்திருந்தார். துணைக்கு நம்பிக்கையானவர்கள் இல்லாமல், புலிகளுடன் எப்படி போராடுவது? தொடர்ந்து மட்டக்களப்பில் தங்கியிருக்க முடியாது, கொழும்பிற்கு தப்பிச் செல்ல வேண்டும். எப்படி தப்பிப்பது?

அனைத்திற்கும் தீர்வாக, புளொட் மோகன் அவரிற்கு தெரிந்தார்.

காளித்தும் இரண்டு உதவியாளர்களும் மட்டக்களப்பில் இருந்து தப்பித்து, கொழும்பிற்கு வருவதற்கு வாகன ஏற்பாடு செய்து கொண்டு வருவதாக மோகன் சொன்னார்.

சொன்னபடியே வாகனத்துடன் மோகன் சென்றார். கொழும்பிற்கு சென்று, சிலகாலம் தங்கியிருந்து, சரியான ஆளணியை திரட்டி, அதன்பின் வடக்கு கிழக்கில் களமிறங்கலாம் என்றார். காளித்தும் சம்மதித்தார்.

வாகனம் கொழும்பை நோக்கி சென்றது. காளித்திடம் பணமிருப்பது மோகனிற்கு தெரியும். வாகனத்தை காட்டுபக்கமாக செலுத்தி, காளித் மற்றும் இரண்டு உதவியாளர்களையும் மோகன் அணி சுட்டுக் கொன்றது. 40 இலட்சம் பணத்துடன் அவர்கள் கொழும்பிற்கு சென்றார்கள்.

இந்த தொடரின் முந்தைய பாகத்தை படிக்க : புளொட் சிக்கிய கதை: சிவராம் மினி தொடர் 11

அந்த கொலை விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்டது.

பெரும்பாலானவர்கள் இன்றுவரை காளித்தை கொன்றது விடுதலைப்புலிகள் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

(தொடரும்)

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here