மட்டக்களப்பில் சமுர்த்தியால் பயனடைவது பயனாளிகளா? உத்தியோகத்தர்களா?

தமிழ் பக்கத்தின் விசேட புலனாய்வு தொடர்- 01

அதிக வறுமையான மாவட்ட பட்டியலில் கிழக்கு மாகாணத்தில் முதலிடம்… தேசியரீதியில் மூன்றாமிடம்- இது மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்மறை சாதனைகள்.

மட்டக்களப்பின் வறுமைக்கு என்ன காரணம்? வறுமைக்கு எதிராக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுத்ததே இல்லையா? வறுமை தணிப்பு, வறுமையிலிருந்து மக்களையும், நாட்டையும் மீட்டெடுத்தல் என்ற தொனிப்பொருளில் அரசாங்கம் உருவாக்கிய சமுர்த்தி திட்டம் வெற்றியளிக்கவில்லையா?

இந்த கேள்விகளிற்கான விடை எப்படி அமைந்தாலும், மாவட்டத்தின் நிலைமையில் மாற்றம் இருக்காது. ஏனெனில், இலங்கையில் அதிகம் ஊழல் நடந்த மாவட்டங்களில் ஒன்றாக மட்டக்களப்பும் இருக்குமென்றே தோன்றுகிறது. முறையான, வெளிப்படையான விசாரணை நடத்தால் இன்னும் அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைக்கலாம்.

மட்டக்களப்பில் நடந்த சமுர்த்தி மோசடி தொடர்பான விபரங்களை இந்தவாரம் வெளியிடவுள்ளோம். மக்களின் வறுமையை போக்க உருவாக்கப்பட்ட சமுர்த்தி திட்டத்தில், அதை நடைமுறைப்படுத்தும் அரச உத்தியோகத்தர்களே மோசடி செய்தால், எப்படி மாவட்டத்தை வறுமையிலிருந்து மீட்டெடுக்க முடியும்? எப்படி சமுர்த்தி திட்டம் வெற்றியடையும்?
விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, சுற்றுலா, தொழில்துறை என எல்லா வாய்ப்புக்களும் இருந்தும் ஏன் மட்டக்களப்பு தொடர்ந்தும் வறுமையின் பிடியில் இருக்கிறது?

மட்டக்களப்பில் சமுர்த்தி திட்டம் வெற்றியளித்ததா என ஆராய புறப்பட்ட எமக்கு, அதிர்ச்சியளிக்கும் அட்சய பாத்திரம் போல கையில் கிடைத்துள்ளது, மட்டக்களப்பில் நடந்த சமுர்த்தி முறைகேடுகள். கேட்டாலே தலைசுற்றும் மெகா ஊழல் அது. சமுர்த்தி திட்ட நடைமுறைகளில் தொடங்கி, அதன் கீழ்மட்டத்தில் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் வரை அனைவரையும் மக்களின் முன் வெளிச்சமிடவுள்ளோம். மக்களின் வறுமை நிவாரணத்தில் விளையாடிய எந்த அரச உத்தியோகத்தரையும் தாராதரம் பாராது, பெயர் விபரங்களுடன் இதில் அம்பலப்படுத்தவுள்ளோம்.

மாவட்டத்தில் சமுர்த்தி நன்மைகளை நேரடியாக நிவாரணமாக பெறுபவர்கள் 79,000 குடும்பங்கள். சமுர்த்தி வங்கிகளின் மூலம் அங்கத்தவர்களாக இயங்கும் நிலையில் உள்ளவர்கள் 25,000 இற்கும் உட்பட்ட குடும்பங்களே. மொத்தமாக 94,000 வரையான குடும்பங்களே, வறுமை தணிப்பு மற்றும் வறுமை குறைப்பு திட்டத்தில் பத்து வருடங்களிற்கு மேலாக நன்மை பெற்று வருகிறார்கள்.

மாவட்டத்தின் பதின்னான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில், 345 கிராமசேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாக, 29 சமுர்த்தி வங்கிகள் செயற்பட்டு வருகின்றன. முகாமையாளர், பணியாளர்கள் என 590 உத்தியோகத்தர்கள் கடமையாற்றுகிறார்கள். சமுர்த்தி வங்கி, மகா சங்கங்களில் பணியாற்றுபவர்களிற்கான சம்பளம், பிரயாண கொடுப்பனவுகள் என்பன 2009 முதல், சமுர்த்தி வங்கிகளினால்- ஏழை மக்களின் வைப்புக்களிலிருந்தே ஒதுக்கம் செய்யப்படுகிறது.

வறுமை, போசாக்கு, கல்வி, மந்த போசனை போன்றவற்றில் மட்டக்களப்பு பின்தங்கியுள்ளதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. எனினும், இந்த பட்டியல்படுத்தல் சரியானதா என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனெனில் மாவட்டத்தின் ஆறு இலட்சம் சனத்தொகையில், அண்ணளவாக 94,000 குடும்பங்கள் சமுர்த்தி உதவி பெறுபவர்கள். இவர்களின் வாழ்வாதாரம், கடன் வசதிகளுக்காக 2014 – 2017 ஆம் ஆண்டு வரை 353 மில்லியனுக்கும் அதிகமான தொகை செலவு செய்யப்பட்டதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இந்த நிதி, பயனாளிகளை சரியான முறையில் சென்றடைந்தால், மட்டக்களப்பு மோசமான பட்டியலில் இடம்பெற வாய்ப்பில்லை. பட்டியல் கணிப்பீட்டில் ஏதோ சிக்கல் என்று அர்த்தம். இல்லை, கணிப்பீடு சரியென்றால்- அந்த நிதி மக்களை சரியாக சென்றடையவில்லையென்று பொருள்.

மாவட்டத்தில் அதிக குடும்பங்கள் சமுர்த்தி பயனாளிகளாக உள்ள நிலையிலும், சமுர்த்தி தேசிய வேலைத்திட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டம் பல சாதனைகளையும், விருதுகளையும் பெற்றுள்ளது. தேசிய ரீதியில் புகைத்தல் எதிர்ப்பு தினத்திற்காக 5, 10 ரூபாக்களிற்காக விற்பனை செய்யப்படும் கொடியின் மூலம், வருடம் ஒன்றிற்கு 14,675,000 ரூபாவை ஈட்டும் நிலையில்… சமுர்த்தி வங்கி கணக்குகளின் சித்திரை புத்தாண்டு சேமிப்பு ஊக்குவிப்பு திட்டத்தில் 43,000 கணக்குகளின் பெயரில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 29 சமுர்த்தி வங்கிகளின் மூலமும் 2017 இல் சேமிக்கப்பட்ட தொகை 104,042,067 ரூபா. இந்த பட்டியலில் தேசியரீதியில் மட்டக்களப்பு முன்னணியில் உள்ளது. வறுமையில் முன்னணியில் உள்ள மாவட்டம், இந்த பட்டியலிலும் எப்படி முன்னணியில் இருக்க முடியும் என்பது தர்க்கபூர்வமான கேள்வி.

மட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள்

இதேவேளை, இன்னொரு கேள்வியும் உள்ளது. சமுர்த்தி பயனாளிகளிடமிருந்து இவ்வளவு வருமானமீட்டக் கூடிய நிலைமையிருந்தும், ஏன் மாவட்டம் தொடர்ந்தும் வறுமையில் முதலிடத்தில் உள்ளது?

இதேவேளை, சமுர்த்தி உதவிகளால் மக்கள் சரியாக பயனடைந்துள்ளார்களா என்ற கேள்விக்கும் சரியான பதில் கிடையாது. உதவிகள் முழுமையாக மக்களை சென்றடைந்ததா, நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் உண்மையிலேயே மக்களின் வேண்டுகோளினால்தான் தெரிவு செய்யப்பட்டதா என்றால்- இல்லையென்றுதான் கூற வேண்டும்.

கணக்காய்வு திணைக்களம், மாவட்ட அரசஅதிபர், பிரதேச அபிவிருத்திக்குழு தலைவர்களாக உள்ள அரசியல்வாதிகள் என பல தரப்பினர் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவி திட்டங்கள் தொடர்பில் மக்களுடன் பேசியபோது, எமக்கு கிடைத்தவையெல்லாம் அதிர்ச்சி செய்திகளே. பயனாளிக்கு உண்மையில் தேவையான பொருள் வழங்கப்படாவிட்டால், அது கிடைக்காத உதவியென்றும் வகைப்படுத்தலாம். ஒரு வீட்டில், மூன்று வருடங்களின் முன்னர் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிப்பொருட்கள், இன்னும் பெட்டியிலேயே உள்ளன.

2014 – 2017 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட 353 மில்லியனுக்கும் அதிக பணம் என்பது, சமுர்த்தி திணைக்களத்தினால் செலவு செய்யப்பட்டதுதான். ஆனால் தனியே சமுர்த்தி பயனாளிகளிற்கு மட்டும் இந்த பணம் செல்லவில்லை. பயனாளிகளின் பெயரில், சமுர்த்தி உத்தியோகத்தர்களாலும் சுருட்டப்பட்டுள்ளது. (இது தமிழ் பக்கத்தின் விசேட புலனாய்வு செய்தி) இதற்கான முழுமையான ஆதாரம் தமிழ் பக்கத்திடம் உள்ளது. மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேசங்களிலுமுள்ள மோசடி சமுர்த்தி உத்தியோகத்தர்களையும், அவர்களின் மோசடி பண பெறுமதியுடன் இந்த தொடரில் வெளிப்படுத்தவுள்ளோம். அடுத்த வாரத்தில் இருந்து அந்த தகவல்கள் வெளியாகும்.

மாவட்டத்திலுள்ள 29 சமுர்த்தி வங்கிகளும், பயனாளிகளின் பெயரில் சமுர்த்தி வங்கிகளில் உள்ள வைப்பு பணத்தை, ஏனைய அரச வங்கிகளில் நிலையான வைப்பாக முதலீடு செய்துள்ளன. இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவற்றில் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலையான வைப்பு தொகையாக உள்ள பணம்- 18,004,600,000 ரூபா!

வணிக வங்கிகளில் இவ்வளவு பெரிய தொகையை நிலையான வைப்பாக சமுர்த்தி வங்கி முதலிட்டுள்ள நிலையில், அந்த பணத்தின் ஒரு பகுதியை உண்மையான தேவையுள்ள மக்களிற்கு கடனாக வழங்கலாம். தன்னிடமுள்ள பணத்தில் 80 வீதம்வரை பயனாளிகளிற்கு கடன் வழங்கலாமென்ற நடைமுறையை கூட சமுர்த்தி வங்கிகள் கொண்டிருக்கின்றன. மக்களின் பணத்தை வணிக வங்கிகளிடம் ஒப்படைக்காமல், அவர்களிற்கே கடனாக வழங்கினால், அதிக வட்டி வசூலிக்கும் நுண் கடன் நிறுவனங்களை மக்கள் நாட மாட்டார்கள். நுண் கடன் நிறுவனங்களிடம் கடன் வாங்கிவிட்டு, அதை அடைக்க முடியாமல் தற்கொலை வரை செல்வதும், மாவட்டத்திலுள்ள இதே ஏழை மக்கள்தானே.
மட்டக்களப்பிலுள்ள 29 சமுர்த்தி வங்கிகளும் இதுவரையும் 31,800 பயனாளிகளே கடன்பெற்றுள்ளனர். இவர்களால் திருப்பி செலுத்தப்படவுள்ள தொகை 632,635,007 ரூபா. இதைவிட, மக்கள் பணத்தை பல்வேறு தரப்பினரும் –சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக- மோசடி செய்து, திரும்ப அறவிட முடியாத தொகையாக உள்ளது 20,936,000 ரூபா.

சித்திரை புத்தாண்டு சேமிப்பு ஊக்குவிப்பு திட்டத்தில் பயனாளிகளை இணைத்துக் கொள்ளும் விதம் பற்றியும் சமுர்த்தி அதிகாரிகள் மீள்பரிசீலனை செய்துகொள்ள வேண்டும். சித்திரை சேமிப்பு திட்டத்திற்கு பணம் சேகரிப்பதற்காக, கடந்த வருடம் டிசம்பர் மாதத்தின் பின் எந்த பயனாளிக்கும் கடன் வழங்கப்படவில்லை. ஜனவரி மாதத்தில் இருந்து முத்திரையும் வழங்கப்படுவதில்லை. ஏப்ரல் முதல் வாரத்தில் கடன் வழங்கி, அப்போது குறிப்பிட்ட தொகையை அறவிட்டு சேமிப்பில் இடுகிறார்கள்.

சித்திரை சேமிப்பு திட்டத்தில் அதிக பணத்தை சேமித்ததாக காண்பிக்க, டிசம்பரில் இருந்து பயனாளிகளிற்கு கடன் வழங்குவது நிறுத்தப்பட வேண்டுமா? டிசம்பர் தொடக்கம் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் அவசர (இது தமிழ் பக்கத்தின் விசேட புலனாய்வு செய்தி) தேவையுடையவர்கள் நுண் கடன் நிறுவனங்களையா நாடுவது?
சமுர்த்தி திட்டத்தால் பயனடைந்தவர் என மற்றைய மாவட்டங்களில் உதாரணம் காட்ட பயனாளிகள் உள்ளனர். ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி அதிகாரிகளால் அப்படியொருவரை அடையாளம் காட்ட முடியவில்லை.

ஆக மொத்தத்தில்- சமுர்த்தி திட்டத்தால் மக்கள் பயனடைந்தார்களா, சமுர்த்தி உத்தியோகத்தர்களும், அதிகாரிகளும் பயனடைந்தார்களா என்று கேள்வியெழுப்பினால், தலையை சொறிவதை தவிர வேறு வழியில்லை. ஏனென்றால், அடுத்தடுத்த வாரங்களில் நாம் வெளிப்படுத்தவுள்ள தகவல்களும், ஆதாரங்களும் அதிர்ச்சியை மட்டுமல்ல, மட்டக்களப்பு சமுர்த்தி செயற்திட்டத்தின் பலவீனத்தையும் வெளிப்படுத்தும்.

(உண்மை வெளிக்கும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here